ஆற்றாமை - சிறுகதை குறிப்பு
எழுத்தாளர்: கு.ப. ராஜகோபாலன்
காலம்: 1943
எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:
கு.ப. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) தமிழ் எழுத்தாளர். தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதியுள்ளார். மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆண் பெண் உறவை மையமாக்கிய கதைகளை சொற்சிக்கனத்துடனும் வடிவ ஒருமையுடனும் எழுதியவர் என விமர்சகர்களால் கருதப்படுகிறார்.
சிறுகதை சுட்டி:
https://archive.org/details/orr-11762_Aatramai
பிற விமர்சனங்கள்:
நந்தி இலக்கிய வட்டம் குறிப்பு:
அருண்: ஆற்றாமை சிறுகதை பக்கத்து வீடுகளை சேர்ந்த இரு பெண்களுக்கு இடையில் நடக்கும் நிகழ்ச்சி. கமலாவுக்கு சாவித்ரியின் நிலைமையான அவள் கணவனை பிரிந்து வெகு நாட்களாக தனியாக இருப்பது தெரிந்தும் அவள் தன்னுடைய கணவனுடன் நடக்கும் விஷயங்களையும் தங்கள் அன்யோன்யத்தையும் இவளிடம் காட்டி எரிச்சலூட்ட எண்ணுகிறாள். சாவித்ரிக்கு இரண்டு வருடத்திற்கு முன் நடந்த சாந்தி முகூர்த்தமும் அதன் பிறகு கணவனுடனான பிரிவும் எப்படி அவளை வதைத்து கொண்டு இருக்கிறது என்றும், அவளுக்கு அந்த அனுபவம் இல்லாமல் இருந்திருந்தால் கூட பரவாயில்லை ஆனால் இப்பொழுது அது அவளுக்கு எட்டா கனியை போல் இருக்கிறது. அவள் இளமைக்குரிய அனைத்து வனப்புகளுமடனும் பொங்கி பூரிக்கும் ஒரு சூழலில் அவளால் ஒன்றும் அனுபவிக்க முடியாமல் இருக்கிறாள். அவளுடைய இந்த ஆற்றாமையை இன்னும் பூதாகரமாக ஆக்குகிறாள் கமலா, காரணம் அவளுக்கு அனைத்தும் அமைந்தும் அவள் கணவனுடன் சாவித்ரியின் வீட்டு பக்கத்திலியே குடியும் இருக்கிறாள்.
இந்த கதையில் ஆசிரியர் சாவித்திரி படுத்திருக்கும் விதத்தில் கூட அந்த ஆற்றாமையை காண்பித்து விடுகிறார். கருகிய மொட்டு என்னும் கதையை கமலா கொண்டு வந்து இவளிடம் காட்டி அதன் மூலம் இவளை இன்னும் தூண்டுகிறாள். இவளும் அதற்கு வேறொரு அர்த்தம் சொன்னாலும் கமலா அதற்கு காம ரீதியான ஒரு அர்த்ததை அவளிடம் சொல்கிறாள். இவ்வளவும் தாங்கி கொண்டு வந்த சாவித்ரிக்கு ஒரு சின்ன இடம் கிடைத்ததும் அவள் விளையாடி பார்க்கிறாள். இதில் ஆசிரியர் அவளின் உடல் மொழியை கூட பதிவு செய்திருப்பது அதுவும் எப்படி மெதுவாக “அந்த ரேழி கதவை தட்டுங்கள்” என்று ஜாடை மூலமாக அவளுடைய குரூரத்தை பதிவிட்டு இருக்கிறார். அவள் மனம் இருவருக்குள்ளான காமத்தை கலைத்து விட்டு கமலாவின் சற்று கடினமான நிலையை பார்த்ததும் இப்பொழுது குரூரத்தில் இருந்து கவலையாய் மாறுகிறது. அவள் கவலை தன்னை நினைத்து அவளுக்கே ஏற்படும் ஒரு விதமான அவமான உணர்வாக தான் தெரிகிறது.
மகேந்திரன்: மனித மனங்களின் ஆழங்களைத் தொடும் படைப்பு என இதைச் சொல்லலாம். காமம், குரோதம், மோகம் என நமது மரபு சொல்கிறது. இதில் காமம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. காமம் என்பது எல்லாவற்றையும் விரும்புவது என்ற பொருளில் கொள்ள வேண்டும். அப்படி பார்க்கும்போது, பெண் ஆண் மேல் கொள்ளும் ஆசையும் காமம் என்றாகிறது.
சாவித்திரி தன் மனதை ஒருவாறு அடக்கி வைத்திருந்தாள்தான். ஆனால் “முதல் இரவு” என்ற பெயரில் தன் தேக சுகத்தை கண்டவளுக்கு அதனை அடக்க முடியவில்லை. காமத்தை நினைக்கும் தோறும் அது ஊறும்; அதனை அடக்க நினைக்கும் போது திமிரும். சாவித்திரிக்கு அதுதான் நிகழ்ந்தது.
இதனை பூதாகரப்படுத்தும் வகையில், பக்கத்து வீட்டு இளம் ஜோடிகள் ஒருவருக்கு ஒருவர் அன்னியோன்னியமாக இருக்கிறார்கள். இது அவளது தேக சுகத்தைப் பற்றிய நினைவைக் கிளறிவிடுகிறது. கணவன் எங்கோ கண்காணாத இடத்தில் பட்டாளத்தில் வேலை செய்கிறார். இந்த எரிச்சலைத் தாங்க முடியாமல், தன் அம்மா, வேலைக்காரி, பூக்காரி என எல்லோரிடமும் காட்டுகிறாள் — முக்கியமாக அம்மாவின் மேல். இப்படி ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொடுத்தது அவர்கள்தானே?
போதாக்குறைக்கு, அவர்கள் இருவரும் முற்பகல் நேரங்களிலும் இருட்டும் வேளைகளிலும் கொஞ்சி குழவுகிறார்கள். கமலா கருகிய மொட்டு என்ற புத்தகத்தை கொண்டு வந்து கொடுக்கும் போது, சாவித்திரி தன் ஆற்றாமையை உணர்ந்து, கமலாவிடம் தன் பொறாமையை வெளிப்படுத்துகிறாள்.
கமலாவின் நிலையிலிருந்து கதை சொல்லப்படாததால், அவள் என்ன நினைத்தாள் என அறிய முடியவில்லை. இதைப் போன்ற சந்தர்ப்பங்களில், கையறு நிலையில் இருப்பவர்களை நாம் பொறாமைப்பட வைக்கும் அளவுக்கு நடந்துகொள்கிறோமா? நமக்கு அப்படி ஒரு எண்ணம் உண்மையில் உண்டா? ஒரு காரையோ வீட்டையோ வாங்கும் போது, நம்முடைய எண்ணங்கள் எவ்வாறு இருக்கின்றன? அடுத்தவர்கள் அதனை நினைத்து ஏங்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? அது எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும். அது கமலாவிடம் இல்லை என்று சொல்லுவதற்கில்லை.
சாவித்திரி தன் உணர்ச்சியின் சலனத்துக்கு ஆட்பட்டிருந்த வேளையில், ஒருவன் வந்து கதவைத் தட்டுகிறான். அந்த இளம் ஜோடிகள் தாம்பத்தியத்தில் மூழ்கியிருப்பது தெரிந்து, “அங்கு போய் கேள்” என அவனை அனுப்பிவைக்கிறாள். அது அந்த இருவருக்கும் இடையே ஒரு சிறு விரிசலை உருவாக்கும் செயலாக மாறுகிறது.
இந்த விரிசலைக் கண்ட உடன், அவள் மனம் “போதுமா, பேயே?” எனக் கேட்கிறது. வேட்டை மிருகம் தன் உணவை கிழித்து தின்ற பிறகு அமைதியாக இருப்பதைப் போல, அந்த நிமிடப் பொறாமைக்கான உணவு தீர்ந்து போனது.
மனிதன் முழுக்க முழுக்க இருண்ட பக்கத்தை மனதில் சுமப்பவன் எனச் சொல்வது தவறு. “தான் செய்வது தவறு; இப்படி செய்துவிட்டோமே” என்ற எண்ணம் அவளுக்கு வருகிறது. இதுவும் சாவித்திரிதான்; அதுவும் சாவித்திரிதான்.
மனிதன் தன்னை ஆட்டுவிக்கும் காமத்தால் அடையக்கூடிய குரோதத்தால் பல தவறுகளைச் செய்கிறான். ஆனால் அதிலிருந்து மீண்டு வரும் வழிகளை எப்படி கையாள முடியும்? அப்படி வரும் போதுதான் அவன் ஆன்மீகமான நிலைகளை நோக்கி முன்னேறுகிறான்.
இந்தக் கதையில் இருக்கும் பொறாமை எண்ணம், மனித மனதின் ஆழத்தில் இருந்து வெளிப்பட்ட ஒரு ஊற்று. அதனை அடக்கி வைக்க எத்தனை நாள் முடியும்?

கருத்துகள்
கருத்துரையிடுக