பண்னைச்செங்கான்- சிறுகதை குறிப்பு
எழுத்தாளர்: கு.ப. ராஜகோபாலன்
காலம்: 1934
எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:
கு.ப. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) தமிழ் எழுத்தாளர். தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதியுள்ளார். மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆண் பெண் உறவை மையமாக்கிய கதைகளை சொற்சிக்கனத்துடனும் வடிவ ஒருமையுடனும் எழுதியவர் என விமர்சகர்களால் கருதப்படுகிறார்.
சிறுகதை சுட்டி:
https://archive.org/details/orr-11609_Pannaich-Chengaan
பிற விமர்சனங்கள்:
நந்தி இலக்கிய வட்டம் குறிப்பு:
மகேந்திரன்: நிலத்துடன் செங்கானின் உறவு என்பது நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. அதனை கடவுளாகப் பார்ப்பது. அவள் ஒரு பெண், லட்சுமி என நினைப்பது. “நம்ம காட்டு லச்சுமி என்னோடே பேசுவாளே!” நாம் ஒன்று செய்தால் பதிலுக்கு அவள் நமக்கு திருப்பிச் செய்வாள் என நம்புவது. கடவுளை தன் நண்பனைப் போல பார்ப்பது, அதற்கான சேவைகள் செய்வது. “ரவைக்கு ரவெ தாவத்துக்குத் தண்ணி கொடுக்கறாப்பேலே தண்ணீ கட்டுவான்?” இது தமிழக பக்தி மரபின் வளர்ச்சிப் போக்குடன் இணைந்து பார்க்கத்தக்க கோணம்.
நில உரிமையாளருக்கு நிலம் என்பது வெறும் நிலம் மட்டுமே. அதனுடன் எந்த உறவும் இல்லை. சொல்லப்போனால் நவீன மனதுக்கு அப்படி ஒரு உறவு என்பது எதனுடனும் இல்லை. இவர் கொஞ்சம் வேறுபட்ட ஆள் எனத் தெரிகிறது. ஒன்றை வேண்டாம் என மறுப்பது ரொம்ப கஷ்டமான காரியமாக இருக்கிறது. “புது மனிதன்கூட ஒரே நிமிஷத்தில் என் தலைமேல் ஏறிவிடுவான்.” அவரைப் பற்றிய அவரது எண்ணமே அதனை நன்றாக பிரதிபலிக்கிறது. செங்கான் பாவம் பிழைத்தால் பிழைத்துக்கொள்ளட்டுமே என நினைக்கிறார். ஆனால் அந்த ஊர் ஆள் ஒருவனின் தொல்லை தாங்க முடியாமல் மாற்றலாம் என்ற எண்ணத்துக்கு வருகிறார். உண்மையிலேயே மாற்ற வேண்டுமென்ற எண்ணம் இல்லாதவர், இந்த ஆளின் புடுங்கலால் முயற்சித்துப் பார்த்தார். செங்கானின் உறுதியைப் பார்த்த பின்பு, தனக்கு பெரிய இழப்பு இல்லை எனத் தெரிந்து, செங்கானே இருக்கட்டும் என முடிவுகட்டுகிறார்.
இதனை நான் பார்க்கும் விதம் என்பது ஒரு தயக்க சுபாவமுடைய ஒருவன் இந்த சூழ்நிலையில் எப்படி தவிக்கிறான். ஒன்றை மாற்ற வேண்டிய அளவு தைரியம் இல்லாமல் அப்படியே விட்டுவிடுகிறான் என மட்டுமே தெரிகிறது. அவனது தவிப்பு தெரிகிறது. செங்கானின் உண்மையான உணர்வை உணர்ந்தானா என்பது கேள்வி. செத்துப் போய்விடுவேன் எனச் சொன்ன அந்த தீவிரம். “மூணாம் வருசம் மளெ இல்லாதப்பக்கூட பயிரேத்திப்பிட்டேனே! இந்த வயக்காட்லே ஒளச்சேதான் நான் சாவணும் சாமி! இதெ வுட்டா நான் செத்துப் போவேன்” சரி எதற்கு இந்த ரோதனை என விட்டுவிட்டதாய் தெரிகிறது. மனிதனின் இந்த இலகுவான மனம் கடினமான சூழ்நிலையில் எப்படி தள்ளாடுகிறது எனப் பார்க்கலாம்.
சரத் : தலைமுறையாக நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர் செங்கான். 80 வயதிலும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். வருடத்திற்கு ஒரு முறை வந்து குத்தகை பணம் வாங்கி செல்லும் நில உரிமையாளரிடம் அவ்வூரை சார்ந்தவர், குத்தகை தொகை ஊரில் இரட்டிப்பு ஆகிவிட்டதையும், இன்னும் அதே கூலி கொடுத்து செங்கான் அவரை ஏமாற்றுவதாகவும் சொல்கிறார். அவரே அதிக தொகைக்கு வேறு ஆளை ஏற்பாடு செய்தும் வைக்கிறார். இந்த தகவலை செங்கானிடம் எப்படி செல்வது என்று தயங்குபவர், செங்கானின் பேச்சினை கேட்டதும், நிலத்தினை இன்னொருவருக்கு கொடுக்கும் முடிவினை மாற்றிக் கொள்கிறார்.
பணத்தினை அவ்வளவு முக்கியமாக கருதாத ஆளாக இருந்தும் ஊர்க் காரரின் நிர்பந்தித்தினாலும், ஊருடன் குத்தகை தொகையில் வேறுபாடு காட்ட வேண்டாம் என்றும் செங்கானிடமிருந்து அவரது நில உரிமையாளர் புதிய நபருக்கு நிலத்தை அளிக்க முடிவு செய்கிறார்.
செங்கான் மூன்று தலைமுறையாக அந்த நிலத்தில் உழைப்பவர். ஒவ்வொரு மரத்திலும், வரப்பிலும், நிலத்திலும், மரத்திலும் பல நினைவுகளை சுமந்து கொண்டு இருக்கிறார்.
அந்த நிலத்தில் வேலை செய்வதையே உயிராக கருதுபவர். நிலம் வேறு ஒருவருக்கு கொடுக்க துணிந்து விட்டதை நினைத்து, இந்த நிலம் இன்னொருவருக்கு விளைவாளா? என்று சாபம் போல் கேட்கிறார். நான் உயிரையே விட்டுவிடுவேன் என்கிறார்.
பட்டணத்து வாசியான நில உடமையாளருக்கு, இந்நிலத்தினை பற்றி எதையுமே அறியாதவருக்கு, செங்கானுக்கும் நிலத்திற்குமான அன்னியோன்னியத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
செங்கான் இறுதியில் உரிமையாகவே கேட்கிறார். அரை கலம் அல்லது ஒரு கலம் நான் தான் தின்றால் என்ன? என்று. அதையும் ஏற்றுக் கொள்பவராகவே இருக்கிறார்.
உள்ளூரில் இருந்து கொண்டு நிலத்தை நம்பி கணக்கிட்டு பிழைப்பவர்களை போல் செயல்பட அவரது இயல்பான மனதின் கருணை தடுக்கிறது.
இறுதியில் ஊர்க்காரரின் வற்புறுத்தலால் போடப்பட்ட புதிய குத்தகை ஒப்பந்தத்தை வேண்டாம் என்று சொல்வதுடன் கதை முடிகிறது.
இக்கதையில் நகர மயமாதலின் விளைவாக நிலத்துடன் அந்நியப்பட்டுவிட்ட நில உடமையாளன் நிலத்துடன் பிணைக்கப்பட்ட வாழ்வினை கொண்ட செங்கானை அறிந்து கொள்வதே கதையாக இருந்தாலும், அனைத்தும் கதையில் சொல்லப்பட்டு விட்டதாகவே இருக்கிறது. தனித்துவமான முக்கியத்துவம் வாய்ந்த கதையாக தோன்றவில்லை.

கருத்துகள்
கருத்துரையிடுக