எழுத்தாளர்: கு.ப. ராஜகோபாலன்
காலம்: 1940-களின் முற்பகுதி (1944-க்கு முன்)
எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:
கு.ப. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) தமிழ் எழுத்தாளர். தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதியுள்ளார். மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆண் பெண் உறவை மையமாக்கிய கதைகளை சொற்சிக்கனத்துடனும் வடிவ ஒருமையுடனும் எழுதியவர் என விமர்சகர்களால் கருதப்படுகிறார்.
சிறுகதை சுட்டி:
https://archive.org/details/orr-11584_Vidiyuma/mode/2up
பிற விமர்சனங்கள்:
வல்லினம்
https://kjashokkumar.blogspot.com/2019/10/blog-post_23.html
நந்தி இலக்கிய வட்டம் குறிப்புகள்:
கார்த்திக் : விடியுமா – விடியலை நோக்கி – விடிந்துவிட்டது..இந்த மூன்று கேள்விக்குறிகளுக்கு இடைப்பட்ட சிறு இரயில் பயணம். மிகச் செறிவான தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தை பிரயோகம்.
ஆனால் எந்த விடியலை நோக்கி? யாருக்கான விடுதலை அந்த விடியல்?
கணவனிடமிருந்து எந்த சுகத்தையும் பெற முடியாதவள் யாருக்காக நோன்பு இருக்கிறாள்.அது வரலக்ஷ்மி நோன்பாக இருந்தால் தன் கணவரின் நீண்ட ஆயிலுக்காக தானே? ஆனால் இரண்டு மாதம் பிரிந்து தங்கி இருக்க வேண்டிய காரணம் என்ன?
தந்தி வந்ததும் ஆளாளுக்கு பதறுகிறார்கள்.ஆனால் இவளிடம் நீண்ட அமைதி குடிக்கொள்கிறது.முகம் முன்பை விட தேஜஸ் அடைகிறது..வெற்றிலை பாக்கு போட்டு உதட்டையும் சிவக்க வைத்துக் கொள்கிறாள்.பின் சடாரென்று ஒரு நிமிடத்தில் ஆள் மன பிரக்ஞை வந்ததுபோல் நிகழ் உலக கவலையை சூடிக்கொள்கிறாள்.
அவள் ஆற்றாமை வெளிப்படும் இடத்தில் தம்பியிடம் ஏதோ சொல்ல எத்தனிக்க சடாரென்று ஒரு இடைவெளி. அதை மௌனத்தை இட்டு நிரப்ப அந்த வரி ” மௌனமாக இருந்தோம் ஆனால் மனசு மட்டும் மௌனமாக இருக்கவில்லை”
இந்த மௌனத்திற்கு பின் ஆயிரம் அர்த்தங்களை வலியை கண்ணீரை சோகத்தை நம்மை நாமே கற்பனை செய்து கொள்ள இடம் விட்டுவிடுகிறார்.
வேறென்ன சோகமிருந்துவிடப்போகிறது. நடுத்தர வர்க்க வறட்டுப் பிடிவாதம், சிடு மூஞ்சித்தனம் அல்லது குழந்தையின்மையின் சமூக அழுத்தம்..ஆனால் இவற்றை மட்டும் வாசகர்கள் ஊகித்து அறிந்து கொள்ள இந்த கதையை எழுத வேண்டிய அவசியம் இல்லை..
இவற்றை மீறிய ஆழ்மன அழுத்தம் அல்லது அந்த விளக்கிற்கு எண்ணெய் தீர்ந்து விடப்போகிறது என்பது முன்பே தெரிந்திருந்தததா?
அதுதான் அந்த உயிர் எதிர்நோக்கி காத்திருந்த விடியலா? ஆனால் அந்த தருணத்தில் அவள் கைப்பிடித்து அருகாமையில் இல்லாததின் பொருள் என்ன!! இந்த விடியலில் கதை தொடங்குவதாக நம் மனதிற்கு பட்டால் இது மிகச் சிறந்த சிறுகதையாகி விடுகிறது..
பி.கு: இதற்கிடையே "விழுப்புரத்தில் சூடிக்கொள்ளும் மல்லிகைப்பூ நம்மை திசை திருப்ப மேற்கொண்ட சினிமாதானமான குறியீடு"
லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்: முதல் வாசிப்பில் ஊரிலிருக்கும் தன் அக்காவின் கணவர் உடல் நலம் குன்றி அபாயகரமான நிலையில் இருப்பதாக தந்தி வர, ஊரிலிருந்து சென்னைக்கு இரவில் அவனும், அவன் அக்காவும் பயணமாகிறார்கள். பிரயாணம் முழுவதும் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்க காலையில் மருத்துவமனை செல்லும் அவர்களுக்கு தேடி வந்தவரின் மரணச்செய்தி கிட்ட, மனம் அலைபாய்தல் ஓய்ந்து அமைதி கொள்வதுடன் கதை முடிகிறது.
ஆனால் அது மேற்பரப்பு மட்டும்தான். அதைக் கடந்தோமெனில் கதையின் அடுக்குகள் புலப்படுகிறது. முதலில் தலைப்பிலிருந்து துவங்குவோம்.
விடியுமா...
விடியல் என்பது என்ன? என்பது முதல் கேள்வி.
இரவின் இருளை ஒளி அகற்றத் துவங்கும் வேளை விடியல் எனப்படுகிறது. இரவாடிகளைத் தவிர அனைத்துயிர்களும் விடியலை எதிர் நோக்குகின்றன.
ஏன்? என்பது இரண்டாவது கேள்வி. விடியல் உயிர்களுக்கு அளிப்பது என்ன? உணவு, பாதுகாப்பு என்பது உடனே நினைவுக்கு வரும் பதில்கள். சற்றே யோசித்தால் இவ்வுலகமே விடியலுக்குப் பின்தான் நமக்கு உருவாகிவருகிறது. இருளில் அனைத்தும் மூழ்கி ஒற்றைப் பரப்பென இருக்கின்றன. அங்கே வண்ண வேறுபாடுகள் இல்லை, உருவங்கள் இல்லையாதலால் மேல், கீழ் இல்லை. ஆழம், மேடு இல்லை. வேண்டிவற்றிற்கும், வேண்டாதவற்றிற்கும், உகந்ததற்கும், உதவாததற்கும், அமுதுக்கும், விஷத்திற்கும் வேறுபாடில்லை. இவை அனைத்துமே விடியலால் நமக்கு உருவாக்கியளிக்கப்படுகின்றன. ஒருவேளை இன்று உறங்கச் செல்லும் நமக்கு நாளை விடியுமா எனும் கேள்வி எழும் எனில் உருவாகும் பதற்றம் வெறும் ஒளி வராதா என்பதற்காக அல்ல, இந்த உலகையே மறைத்திருக்கும் இருள் அகலாதா என்பதாகத்தான் இருக்கும்.
ii. இந்தப் பின்னனியில் கதையை அணுகுகையில் சென்னையிலிருக்கும் தன் 'கணவர் - அபாயம்' எனும் தந்தி கிடைத்ததும் அந்த இரு வார்த்தைகள் சூழலை ஒரு மின்னல் வெட்டுபோல் இவர்களுக்கு காட்டி மறைய உண்மையில் அவர் நிலையென்ன என முழுதாக தெரியாதபடி இருள் கவிந்து மூடிக் கொள்கிறது. இப்போது அவர் நிலைபற்றிய அனைவரின் ஊகங்களும், நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் இருளை இன்னும் செறிவாக்க, காலில் தட்டுப்படும் கயிறை அது கயிறுதானா அல்லது பாம்பா அறிந்து கொள்ளும் வரை நிகழும் ஊசலாட்டமே கதை. இறுதியில் கிடைக்கும் விடை அல்ல, இடையில் நிகழும் ஊசலாட்டமே இக்கதை. தெரிய வேண்டியது கயிறா அல்லது பாம்பா என்பதல்ல. அது எதுவாயினும், என்ன என்பதையறிய இருள் விலகவேண்டும். அதற்கு விடிய வேண்டும்.
இந்த வாசிப்பை ஆதரிக்க கதையில் இதற்கு என்னென்ன நிகழ்வுகள் சுட்டப்டுகின்றன?
1. நேரம் - இரண்டு மாதங்களுக்கு முன்தான் நலமடைந்திருந்த அவரை வீட்டில்விட்டு தன் ஊருக்கு வருகிறாள் குஞ்சம்மாள். மூன்று நாட்களுக்கு முன் கடிதம் கூட வந்தது. எனவே நாம் பார்த்தது கயிறுதான் அதற்குள் அது பாம்பாகிவிடுமா என கதைச்சொல்லி கேட்கிறான்.
2. வைரநகைகளுடன் ரயிலில் ஏறும் பெண் - இங்கே மின்னும் வைரங்களுடன் இவர்கள் பெட்டியுலேறும் பெண், இவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறாள். வைரம் தன் உள்ளொளியால் சிறிது வெளிச்சமளித்து அது கயிறாகத்தான் இருக்க முடியும் என சொல்லி, இருளை போக்க முயல்கிறது. ஆனால் அது தற்காலிக ஒளிதான், விடியலல்ல என உணரும் குஞ்சம்மாளின் மனதை உடனடியாக இருள் நிறைத்து மீண்டும் கயிறை பாம்பாக மாற்றுகிறது.
3. பரஸ்தானம் - இச்சொல், பிரயாணத்தை நல்ல நேரத்தில் துவங்கவேண்டும் என்பதற்காக ரயில் புறப்படும் நேரத்திற்கு முன்பாகவே வீட்டிலிருந்த குறித்த நேரத்தில்கிளம்பி வேறொரு இடத்தில் தங்கும் செயலைக் குறிக்கிறது. இது நம் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களை, நம் சக்திக்குட்பட்ட செயல்களின் மூலம் நமக்கு சாதகமாக மாற்ற முடியுமா எனப் பார்ப்பது. இங்கே சரியான நேரத்தில் துவங்கினால், இப்போது இருளில் பாம்பாக இருந்தாலும் விடிகையில் அது கயிறாகத்தான் கிடந்தாக வேண்டும் எனும் நம்பிக்கைதான் அது.
iii. இவற்றைக் கொண்டு கதையின் அடுத்த அடுக்குக்கு நுழைந்தொமெனில், இருள் என்பது எதிர்மறையாகவும், ஒளி நேர்மறையாகவே இருக்கும் எனும் நம்பிக்கையும் தான் மானுட மனதின் இயல்பா என இக்கதை தேடுகிறதோ எனத் தோன்றுகிறது.
தந்திக்குப் பிறகு கதையின் சம்பவங்கள் அனைத்துமே, இருள்தான் கயிறை, பாம்பு போல் காட்டுகிறது எனும் கருதுகோளுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்களை மட்டுமே முன்வைத்து நகர்கிறது. எனில் அங்கே பாம்புதான் இருக்கிறது என ஆரம்பத்திலேயே மனம் ஆழமாக நம்பத் தொடங்கிவிட்டது. அதை மறுக்கவே இவ்வளவு மனிதற்கள், சடங்குகள், சொற்கள்.
iv. கதையின் இறுதிப்பகுதிக்கு சற்று முன் சுவாரஸ்யமான மூன்றாம் அடுக்கு, இருள் என்பது எதிர்மறையானதுதானா எனும் கேள்வியுடன் வருகிறது. இருள், சோர்வையும், குளுமையையும், அதன்வழி உறக்கத்தையும் கொண்டு வருகிறது. அவர்களுக்கு சற்றே ஓய்வளிக்கிறது. அலைபாயும் மனதுக்கு அமைதியளிக்கிறது. அதுவரை இருளுக்கு எதிராகப் போராடியவர்கள் இப்போது விடியலுக்கு அஞ்சுகிறார்கள். ஏன்? ஏனெனில் இருளில் மனம் எதிர்மறையை முன்னிருத்தினாலும் நேர்மறை நம்பிக்கைக்கான சாத்தியத்தையும் கொண்டுள்ளது. கீழே கிடப்பது பாம்புதான் என்பதற்கு இணையாகவே கயிறும் இருக்கலாம் எனும் சாத்தியத்தியமிருக்கிறது. விடியல் அல்லது ஒளியில் ஒன்றுதான் சாத்தியம். அங்கே கற்பனைகளுக்கு இடமில்லை. காண்பதை மனம் ஏற்றாக வேண்டும்.
கல்பட்டா நாராயணனின் உறுதியான நிலமல்லவா பயங்கரம் எனும் கவிதை நியாபகம் வருகிறது. ஆம், ஒளி உறுதியானதுதான். ஆனால் அதில் மோதும் தலை உடைந்தாக வேண்டும். மாறாக இருள் நெகிழ்வானது, குப்புறவிழினும், சற்றே விலகி தன்னுள் நம்மை எடுத்துக் கொண்டு அரவணைப்பதது.
v. தொகுத்துக் கொள்கையில், இருளிலிருந்து, ஒளிக்கு செல்ல விரையும் இருவர், எதிர்மறைத் தன்மையே இருளெனக் கொண்டு அதை சீர் செய்ய ஒளியின் துணையை வழிநெடுகிலும் நாடுகிறார்கள். இறுதியில் ஒளி முழுதாய் இருளை வெல்லப் போகும் நிலையில் இருளின் அரவணைப்பை உணர்ந்து உண்மையில் இருளா அல்லது ஒளியா நம்மை ஆற்றுப்படுத்துவது எனும் கேள்விக்குள் நுழைகிறார்கள். இக்கேள்விகளுக்கு முன்னே பதற்றத்தை துவங்கிய நிகழ்வு பொருளற்றதாய் மாறி அவர்களை விட்டு வெகுதூரம் சென்றுவிடுவதால், முடிவு வெறும் உணர்ச்சிகளற்ற காட்சியாய் மாறி கதை முடிகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக