ஒருநாள்கழிந்தது - சிறுகதை விமர்சனம்

 




எழுத்தாளர்: புதுமைபித்தன்

காலம்: 1930~1940

எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:

            புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர். 

சிறுகதை சுட்டி: 

            https://www.dinamani.com/literature/pudhumaipithan-story/2020/May/21/oru-naal-kazhinthathu-puthumaippitthan-3418030.html

பிற விமர்சனம்:

            https://kjashokkumar.blogspot.com/2019/10/blog-post_30.html

நந்தி இலக்கிய வட்டம் விமர்சனம்:

            சரத்: ஒரு நாள் கழிந்தது என்னும் சிறுகதை ஒரு எழுத்தாளனின் கீழ் நடுத்தர வாழ்க்கையின் ஒரு நாளை சொல்கிறது. அவரது வாழ்க்கையையே சொல்வதாகக் கருதலாம். வறுமையின் பிடி ஒவ்வொரு நாளும் பணம் என்பதைத் தவிர வேறு எதையும் பற்றிச் சிந்திக்க விடாமல் செய்யும் வாழ்வு. பணம் இல்லாதது, பணத்தை எண்ணியே வாழ்க்கையைத் தொலைக்கச் செய்கிறது. முருகதாசரின் ஒட்டு குடித்தன வாடகை வீட்டின் இரு அறைகள் இரு வேறு இடங்களில் அமைந்திருப்பதையும், அந்த வீட்டில் அவரது ஒரு சாயங்கால நேரத்தினையும் மட்டும் காட்சிப்படுத்தி அவரது வாழ்வினையே துலங்கச் செய்கிறார். அந்த ஒரு மணி நேரத்தில் நடப்பவற்றை விவரிப்பதிலேயே ஒரு முழு வாழ்வும் பார்த்துவிட்ட கால உணர்வைக் கதை நமக்கு உருவாக்கி விடுகிறது.

கிழிந்த பாயும், வத்திக்குச்சி இல்லாமையும், எண்ணெய் வாங்கக் காசில்லாததும், குழந்தை ரிக்ஷாவில் ஏறிக்கொண்டு ரிக்ஷாக்காரனோடு வாதம் செய்வதும், கடைக்காரனிடம் பேசி திங்கள் கிழமை வரை பணம் கொடுப்பதற்கான கெடுவைத் தள்ளிப் போடுவதையும், மூன்று ரூபாய்க் கடன் கேட்டு அரை ரூபாய் பெற்று அதற்கும் உடனடியாக தேவை வந்துவிடுவதும் எனப் பணப் பற்றாக்குறையே கதை முழுவதும் நிறைந்திருக்கிறது. எப்படியோ சமாளித்துக் கொண்டு, பணத்தை உருட்டிப் புரட்டிக்கொண்டு, பல சமரசங்களோடு நகரும் சாமான்ய வாழ்வில், கள்ளமற்ற குழந்தையே வாழ்வின் நிறைவாக இருக்கிறது. வாசப்படியின் இரு நிலையிலும் கையை வைத்துக்கொண்டு ஒரு காலை ஆட்டிக்கொண்டு நிற்கும் பெண்ணை தூக்கிக் கொஞ்சி இவ்வாழ்வைக் கடந்து விட முடியும்.

ஆனால், முருகதாசர் சாமான்யர் அல்ல. சாகாவரம் பெற்ற கதைகளை எழுதும் எழுத்தாளர். வாடகைக்கு வீட்டினை பார்க்கும் போது, இரு வேறு இடங்களில் அறைகள் இருப்பதின் விளைவு கூட அவரால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. ஒரு பெரிய நாவலை எழுதும் கனவு அவருக்கு இருக்கிறது. ஆனால் யதார்த்த வாழ்வு அவரை கனவிலிருந்து வெகு தொலைவிற்கு தள்ளிக்கொண்டு போகிறது. தற்போதைய தேவைக்காக பத்திரிகை வேலையை துறந்துவிட்டு, விளம்பரத்திற்கு வேலை செய்கிறார். தொலைந்து போன கனவை சொல்லி சொல்லி நண்பர்களுக்கும் அலுப்பூட்டுகிறவராக மாறிப்போகிறார்.

ஒட்டு மொத்தமாக கதையை படித்து முடித்தவுடன், முருகதாசரின் யதார்த்த வாழ்க்கையின் ஒரு ஓரமாக சிறிய இடத்தில் அவரது கனவு ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு சித்திரத்தை கொடுக்கிறது. யதார்த்த வாழ்வு என்ற பெரிய இரும்பு சக்கரத்தின் அடியில் நசுங்கி, அதனுடன் ஒட்டிக் கொண்டிருப்பது போல். கனவு நிறைந்த ஒரு கலைஞனுக்கு, அவனது கனவினை கண்ணெதிரே கைவிட்டு விட வேண்டிய நிலை என்பது சாவிற்கு சமமானது. தன் சாவினை கண்முன் காண்பதுதான் அது. அவன் தன் குடும்பத்திற்காக கனவினை, தன்னை சாக கொடுக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறு வாழ்ந்த அக்காலத்தின், லட்சிய சாமானியனின், ஒரு துளி இனிப்புடன் கூடிய பாகற்காய் வாழ்க்கையை நம் கண்முன் நிறுத்துகிறது.


            லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன் : ஒரு எழுத்தாளரின், முன்னும் பின்னுமாகப் பெருகிச் செல்லும் வாழ்வின் ஒரு அந்தியைத் துண்டாய் வெட்டி வாசகனுக்கு அளித்த படைப்பிது. 

இக்கதை புதுமைப்பித்தனால் 'புனையப்பட்ட' அல்லது 'உண்மையான' சுயசரிதம் என்று தோன்றுகிறது. உதாரணமாகக் கதையின் மையப்பாத்திரமான முருகதாசர் என்பது அவரின் இன்னொரு புனைப்பெயர்தான். மனைவின் பெயர் கமலா. ஒரு பெண் குழந்தை. பத்திரிக்கையில் வேலைப் பார்த்து பின் வேலையை விட்டு விலகுகிறார். முக்கியமாக இவரும் வறுமையிலிருக்கிறார். 

ஆனால் இவ்வாழ்க்கைத் துண்டை வாசகர்களுக்குப் படைப்பதன் வழி, எதைக் கடத்த நினைத்தார் ஆசிரியர்? புதுமைப்பித்தன் எழுத வந்த காலத்தில் அவரைப் பற்றிய விமர்சனங்களில் முக்கியமானது, 'இவர் கதைகளில் கருத்தென ஏதும் சொல்வதில்லை' என்பது. இன்றைய இலக்கிய வாசகர்களுக்கு இலக்கியமென்பது நீதி போதனைகளுக்கான பிரச்சார ஊடகமன்று என்பதில் தெளிவுள்ளது. ஆனால் தமிழ் நவீன இலக்கியத்தின் பிதாமகன் என நாம் புகழும் புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்தைய வாசகர்களை அவர் எவ்விதம் எதிர் கொண்டிருப்பார் என எண்ணிப்பாருங்கள். 

அக்காலச்சூழல் இவ்வாறு வருகிறது. முருகதாசர் ஓர் எழுத்தாளர். அவர் எழுதிய கதைகளை வானத்தை அளப்பதும், சாகாவரம் பெற்றதும் என்கிறார். ஒன்று - அவர் தன்னையே சுயவிவரிசனம் செய்து கொள்கிறார் இல்லை மற்றவர்களின் இவர் கதைகளின் மீதான புகழ்மொழிகளை எள்ளி நகையாடுகிறார். ஒட்டுக் குடித்தனத்தில் இருக்கிறார். அவரின் பொருளாதாரச் சூழல் அவரை பிழைப்புக்காக, வெளிநாட்டுப் பொருள்களுக்கான விளம்பரங்களை எழுதித்தர வைக்கிறது. இப்போது கையில் காகிதம் கூட இல்லை எழுத.

குடும்பச் செலவுகளுக்கு வருமானம் போதவில்லை. நிரந்தர வேலையிருந்துவிட்டால் போதுமென்றிருக்கிறார். அவருக்கு நாவல் எழுதும் ஆசையிருக்கிறது. தமிழருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் தான் நாவல் எழுதிவிடுவேன் என்கிறார். புதுமைப்பித்தன் இறுதி வரை நாவல் ஏதும் எழுதவில்லை என்பதை நினைவில் கொள்க. 

பொருளாதார நிலை நெருக்குகிறது. கடைக்காரரிடம் பாக்கி. ரிக்ஷாகாரருக்கும் இவர் நிலை தெரிந்திருக்கிறது. காலில் சுளுக்கு என பொய்கூறி அவர் குழந்தையை வண்டியில் கூட்டிச் செல்லாது ஏமாற்றுகிறான். போதாத குறைக்கு இரண்டு நண்பர்கள் வேறு வந்து, அவர் புகழ்பாடி, இல்லாத வீட்டிலிருந்து கடைசி மிடறு காப்பியையும் அருந்திச் செல்கிறார்கள். ஆனால் அவர் கூறுவதற்கு காது கொடுக்கத் தயாராக இல்லை. இறுதியாக வந்த நண்பரிடம் கடனாகப் பெற்ற எட்டணாவுக்கு மீண்டும் காபிப் பொடியை வாங்கி அடுத்த விருந்தாளி வந்தால் தருவதற்காக காத்திருக்கிறார்கள் அவரும் அவர் குடும்பமும். 

ஆசிரியரின் எள்ளல் தொனியை  விட்டு, அந்த தகவல்களை மட்டும் கொண்டு மூன்றாம் நபர் பார்வையில் அந்த சூழலைப் பார்த்தால் நவீன இலக்கியம் துவங்கிய காலகட்டத்தில் எழுதவந்த எழுத்தாளர்களின் நிலைமை புரிகிறது. இக்கதையை படிக்கும் வாசகர்களுக்கு, அன்றிருந்த நவீன இலக்கியவாதியின் வாழ்க்கையை கடத்த நினைத்தாரா பித்தன்? அடுத்த நாள் எப்படி துவங்குமென தெரியாமல், இன்றொருநாள் கழிந்தால் போதுமென இருந்துதான் நீங்கள் இன்றுபடித்துக் கொண்டிருக்கும் இக்கதைகளை எழுதினேன் என, வாழையடி வாழையாக வரவிருக்கும் தன் வாசகர்களுக்கு சொல்ல விழைந்தாரா அவர்? 

இருக்கலாம். இன்னும்கூட வேறு ஏதேனும்  உத்தேசித்திருக்கலாம். அன்றைக்கும் இன்றைக்குமான கால, சூழல் மாறுபாடு அதை நாம் உணர தடையாய் இருக்கலாம். தெரியவில்லை. 

ஆனால் ஒன்றொண்டு. இவ்வளவு நெருக்கடியிலும் முருகதாசர் இப்படிக் கேட்கிறார். "நான் பத்திரிகையை விட்டுவிட்டா கதை எழுதாமல் இருந்துவிடுவேனோ?" இந்த வைராக்கியம்தான் இன்றுவரை அவரை தலைமகன் பீடத்தில் அமர்த்தியிருக்கிறது என நினைக்கிறேன்.


            கா.சிவா: புதுமைப்புத்தன் எழுதிய இச்சிறுகதை கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் எழுத்தாளர்களின் ஒருநாள் வாழ்வை விவரிக்கிறது.

     விளக்கேற்ற தீப்பெட்டி இல்லாத, அப்பளம் பொரிக்க நல்லெண்ணெய் இல்லாத இரண்டாய் கிழிந்திருக்கும் பாயை மாற்ற வழியில்லாத நிலையில் வாழும் ஓர் எழுத்தாளரின் ஒரு நாளின் வாழ்வைக் கூறுவதே "ஒரு நாள் கழிந்தது" சிறுகதை.

  இக்கதையில் காட்டப்பட்டுள்ள ஒரு எழுத்தாளரைப் பற்றிய சித்திரம் அப்போதைய தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு பொருத்தமாக உள்ளதே இதன் சிறப்பாகும்.  இக்கதை இன்றும் வாசிப்புச்சுவை குறையாமல் இருப்பதற்கு முதன்மைக் காரணம் இதுவே.

   இக்கதை யதார்த்தவாத அழகியலில் எழுதப்பட்டுள்ளது. இதன் நேர்த்தி என்பது இயல்பான விவரிப்பு. உதாரணமாக அந்த அரதப்பழசான பாயைப் பற்றிய விவரிப்பு, ஒரே நேரத்தில் அவ்வீட்டின் ஏழ்மையையும் அதனை சமாளிக்கும் விதத்தையும் ஒருங்கே உணர்த்துகிறது. மேலும் அறையிலிருந்து சமையலறைக்கு செல்வதற்கான வழியை விவரித்துள்ள விதம் அக்காலத்திய ஒண்டுக் குடித்தன வீடுகளைப் பற்றிய சித்திரத்தை அளிப்பதுடன் அதில் வசித்த மனிதர்களின் பொருளாதார நிலை பற்றிய விசனத்தை மனதில் எழுப்புகிறது.

  இக்கதையின் மற்றொரு சிறப்பென்பது கதாப் பாத்திரங்களின் வார்ப்பு. புதுமைப்பித்தன் சிற்சில சொற்களிலேயே ஒவ்வொரு பாத்திரத்தின் இயல்புகளையும்  காட்டிவிடுகிறார். கமலாவின் உறுதியையும் கணவனைப் பற்றிய அவரது புரிதலையும் சிறு உரையாடல் மூலமும் மகளின் துடுக்குத்தனத்தை அவளின் செயல்கள் மூலமும் முருகதாசரின் உறுதியற்ற தன்மையை கதை சொல்லியின் கூற்றிலும் உணர்த்துகிறார். கதாப்பாத்திரங்களின் குணாம்சம் தெளிவாக தெரிந்தபின் வாசிப்பின் சுவை கூடுகிறது என்பது என் எண்ணம்.

   ஒரு நாள் கழிந்தது என்ற தலைப்பென்றாலும் மாலை ஒளி மங்கும் நேரத்தில் தொடங்கும் கதை அடுத்த ஒருமணி நேரத்தில் முடிந்து விடுகிறது. இந்த ஒருமணி நேரக்கதைதான் ஒரு நாளுக்கு. இந்த ஒருநாள் கதைதான் ஆண்டு முழுவதும்... மட்டுமல்ல ஆயுளுக்கும் என்பதுதான் கதாசிரியர் உணர்த்த விழைவது. அதை வாசிப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றே நான் நம்புகிறேன்.

  எழுத்தாளரின் ஒருநாள் பாடுகளை விவரிப்பதாலும் இக்கதை துன்பக்கேணி போலவோ செல்லம்மாள் போலவோ மனதில் துயரத்தை ஏற்றுவதில்லை. இந்நாளைப் போலவே எல்லா நாட்களும் சுலபமாக கழிந்துவிடும் என்ற ஆசுவாசத்தை ஏற்படுத்துகிறது. முருகதாசரைப் போலவும் கமலாவைப் போலவும் நாளையைப் பற்றி கவலைப்பட்டு துயருராமல் அக்கணத்தில் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசையும் எழுகிறது.

  இவை எல்லாவற்றையும்விட முக்கியமான ஒன்றுண்டு. இது, கலைஞர்களின் வாழ்வைக் காட்டும் கதை. ஏழ்மை இருந்தாலும் கடனிருந்தாலும் "பார்த்துக் கொள்ளலாம்" என்ற துணிவு மற்றும் தெளிவால் துயரத்தில் உழலாமல் வாழ்வது. சாமானியர்களால் பிலாக்கனம் வைக்காமல் தெய்வத்தையும் வாழ்வையும் பழிக்காமல் இப்படி வாழவே முடியாது. ஆனால், ஒரு கலைஞனாலன்றி பிறரால் இதைப் புரிந்துகொள்ளவும் முடியாது என்பதுதான் நிதர்சனம்.

"கலைகளைப் பயில்வோம். வாழ்க்கையை புகார்களின்றி வாழ்வோம்..." என்பது இக்கதையின் மென்மையான முழக்கமாகக் கொள்ளலாம்.


            கார்த்திக் : ஒருவர் தம் சொந்த வாழ்வியல் அனுபவங்களைத் துயரங்களைச் சிறிய கதையாக எழுதினால் அது வாசகர்களால் ஏற்றுக்கொள்ளப்படு விடுமா? இல்லை புதுமைப்பித்தன் எழுதிய ஒரே காரணத்தினால் இது மிகச் சிறந்த சிறுகதையாகக் கொண்டாடப் படுகிறதா என்ற கேள்வியோடு இதை மீண்டும் ஒரு முறை சிதறல் இல்லாமல் வாசித்துப் பாருங்கள்.

மிகக் குறைந்த வார்த்தைகளைக் கொண்டு தமிழின் ஆகப் பெரிய இலக்கிய முன்னோடியின் வாழ் நிலையை சுய பகடியாக மனதைச் சுருக்கென்று தைக்கக் கூடிய மொழியில் கடத்த முடிகிறது.

ஒரு கடைக்காரர், ரிக்சாகாரர், இரு நபர்கள்(நண்பர்கள் போல) , இவரையும் சேர்த்து மூன்று குடும்ப உறுப்பினர்கள் கூடவே அந்த குறுக்கு வெட்டு தோற்ற வீட்டின் ஒற்றைச் சாளரம் இதைக் கொண்டு மிக நேர்த்தியான வடிவ ஒருமையுடன் கதை சொல்லி ஆயிற்று. அதைக்கொண்டு நாம் சம காலத்தைப் பொருத்திப் பார்த்தாலும் சரி பார்க்க விட்டாலும் சரி அந்த குடித்தனர்க்காரர் கையில் மிச்சம் அரையணா மட்டுமே. அதை வைத்து வருபவர்களுக்குக் காபி போட்டுக் கொடுக்க வேண்டும் விளக்கேற்றத் தீப்பெட்டி வாங்க வேண்டும் முதுகில் எழுத முடியாதகையால் காகிதம் வாங்க வேண்டும். கடைசி வரை அவர் நாவல் எழுதவே இல்லை என்பதிலிருந்து அவருக்கு அரையணா மேல் வாய்க்கவே இல்லை போலும்.. இப்போதைய வாசகர்களுக்கு இதெல்லாம் படிப்பவர் மனதைக் கசங்கச் செய்ய எழுத்தாளர் கொண்ட உத்தியாகத் தோன்றலாம்.சம கால வாசர்களுக்கு அந்த பிடி கூட கிடக்காமல் போகலாம்.ஆனால் மதுரையிலும் இடுங்கிய பல சென்னை தெருக்களிலும் ஒட்டுக் குடித்தனம் வாழும் மனிதர்களின் நிலை இன்றும் அதுவே. அவ்வாறெனில் ஒரு எழுத்தாளன் நிலையை மட்டும் ஏன் மிகப்பெரிய துயரமாகச் சித்தரிக்க வேண்டும். அங்குதான் இலக்கியத்தின் முன்னோடி வெளிப்படுகிறான். அவன் சொன்னது அவன் நிலை மட்டும் அன்று.அவன் துயரம் மட்டும் அன்று.அது வாழ்வின் துயரம். சீலைப்பேன் வாழ்க்கை வாழும் அத்தனை மனிதர்களின் துயரம். அதை வாழ்வின் மீது அவன் கொண்ட கசப்பாக நாம் எடுத்துக்கொள்ள நவீன இலக்கியம் இடம் தருகிறது. ஆனால் அவன் அந்த கசப்பிலிருந்து இனிமைக்கு இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு எதிர் காலத்தை நோக்கிப் பறக்கத் துடிக்கும் பின் நவீனத்துவ இலக்கிய வாசகனின் பாதையைத் திறந்து வைக்கிறான்.அது ஒரு மெல்லிய கோடு.அதற்கான இடம் இந்த கதையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த இடைவெளியைக் கண்டடைவதே சமகால வாசகனுக்கு அவன் விடுத்த சவால்.அதிலிருந்து இந்த கதையை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கலாம்.

கருத்துகள்

விருப்பமான பதிவுகள்

கயிற்றரவு - சிறுகதை விமர்சனம்

குளத்தங்கரை அரசமரம் - சிறுகதை விமர்சனம்