சிறிது வெளிச்சம் - சிறுகதை குறிப்பு

 



எழுத்தாளர்: கு.ப. ராஜகோபாலன்

காலம்: 1943

எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:

            கு.ப. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) தமிழ் எழுத்தாளர். தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதியுள்ளார். மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆண் பெண் உறவை மையமாக்கிய கதைகளை சொற்சிக்கனத்துடனும் வடிவ ஒருமையுடனும் எழுதியவர் என விமர்சகர்களால் கருதப்படுகிறார்.

சிறுகதை சுட்டி: 

            https://archive.org/details/orr-11746_Sirithu-Velicham/mode/2up

பிற விமர்சனங்கள்:

            சொல்வனம்

            வல்லினம்


நந்தி இலக்கிய வட்டம் குறிப்புகள்:

            தமிழ் செல்வி : அரைகுறையான புரட்சியும் தெளிவில்லாத உறவுகளும்

கு.ப. ராஜகோபாலனின் “சிறிது வெளிச்சம்” தமிழ் இலக்கியத்தில் அதிகமாகப் பேசப்படும் சிறுகதைகளில் ஒன்று. கதையின் நடை, மொழியின் மென்மை, மனநிலைகளை எழுதும் திறன் போன்றவை வாசகர்களைக் கவரக்கூடியவை. ஆனால் அந்த அழகான மொழிநடைக்கு உள்ளே சென்று கதையை ஆராய்ந்தால், பல தர்க்கப்பிழைகள், அரைகுறையான உறவுகள், மற்றும் தெளிவில்லாத கருத்துகள் இருப்பது தெரியவருகிறது.

இந்தக் கதையின் மிகப் பெரிய பிரச்சினை பெண் கதாபாத்திரத்தின் உருவாக்கம். கதையில் அவள் முழுக்க அமைதியாகவும், கணவனுக்குக் கீழ்ப்படிந்தவளாகவும் காட்டப்படுகிறாள். அந்தக் கால சமூக மரபுகளுக்குள் வாழும் பெண்ணாக அவளை ஆசிரியர் வடிவமைத்திருக்கிறார். ஆனால் அதே சமயம், வீட்டில் இன்னொரு ஆண் தங்கியிருக்கும் சூழலிலும், அவனுடன் ஒரு வினோதமான மனநெருக்கம் உருவாகும் விதமாகக் கதை நகர்கிறது. இங்கேதான் கதையின் தர்க்கம் உடைந்து விடுகிறது.

ஒரு பக்கம் “மரபு”, “அடக்கம்”, “குடும்ப கட்டுப்பாடு” ஆகியவற்றுக்குள் இருக்கும் பெண். இன்னொரு பக்கம், ஒரே நாளில் மற்றொரு ஆணிடம் உள்ளார்ந்த நெருக்கத்தை உருவாக்கிக் கொள்கிறாள். இது உண்மையான உளவியல் வளர்ச்சியாகத் தெரியவில்லை; கதையை நகர்த்துவதற்காக திடீரென உருவாக்கப்பட்ட உணர்ச்சி போலவே தோன்றுகிறது.

மேலும், அந்தப் பெண்ணின் பின்னணி கூட கதையுடன் பொருந்தாமல் இருக்கிறது. அவளுடைய அப்பா ஒரு வழக்கறிஞர் என்று சொல்லப்படுகிறது. அதாவது கல்வி, சமூக அறிவு, ஒரு அளவுக்குப் புரிதல் உள்ள குடும்பம். ஆனால் அந்தப் பெண்ணுக்குத் தனிப்பட்ட சிந்தனை, கேள்வி, எதிர்ப்பு, அல்லது மனஉறுதி எதுவும் இல்லை. அவள் முழுக்க மற்றவர்களின் பார்வையில் மட்டுமே நகர்கிறாள். இது ஒரு உயிருள்ள பெண் கதாபாத்திரமாக இல்லாமல், “அமைதியான பெண்” என்ற கற்பனை உருவமாகவே தெரிகிறது.

கதையில் வரும் ஆண் கதாபாத்திரமும் பல இடங்களில் செயற்கையாகத் தோன்றுகிறார். ஒரு பெண்ணை பார்த்த உடனேயே அவளைப் பற்றி இவ்வளவு ஆழமான ஈர்ப்பு, அவளின் அமைதியை “ரசித்தல்”, பின்னர் ஒரே நாளில் அவளை “மனநிறைவு அடையச் செய்ய வேண்டும்” போன்ற எண்ணங்கள் — இவை அனைத்தும் இயல்பான மனித உறவாக இல்லாமல், எழுத்தாளரின் கற்பனைத் தள்ளுபடியாகத் தெரிகிறது. குறிப்பாக அவர்களின் உணர்ச்சி நெருக்கம் மெதுவாக வளராமல், திடீரென உருவாகும் உணர்வாக வருகிறது.

இதனால் கதையில் எந்த உறவும் முழுமையாக நம்ப வைக்கவில்லை. காதலா? இரக்கமா? ஆசையா? தனிமையா? கிளர்ச்சியா? — எந்த உணர்வு மையமாக இருக்கிறது என்பதே தெளிவாகத் தெரியவில்லை.

“சிறிது வெளிச்சம்” என்ற தலைப்பே கதையின் மையக் குறியீடாக இருக்க வேண்டியது. ஆனால் கதையை முடித்த பிறகும் அந்த “வெளிச்சம்” என்ன என்பதை வாசகர் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அது காதலா? உடலுணர்ச்சியா? மனஅமைதியா? பெண்ணின் விடுதலையா? அல்லது வெறும் ஒரு நாள் உணர்ச்சியா? கதை இதை தெளிவுபடுத்தாமல் மங்கலாக விட்டுவிடுகிறது. சில கதைகளில் தெளிவின்மை ஒரு பலமாக இருக்கும். ஆனால் இங்கே அது ஆழமல்ல; குழப்பமாகவே உணரப்படுகிறது.

இந்தக் கதையைப் படிக்கும் போது, எழுத்தாளர் சமூக மரபுகளை உடைக்க விரும்பியிருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் அதை முழுமையாகச் செய்யத் தேவையான தைரியம் அவரிடம் இல்லாதது போலவும் தெரிகிறது. ஒரு பக்கம் மரபை விமர்சிக்கிறார்; இன்னொரு பக்கம் அதையே முழுமையாக மீறாமல் கதையை பாதுகாப்பான எல்லைக்குள் வைத்திருக்கிறார். இதனால் கதை முழுமையாக மரபுவாதமும் அல்ல, முழுமையான புதுமை முயற்சியும் அல்ல என்ற நிலைக்கு சென்று விடுகிறது.

அதனால் தான் “சிறிது வெளிச்சம்” ஒரு முழுமையான இலக்கிய அனுபவமாக இல்லாமல், அரைகுறையான முயற்சியாகத் தோன்றுகிறது. நல்ல மொழிநடை இருக்கிறது. சில மனநிலைச் சித்திரிப்புகள் அழகாக இருக்கின்றன. ஆனால் கதையின் மைய உறவு தெளிவாக இல்லாததும், பெண் கதாபாத்திரத்தின் முரண்பாடான வடிவமைப்பும், உணர்ச்சிகளின் திடீர் வளர்ச்சியும், குறியீடுகள் என்ன சொல்ல வருகின்றன என்பது தெளிவாக இல்லாததும் கதையை பல இடங்களில் பலவீனப்படுத்துகின்றன.

முடிவில், “சிறிது வெளிச்சம்” ஒரு நல்ல நடை கொண்ட கதைதான். ஆனால் நல்ல நடை மட்டுமே ஒரு கதையை பெரிய இலக்கியமாக மாற்றாது. கதையின் உள்ளார்ந்த உண்மை, உறவுகளின் நம்பகத்தன்மை, மற்றும் கருத்தின் தெளிவு இல்லாமல் போனால், அந்த வெளிச்சம் வாசகரை சென்றடையாமல் மங்கியே போய்விடுகிறது.

 

           கார்த்திக்: 83 வருடங்களுக்கு முன் வெளிவந்த கதை. இப்போது படிக்கும் சமகால வாசகர்களுக்கு பல விடயங்கள் வழக்கொழிந்து போய்விட்டது தெரியும். பெண் வாசகர்கள் இதென்ன அசட்டுத்தனம் என்று அந்தப் பெண் மேல் கோபப்படவும் வாய்ப்புண்டு.ஆனால் நாம் 2026இல் நின்று கொண்டு 1943க்கு முந்தைய மனநிலையை மதிப்பீடு செய்ய முடியாது.அந்த வாழ்க்கையை இப்போது நம் கண் முன்னால் நாம் எவ்வளவு தூரம் நகர்ந்து வந்துவிட்டோம் என்று ஒப்பீடு செய்து கொள்ள உதவும் கதை.

நான் உயிரோடு இருக்கும்வரை யாரிடமும் சொல்லக் கூடாது என்று அவள் சொல்லிவிட்டுச்சென்ற காரணத்தினால் அவள் மரணச்செய்தி வந்த நாளில் ஆனால் கனத்த மனதுடன் எழுதியிருக்க வாய்ப்பில்லை. அந்நாளைய குடும்ப வாழ்க்கையின் அவலத்தை பதிவு செய்யும் கடுமையுடன் எழுதியிருக்க வாய்ப்புண்டு.

பதினைந்து வயதில் திருமணம் ஏதேட்சையாக திரியும் கணவன் மோகம் தீர்ந்ததும் மூர்க்கத்தனமாக மாறி அவளை கையாளுவது போன்ற பல கதைகளை படித்துவிட்ட படங்களில் பார்த்துவிட்ட வாசகர்களுக்கு துலங்கி வர வேண்டிய விஷயம் இன்றைய குடும்ப அமைப்பு. இன்று பெண் பிள்ளைகள் படிக்க சுதந்திரமாக வாழ முடிவெடுக்க பெருவாரியான குடும்பங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றன. காதல் திருமணமோ அல்லது பெற்றோர் பார்த்து வைத்த மணமோ, புகுந்த வீட்டில் வாழ முடியாத நிலையில் பிறந்த வீடு எப்போதும் உனக்காக திறந்தே இருக்கும் என்ற நிலை இப்போது உள்ளது..அதே போல் மனம் விட்டு பேச பகிர்ந்துகொள்ள தேவைப்படும்போது அமர்ந்து பேசி சரி செய்யவும் வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

ஆனால் இந்தக் கதையை எழுதிய அந்நாளில் எழுத்தாளர் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்திருக்க வாய்ப்புண்டு..இவ்வாறு எழுதி எழுதியே இலக்கியத்தில் நிலை நிறுத்தப்பட்ட நூற்றாண்டு சமூகத்தில்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது.

அடுத்த விஷயம் மூன்றாவது மனிதனின் ஆற்றுப்படுத்தல்!

இவ்வாறு ஒரு சூழ்நிலையை புனைவில் உருவாக்கி எழுத்தாளர் அந்த மூன்றாமவன் இடத்தில் தன்னை பொறுத்திக்கொண்டு இக்கதையை எழுதியாக எடுத்துக்கொள்ளலாம்.

சில வருடங்கள் முன்பு “பாரதி” எனும் குறும்படம் வந்து மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பியது. குடும்ப சுமையை சுமந்து கொண்டே வேலைக்கு செல்லும் பெண்ணின் மேல் ஆர்வமில்லாது இயந்திரத்தனமாக இயங்கி உறங்கும் கணவனின் நடவடிக்கையில் ஏற்படும் மாறுதல்களை கண்டு மனம் உடைகிறாள். அவளுக்கான மரியாதையை ஆராதனையை முறுக்கி வைக்கப்பட்ட கூந்தலை அவிழ்த்து காற்றில் பறக்கவிடும் ஓவியனுடன் ஏற்படும் பழக்கம் எல்லா எல்லைகளையும் அவளை உடைக்க செய்கிறது. பாரதி கனவு கண்ட புதுமைப்பெண் இவளில்லை அவன் செய்த வினைக்கு அதே போன்று எதிர்வினை எப்படி சரியாகும் என பல விமர்சனக்குரல்கள் எழுந்தன..ஆனால் பல பெண்கள் மனதிற்குள் அதை ஆமோதிக்கவும் ஆண்கள் அதை சுய பரிசோதனை செய்துகொள்ளவும் இடமளித்தது.

அவ்வாறெனில் இந்த 100 வருடங்களில் ஆண்கள் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தால் வேறு கண்ணோட்டம் கிடைக்கும் எனப் படுகிறது. ஆம் ஆண்கள் மாறியிருக்கிறார்கள் அல்லது மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள் அதற்கான முகாந்திரம் உள்ளதை ஏற்றுக்கொள்கிறார்கள். அவளுக்கான இடத்தை அளிப்பது ஒன்றும் செயற்கரிய தியாகம் அல்ல அது அவள் வாழ்க்கை அவள் உரிமை என நினைக்கும் ஆண்களே அதிகம்.

உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் பெண்களை அரவணைத்து ஆராவதிப்பதுபோல் ஆக்கிரமிக்கும் பல ஆண்கள் அதற்கு இடமளிக்கும் பெண்கள் இருந்தாலும் , இன்று பல சாவித்திரிகளை சௌந்தர்யமாக போதிக்கும் சத்தியவான்களும் உருவாகி வந்து கொண்டே இருக்கும் சமூகம் இங்கிருந்து முன்னோக்கி நகரும் சாத்தியத்தையே இந்தக் கதை வெளிப்படுத்துகிறது எனக்கு.


            குமரகுரு: கு.ப.ராஜகோபாலன் (கு.ப.ரா) எழுதிய 'சிறிது வெளிச்சம்' சிறுகதை, தமிழ் இலக்கியத்தில், குறிப்பாகப் பெண்ணியப் பார்வையில் மற்றும் மனித உறவுகளின் சிக்கலான தன்மையை வெளிப்படுத்துவதில் ஒரு தவிர்க்க இயலாத படைப்பாக கருதப்படுகிறது. 

ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கும் எழுத்தாளர் (கதைசொல்லி), அதே வீட்டில் இருக்கும் உரிமையாளர் கோபாலய்யர் மற்றும் அவரது மனைவி சாவித்திரியின் உறவில் நடக்கும் அதீத வன்முறையை  கவனிக்கிறார். கோபாலய்யர் ஒரு இரவு நேரத்தில் வந்து சாவித்திரியை அடிக்கிறார். எழுத்தாளர்  அதை  போலீசிடம்  கூறி விடுவேன் என்று  மிரட்டுகிறார்  இதனால்  கோபாலய்யர் அடுத்த நாளே  வீட்டை காலி செய்யுமாறு  கூறிவிட்டு  வெளியே சென்று விடுகிறார் . பின்னர் சாவித்திரி  எழுத்தாளர்  அறைக்கு வந்து  அவள் மனதில்  இருந்த  ஆதங்கங்களை வெளிப்படுத்துகிறாள் . எழுத்தாளர்  அவளுக்கு  சில ஆறுதல்  வார்த்தைகளை கூறுகிறார் அறையில்  சிறிது நேரம்  படுத்துக்க  சொல்கிறார். சில நிமிடங்கள் சாவித்திரி அந்த படுக்கையில்  படுத்துவிட்டு  அவரை நாளை  வீட்டை காலி செய்யுங்கள்  என்று கூறிவிட்டு அந்த சில நிமிட ஆறுதல்  அவள்  வாழ்வில்  கிடைத்த  சிறிய வெளிச்சம் போதும்  என்று  நினைக்கிறாள். சில நாட்களில் சாவித்திரி மாரடைப்பால்  இறந்து விடுகிறாள். அங்கிருந்து எழுத்தாளர் நமக்கு  இந்த கதையை  விவரிக்கிறார் .

இந்தக் கதை ஆண்களைப் பற்றியோ அல்லது பெண்களைப் பற்றியோ மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இயல்பையும் பற்றியது. "மிருக இச்சை மிகைப்படும்போது கொஞ்சுவதும், இச்சை ஓய்ந்ததும் முகம் திருப்புவதும்" மனிதர்களுக்கு நிரந்தரத் திருப்தி இல்லை என்பதைக் கூறுகிறது .

சாவித்திரி பாத்திரப்படைப்பு மிகவும் வலிமையானது. அவள் தன் கணவனின் வன்முறையை வெறுத்தாலும், அதுவே அவளுக்கு ஒருவகை "நித்திய சுக" விடுதலையைத் தருவதாகவும், தன் மீது சுமத்தப்படும் அதீத அன்பே ஒரு பிணைப்பு என்றும் உணர்கிறாள். "எந்த அழகும் நிடித்து மனிதனுக்குத் திருப்தி கொடுக்காது" என அவள் கூறுவது, வாழ்க்கையின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது.

கு.ப.ரா-வின் 'சிறிது வெளிச்சம்', கள்ளமற்ற காதலைத் தாண்டி, உறவுகளில் இருக்கும் வன்முறை, அதீத உணர்ச்சி, மற்றும் மனிதர்களின் நிலையற்ற திருப்தி போன்றவற்றை, மிகக் குறைவான சொற்களில் ஆழமாகப் பேசும் ஒரு சிறுகதை ஆகும்.





கருத்துகள்

விருப்பமான பதிவுகள்

கயிற்றரவு - சிறுகதை விமர்சனம்

ஒருநாள்கழிந்தது - சிறுகதை விமர்சனம்

குளத்தங்கரை அரசமரம் - சிறுகதை விமர்சனம்