குளத்தங்கரை அரசமரம் - சிறுகதை விமர்சனம்




எழுத்தாளர்: வ.வே.சு. ஐயர்

காலம்: 19XX

எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு: 

                 சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழின் முன்னோடி இதழாளருமான வ.வே.சு.ஐயர் எழுதிய ‘குளத்தங்கரை  அரசமரம்’  சிறுகதை, தமிழின் முதல் சிறுகதை (1915) என்று கூறப்படுகிறது. ஆனால் இவருக்கு முன்னமே மகாகவி பாரதி தமிழில் சிறுகதை எழுதி இருக்கிறார். அதேபோல, இக்கதை ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய  ‘கடேர் கதா’ என்ற சிறுகதையின் தழுவல் என்று கூறுவோரும் உள்ளனர்.

குளத்தங்கரையில் உள்ள அரசமரம் தன் வாழ்வில் கண்ட ருக்மணி எனும் பெண்ணின் கதையைச் சொல்வதாக அமைகிறது இச்சிறுகதை. ‌ “பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்க வேண்டாம்” என்ற  நீதி போதனையுடன் இக்கதை முடிகிறது.  அக்கால சுதந்திரப் போராளிகளின் சமூக சீர்திருத்த எண்ணங்களை வெளிப்படுத்துவதாக இக்கதை இருப்பதை கவனிக்கலாம்.

இச்சிறுகதை  முதலில் ஸூ.பாக்யலக்ஷ்மி அம்மாள் என்ற பெயரில், 1915 ஆம் ஆண்டு ‘விவேக போதினி’, செப்டம்பர், அக்டோபர் மாத இதழ்களில் இரு பகுதிகளாக (ஒரு சிறிய கதை) என அடைப்புக் குறிகளுடன் THE PEEPUL TREE NEAR THE TANK ( A SHORT STORY) என்ற துணைத் தலைப்புகளுடன் வெளியானது.

பின்னர் இக்கதையையும் சேர்த்து இவை   “சந்திரகுப்தன் சரித்திராசிரியர் வெ.ஸூப்ரஹ்மண்ய ஐயரால் எழுதப்பட்டுள்ளன” என்ற அறிவிப்புடன்,  ‘மங்கையர்க்கரசியின் காதல் முதலிய சிறுகதைகள்’ என்ற தலைப்பில், ஐந்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக புதுச்சேரி கம்ப நிலையப் பிரசுரம் ௪ (4), விலை அணா க0 (10) குறிப்பிட்டு வெளியானது. குளத்தங்கரை அரசமரம் கதை இங்கு குறிப்பிட்ட தொகுப்பில் கடைசிக் கதையாக (5 ஆவது கதை) வைக்கப்பட்டுள்ளது.

இத்தொகுப்பு 1917இல் வெளிவந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், உறுதியான, ஏற்றுக்கொள்ளத் தக்க ஆதாரங்களில்லை. ஆனால் இவை சந்திரகுப்தன் சரித்திராசிரியர் வெ.ஸூப்ரஹ்மண்ய ஐயரால் எழுதப்பட்டவை என்ற முதற்பக்க ஆசிரியர் விவரக்குறிப்பின் அடைப்படையில் பார்த்தால்,  உறுதியாக 1918 க்குப் பின்னரே தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் சந்திரகுப்தன் சரித்திரம் வெளியான ஆண்டு 1918.

கால அடிப்படையில், வ.வே.சு.ஐயருக்கு வெகு முன்னரே பாரதியார் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இன்னும் பல கதைகளின் தொகுப்புகளும் உள்ளன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனரென்பது குறிப்பிடத் தக்கது.

ஆங்கிலேயர் ஆட்சிக் கால இந்தியாவில், தமிழ்நாட்டின் ஒரு ஊரின் பிரதான குளத்தின் கரையில் வெகுகாலமாக இருந்துவரும் அரசமரம் நமக்குச் சொல்கிறது இந்தக் கதையை. குறிப்பாக நாயகி ருக்மிணியின் கதையை உருக, உருகச் சொல்கிறது. படித்து முடிக்கும்போது மனபாரம் தாங்காமல் ஆழ்ந்த பெருமூச்சு நம்மிடமிருந்து வெளிப்படுகிறது.

இத்துணை விசாலமான  பார்வை கொண்ட வ.வே.சு. ஐயரையா நமது தமிழகத்தில் பிராமணர் என்ற ஒரே காரணத்துக்காக கரித்துக் கொட்டினர் என்பதை நினைத்தாலே, ருக்மிணிக்காக அரசமரம் அடைந்த விசாரம், நமக்கும் எழுகிறது

சிறுகதை சுட்டி: https://porulputhithu.com/2022/05/05/kulaththngaraiarasamaram

விமர்சனம்: 

  1. தமிழ் விக்கி 
  2. சுனில் கிருஷ்ணன்

 

நந்தி இலக்கிய வட்டம் விமர்சனம்: 

சரத் :  முதல் சிறுகதையாக கருதப்படும் இக்கதையில் கதை சொல்லியாக அரசமரம் பயன்படுத்தப்பட்டிருப்பது தாகூரின் கதையின் கூறுமுறையின் தழுவலாக கருதப்பட்டாலும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. விவரணைகளும் மொழிநடையும் இன்று வாசிக்கும் போதும் உயிர்ப்புடனே உள்ளது. மரபான பிராமண குடும்பத்தில் நடக்கும் பால்ய கல்யாணத்திற்கு, பெண்ணின் தந்தைக்கு ஏற்படும் பொருளியல் இழப்பினால் சிக்கல் உருவாகிறது. மணமகனின் குடும்பத்தார், இன்னொரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இரண்டாவது கல்யாணம் செய்வதிலும் மரபுப்படி சிக்கல் எங்குமிருக்கவில்லை. மன்னார்குடி குடும்பத்தாரும் கல்யாணத்திற்கு லட்ச ரூபாய் சொத்துடன் பெண் கொடுக்க சம்மதிக்கிறார்கள். நாகராஜனுக்கும் தாய் தந்தையரது பேச்சினை கேட்க வேண்டும் என்ற மரபினை மீறமுடியாது தாலி கட்டும் சமயம் வரை எதிர்ப்பினைக் காட்ட தள்ளிவைக்கிறான். ருக்மணிக்கு தன் கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் சிக்கல் இல்லை. தான் இருக்கும் போது கல்யாணம் நடப்பதில் தான் பிரச்சனை.

எனவே இந்தக்கதை அறச் சிக்கல், காலமாற்றம் என்பதை விட காதலைத் தான் மையப்படுத்துகிறது. இந்தக் காதலில் தன் கணவனை இழக்க விரும்பாத ருக்மணி, நாகராஜனின் இன்ப அதிர்ச்சி அளிக்கும் புதிர் தெரியாமல் தற்கொலை செய்து கொள்கிறாள் என்று முடிகிறது. நீதியாக பெண்களிடம் விளையாட்டு வினையாகும் என்று சொல்லும் இக்கதை சிறுகதையின் இடத்தை அடையவில்லை என்பதற்கு நமது பழங்கால நீதிக்கதைகள் செலுத்திய ஆழ்ந்த தாக்கம் காரணமாக இருக்கலாம். நவீன சிறுகதையில் இந்தக் கதையை சேர்ப்பதை பரிசீலிக்கவேண்டுமென்று தோன்றுகிறது.

 

        மகேந்திரன் : 

வடிவம் சார்ந்து: முதலில் இது செவ்வியல் சிறுகதை வடிவத்தை அடையவில்லை. ஒரு நீதிக் கதையைப் போல சொல்லிச் செல்கிறது. இதன் பெரிய குறை என்றே இதை சொல்லலாம். 

உள்ளடக்கம் சார்ந்து: ருக்மணிக்கும் நாகராஜுக்கும் இருக்கும் காதல் அல்லது அன்பு எப்படி சிதைந்து போகிறது என்பதுதான் கதை. பொருளியல் வீழ்ச்சி எப்படி அவர்கள் வாழ்வை பாதிக்கிறது? அல்லது புற உலகம் எப்படி அவர்கள் மேலான பாதிப்பை ஏற்படுத்துகிறது எனப் பார்க்கலாம். 

நாகராஜ் பெற்றோரின் நிர்ப்பந்ததால் இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளும் நிலைக்கு ஆளாகிறான்.ஆனால் அவன் மனம் அதனை விரும்பவில்லை என அவனது நண்பனிடம் சொல்லும் போது தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த முரண்பாடுதான் கதை என எடுத்துக்கொண்டாள் அதில் மாட்டித்தவிக்கும் பெண் ருக்மணி. இந்த முரண்பாடு பெரிய விளைவை வாசகன் மனதில் ஏற்படுத்தவில்லை. அதற்கு காரணம் அதன் வடிவம் இல்லாமை எனச் சொல்லலாம். 

ருக்மணியின் சாவுக்கு யார் காரணம்? நாகராஜனா இல்லை இந்த சமூகமா (புற உலகம்)? இரண்டும்தான் என்று சொல்லலாம். அதே சமயம் இரண்டும் இல்லை என்றும் சொல்லலாம். ஆனால் கதை அதற்குப்பிறகும் நீண்டு சென்று பெண் பாவத்தை பற்றி பேசும் நீதிக்கதை வடிவை அடைகிறது. ஒரு வேளை அந்த ருக்மணியின் சாவுடன் நின்று இருந்தால் சிறுகதை வடிவத்திற்கு பக்கத்தில் வந்திருக்கும். 

அரசமரம் இந்தக் கதையை சொல்வதன் மூலம் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது? அது தான் கண்டதை, கேட்டதை பற்றி மட்டுமே சொல்ல முடிகிறது. அதனால் மன ஓட்டம் இல்லாமல் நகருகிறது இந்தக் கதை. இந்த முரண்பாட்டை (சாவுக்கு யார் காரணம்) பேச இந்த கூறுமுறை சரியாகத் தான் இருந்திருக்கும். மரத்திற்கென்று ஒரு சார்பு இல்லை. நடப்பதை அப்படியே சொல்லும் கண்ணாடி அது. அதனால் இந்த முரண்பாடைப் பற்றிப் பேச சிறந்த கூறுமுறை என்றே படுகிறது.

இதனை முக்கியமான சிறுகதை என்ற வரிசையில் வைக்க முடியாது என்பதே என்னுடைய            கருத்தும் கூட. 


கருத்துகள்

விருப்பமான பதிவுகள்

கயிற்றரவு - சிறுகதை விமர்சனம்

ஒருநாள்கழிந்தது - சிறுகதை விமர்சனம்