மதினிமார்களின் கதை - சிறுகதை குறிப்பு - கோணங்கி
மதினிமார்களின் கதை 8- டிசம்பர் அன்று குழுமத்தில் வாசிக்கப்பட்டது. அதன் மகேந்திரனின் வாசக குறிப்பு.
ஜெயமோகனுடனான தொலைபேசி உரையாடலில் கீழ்வருமாறு கோணங்கி சொல்கிறார்.
”டேய் நான் என்ன சொல்றேன்னா நாமள்லாம் மெட்றாஸுக்கு வந்தா மெட்ராஸ் நம்மள வேடிக்கை பாக்கணும். நாம ஊருக்குப்போனா நம்மள ஊரு வேடிக்கை பாக்கிற மாதிரி ஆயிடக்கூடாது. நம்ம உப்பு அங்க இருக்கு. அதுமேல நாம இருந்திட்டிருக்கணும்."
இன்னொரு உரையாடலில்,
”சரிதாண்டா நீ தப்பிச்சுக்குவே.. நீ எப்பவுமே ஒரு வெரதம் புடிக்கிற மனநிலை உள்ள ஆளு. தம்பி ராமகிருஷ்ணன்தான் மாட்டிக்கிட்டானோன்னு சந்தேகமா இருக்கு”
கோணங்கிக்கு கிராமத்தில் இருந்து நகரத்துக்கு பெரும் அளவு மாற்றமாகக்கூடிய தலைமுறையை சார்ந்தவர். உண்மையில் அப்படி நகர்ந்தாலும் தன்னுடைய மண் என்பது கிராமம்தான் என நினைக்ககூடிய தலைமுறையைச் சார்ந்தவர்.
இந்த நொடியில் இருக்கும் நூறு கிராம மக்கள், அங்கிருக்கும் நாய், மரம், ஏரி என எல்லாம் சேர்ந்துதான் நமக்கு ஒரு சித்திரத்தை உருவாக்குகிறது. ஒரு மரம் இல்லாமல் போனாலும் நமக்கு அந்த சரியான சித்திரம் இல்லாமல் போகும் ஆனால் நம்முடைய கவனக்குறைவால் அதனை நாம் விட்டுவிடுகிறோம். நாட்கள் செல்லச் செல்ல அந்த மாற்றம் நம் கண்களுக்குத் தெரியும். ஒருவன் அந்த இடத்தை விட்டுவிட்டு சென்று திரும்பிவரும் போது அவனுக்கு அந்த அதிர்ச்சி இருக்கும். நாம் பார்த்த அந்த சித்திரம் இல்லையே என. அது அவனது மண்டைக்குள் இருக்கும் சித்திரம், இன்னும் சொல்லப்போனால் அது அவனுடய சித்திரம். அப்படி நூறு கிராம மக்களும் நூறு சித்திரத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள். வயதானவர்கள் சிலசமயம் நாங்க எல்லாம் சின்ன வயசுல இருந்தப்ப..இந்த இடம் எப்படி இருந்துச்சு தெரியுமா? எனச் சொல்வதில் அந்த மாற்றத்தைக் காணலாம். ஆனால் அந்த கதையின் நாயகன் ஊரைவிட்டு ஓடிவிட்டு திரும்பி வரும் போது அம்மா இல்லாத தன்னை எப்படி எல்லா வீடுகளும் பார்த்துக்கொண்டதோ அதற்கு எதிர்மாறாக இருக்கிறது இப்போது அவன் பார்க்கும் சித்திரம்.
"வந்தவர்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும். கூட்டங்கூடி நேரத்தை வீணாக்காமல் பெண்களெல்லாம் தீப்பெட்டி ஒட்டப் போய்விட்டார்கள். குழந்தைகள் ‘ஹைய்ய்ய்….’ என்ற இரைச்சல் போட்டுக்கொண்டு தீப்பெட்டி ஆபிஸ் பஸ் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஓடிவிட்டார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த பெரியவர்களுக்கு வெட்டிப் பேச்சே பிடிக்காது. காட்டில் வெட்டிப் போட்டிருந்த வேலிக்கருவையைக் கட்டித் தூக்கி வர கயறு தேடப்போனார்கள். கொஞ்சநேரத்தில் ஒரு சுடுகுஞ்சி கூட இல்லாமல் இவன் தனித்து விடப்பட்டான்."
அவன் மண்டைக்குள் இருக்கும் சித்திரமும் இப்போது பார்க்கும் சித்திரத்திற்கும் இடையில் அவன் "தலைக்குமேல் ஏறி சுமையாய் அழுத்த குறுக்கொடிந்துபோய், ரொம்ப காலமாய் ஆட்டுப்படாமல் கிடந்த மதினி வீட்டு ஆட்டுரலில் உட்கார்ந்தான்."
அப்படி அமர்ந்தாலும் அவனுக்கு "‘கொழுந்தனாரே…. எய்யா…. கப்பலைக் கவித்திட்டீரா…..கன்னத்தில் கை வைக்காதிரும்…. செல்லக் கொழுந்தனாரே….எய்யா…."
அவனால் அந்த சித்திரத்தில் இருந்து வெளியேவர முடியவில்லை. ஏன்? அந்த சித்திரமும் தான் என நினைக்கிறானோ? அதனால் அது இல்லாதது ஒருவகையில் தன் இருப்பை கேள்வி கேட்ப்பது போல தோன்றுமோ?
கருத்துகள்
கருத்துரையிடுக