கயிற்றரவு - சிறுகதை விமர்சனம்
காலம்: 1930~1940
எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:
புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர்.
சிறுகதை சுட்டி: https://www.sirukathaigal.com/கயிற்றரவு/
விமர்சனம்:
நந்தி இலக்கிய வட்டம் விமர்சனம்:
கா சிவா:
கதையின் தலைப்பே கதையின் பொருண்மையை சுட்டிவிடுகிறது. அதன் பொருள் தெரிந்த வாசகன் மனதளவில் தயாராகவே கதைக்குள் நுழைய முடியும். இதைத்தான் கூறப் போகிறது என எதிர்பார்த்து உள்நுழையும் வாசகனையும் ஆச்சர்யப்படுத்தும் வித்தை இக்கதையில் உண்டு. இதுவே இக்கதையின் பலம்.
தலைப்பு: மனமயக்கத்தில் ஒன்றைக் காணும்போது, இல்லாத வேறொன்று இருப்பதாக உணர்வதைக் காட்டுவதற்கு 'கயிற்றரவு' என்னும் உருவகம் பயன்படுத்தப்படுகிறது. ஒளி குறைந்த அறையில் கயிற்றைக் காண்பவன் அதை பாம்பென்றே எண்ணுகிறான். அப்போது அது பாம்பாகவே இருக்கிறது. ஒளி வந்தபின் கயிறு தெரிகிறது, அப்போது பாம்பு இல்லாமலாகிவிடுகிறது. இதனை மாயை என்று இந்திய தத்துவ மரபு கூறுகிறது.
வாழ்வின் நிலையில்லாமையை உணர்த்துவதற்கும் இந்த கயிற்றரவு உருவகத்தைக் கூறுவதுண்டு. மனதிலுள்ள அறியாமையால் இந்த வாழ்க்கையே உண்மையென்று எண்ணிக் கொண்டிருப்பது மாயை. மனம் தெளிந்த அறிவினைப் பெறும்போது பிரம்மமே உண்மை இவ்வாழ்க்கை நிரந்தரமில்லை எனப் புரியும் எனவும் விளக்குகிறார்கள்.
கதை: கள்ளிப்பட்டியில் வசிக்கும் பரமசிவம் பிள்ளை தன் இறுதிக்காலத்தில் இவ்வுலக வாழ்க்கையின் அனைத்துமே மாறிக்கொண்டிருக்கும் நியதிகளையும் நிலையின்மையின் மெய்மையையும் உணர்வதாக இக்கதை அமைந்துள்ளது.
வடிவம்- மொழி: புதுமைப்பித்தன் தான் சூட்டிக்கொண்ட பெயருக்கேற்ப புதுப்புது வடிவங்களை தன் சிறுகதைகளில் கையாண்டுள்ளார். கதைக்கேற்ற வடிவம் என்பதை செயலால் காட்டியுள்ளார். உதாரணமாக பொன்னகரம் கதையில் தத்திச் செல்லும் தவளை வடிவத்தில் கதை குதித்துச் செல்லும். செல்லம்மாள் கதையோ வற்றி மெலிந்தோடும் நீரோடையின் மிதமான வழிதலாக நகரும்.
கயிற்றரவு கதையில் ஒரு மனிதரின் ஒட்டு மொத்த வாழ்வை சில பக்கங்களில் சொல்ல வேண்டும். எனவே, இதற்கு புயலில் சருகுகள் பறந்து செல்வது போன்றோ பெருகிச் செல்லும் பெரும் வெள்ளத்தைப் போன்றோ விரையும் நடையை கைக்கொண்டுள்ளார்.
வாசிக்கும்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் உணர்வை இந்த கதையின் நடையும் மொழியும் அளிக்கிறது. எத்தனை விரைவாக காலம் ஓடுகிறது. ஒருகணம் கருந்துளைக்குள் பால்வெளியின் அத்தனை கோள்களும் இழுபட்டு மறைவதைக் காண்பதாக பிரமை எழுகிறது. இக்கதையை முக்கியமான கதையாக எண்ணவைப்பது இந்த விரைவு நடையும் மொழியும்தான்.
இந்தக் கதையை சற்று விரிவாக்கி நாவலாக மாற்றியிருந்தால் க.நா.சு. எழுதிய பொய்த்தேவு நாவல்போல் வந்திருக்கும் என எனக்குத் தோன்றுகிறது. புதுமைப்பித்தனை குருவாக கருதிய க.நா.சு. கயிற்றரவு கதையிலிருந்து உத்வேகம் பெற்று பொய்தேவு நாவலை எழுதியிருக்கலாம் என்று கருதுவதற்கும் இடமுண்டு.
இக்கதை ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை கூறுவது மட்டுமல்லாமல் மொத்த பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அதன் நிலையில்லாமல் மாறிக் கொண்டேயிருக்கிற தன்மையினையும் பேசுகிறது. எனவே, இது ஒரு சிற்றூரில் பரமசிவம் பிள்ளையின் வாழ்வை கூறுவதன் வாயிலாக உலகின் அத்தனை உயிர்களின் வாழ்வையும் கூறுகிறது. எனவே இக்கதை புதுமைப்பித்தனின் முதன்மையான கதை என நான் கருதுகிறேன்.
இக்கதையே புதுமைப்பித்தனின் இறுதிக்கதை எனக் குறிப்பிடப்படுவதை அறிந்தபோது மனம் கனத்துக் கலங்கியது. ஒரு ஒப்பற்ற கலைஞனின் வாழ்விற்கும் எழுத்திற்கும் முத்தாய்ப்பாக இக்கதையை இருத்திய பேரியற்கையின் கருணையை வணங்குகிறேன்.
சரத்: பனைமரத்தின் நிழலில் உட்கார்ந்து காலைக் கடன்களை கழிக்கும் அழகிய நம்பியா பிள்ளையின் எண்ணங்களே கதையாக விரிகிறது. இவ்வாறு எண்ண ஓட்டங்களை மட்டுமே கதையாக ஆக்குவதின் தமிழ் சிறுகதையின் முன்னோடி கதையாக இருக்கிறது.
காலம் குறித்தான சிந்தனை எவ்வாறு நாம் காலத்தை பிரித்துக்கொள்கிறோம் என்ற நடைமுறையிலிருந்து, அதெல்லாம் நம் வசதிக்காக மட்டும் தானே என்று உதறி தத்துவார்த்தமாக கதை நகர்ந்துவிடுகிறது. காலம் என்பது ஒரு பெரிய சிலந்தியின் இழை போல அறுபடாது, எந்த அடையாளங்களுமின்றி நீண்டு கொண்டிருக்கிறது. நதி போல பிரவாகமாக சென்று கொண்டிருக்கிறது. சமூகம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டு, காலநதியின் கரையில் அமைந்திருக்கும் சிறு மணல் வீடு என்கிறார்.
இப்படியான ஒரு உருவகத்தை கொடுத்தவுடன் உடனே மனித பிரக்ஞை தன் இருப்பை வைத்து மல்லு கட்டுகிறது. அப்படியானால் சமூக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது. ஓலைக் கூரைகள் காரை வீடுகளாகயிருக்கின்றன. உபயோகத்திலிருந்த இந்த ஆற்றின் படித்துறை கைவிடப்பட்டிருக்கிறது. இந்த வறண்ட நிலத்தில் பனைகள் முளைத்து வளர்ந்தது எல்லாம் எனக்கு தெரியுமே என்று சிந்திக்கிறது.
இப்போது தன்னைக் கைவிட்டு அவரது குலத்தினைக் கொண்டு காலத்தினை அளந்துவிட முயன்று பார்க்கிறார். அவரது தந்தை பரமசிவம்பிள்ளை அந்த ஆற்றின் படித்துறையில் துணி துவைத்ததும் பின்பு அழகிய நம்பியா பிள்ளை பிறந்து அவர் வளர்ந்து அவருக்கு மகனாக பரமசிவம் பிள்ளை பிறக்கிறார். கருப்பையிலிருந்து பிறந்த பரமசிவம் உண்ணத் தொடங்குகிறது, நான் என்ற உணர்வு உண்டாகிறது, விளையாடுகிறது, பள்ளிக்கு செல்கிறது, உடல் பெருகுகிறது, கல்யாணம் செய்து கொள்கிறது, குழந்தை பிறக்கிறது, வாழ்க்கையின் அலைச்சலில் நாட்கள் நகர்வதே தெரியாமல் காலம் கடந்து போகிறது. இறுதியில் பாம்பு கடித்து இறந்தும் போகிறான். அவனுக்கு ஒரு மகன் பிறந்து அடுத்த சுழற்சி தொடங்குகிறது.
இந்த வாழ்வில் அவன் காலம் என்று எண்ணுவது எல்லாம் நான் என்ற தன்னுணர்வினால் மட்டும் தானே. நான் இறக்கும் போது தன்னுடன் சேர்த்து தன்னுணர்வும் இறந்து போகுமா?. நான் கும்பிட்ட கடவுள்களும் என்னுடன் இறந்து போகின்றனர். இறப்பை தாண்டி நிற்கும் கடவுள்கள் மனித நாகரிகத்தின் வீட்டின் சிறு சல்லி வேர் போன்றவர்கள். நான் இல்லாமல் ஆகும் போது வீட்டின் கூரையில்லாது வெளியுடன் கலந்து நிற்கும் வீட்டினைப் போல ஆகிவிடுகிறதா? என்ற எண்ணற்ற கேள்விகளை தத்துவ வழியாக எழுப்பிக் கொண்டாலும் அந்த கால நதியின் பிரவாகத்தை மனித தன்னுணர்வினால் அறிந்து விட முடியாமல் தான் இருக்கிறது. அந்த பிரம்மாண்டத்தின்முன் நாம் விடை தெரியாது நின்றிருக்கிறோம்.
பரமசிவம் பிள்ளை கொஞ்சம் கொஞ்சமாக விலகி சென்று இறந்து போன பின் உயிரின்றி கிடக்கும் உடலைப்பார்த்து, அவர் எங்கே என்ற கேள்விக்கு கயிற்றரவு என்பதுடன் கதை முடிகிறது. அவர் இங்கு வந்து வாழ்ந்தது எல்லாம் மாயையில். இது நிரந்தரமற்றது. எத்தனை உயிர்கள் பிறந்து உருவானாலும் அது தன்னுணர்வினால் உருவாக்கிக் கொள்ளும் பிரபஞ்சம் மட்டுமே, அதன் இறப்புடன் அப்பிரபஞ்சம் மறைந்து போகிறது. இந்த வாழ்வினை நிலையானது என்று நினைத்து அந்த உயிர் மயங்குகிறது. இறக்கும் தருவாயில் இவ்வாழ்வு கயிறு மட்டும் தான் என்று அறிந்து கொள்ள அந்த உயிரால் முடியுமா என்ன?. தெரியவில்லை. ஆனால் இங்கிருக்கும் வாழ்வில் எத்தனை இறப்புகளை பார்த்தாலும் இந்த வாழ்க்கையை மாயை என்று உணர தன்னுணர்வு அவ்வளவு எளிதில் விடாது என்பதும் உறுதி.
இந்த என்றுமிருக்கும் கேள்வியை நினைவுகளின் வழி எந்த நிகழ்வுகளும் இல்லாமல் கதையில் கையாண்டிருப்பது, வாசகனுக்கு அனைத்து நடைமுறை வழிகளையும் கத்தரித்து அவனை கேள்வியை மட்டும் பற்றிக் கொண்டு பயணிக்க வழி செய்கிறது. கயிற்றரவு என்ற முடிவை தன்னுணர்வுடன் அடைய எனக்கு வழியிருக்கிறதா என தெரியவில்லை. இந்த அசாதாரண கதையின் தலைப்பின் வழி இதன் பேசுபொருளை நமக்கு முன்னே அறிமுகப்படுத்தி விட்டாலும், வாசகனின் தன்னுணர்வுடன் கதையின் உரையாடல் நிகழ்வது சாத்தியமாகிறது. தாவிச் செல்லும் நடையும், பெரிய வாழ்வினை சிறு பத்தியில் அடக்குவதினால் வரும் செறிவும் கதையை ஆழமாக்கியளிக்கிறது.
மகேந்திரன்: நேரம் என்பது அளவா(quantitative) இல்லை தரமா (Qualitative)? இந்த விவாதம் அறிவியலுக்கும் தத்துவத்திற்க்கும் இடையே மேற்க்கில் நடந்தது. நான் பெர்குசன் தரப்பை எடுத்துச் சொலிறேன். ஒருவருக்கு மனதுக்கு இனிய நிகழ்ச்சி நடக்கும் என்றால் நேரம் விரைவாகச் சென்று விட்டது என்பார். ஆனால் புற உலகின் கடிகாரம் அப்படி இல்லை. அது நொடி, வினாடி, மணி என மிகச் சரியாக பகுக்கப்பட்டது. ஒவ்வொரு நொடியும் முன் எப்போதும் இல்லத புதிதான ஒன்று என அறிவியளாலர்கள் கருதுகிறார்கள் ஆனால் பெர்குசன் சொல்கிறார். முன்னால் இருந்த அறிவைக்கொண்டுதான் இப்போது (தற்காலம்) இருக்கும் ஒன்றை அறிந்து கொள்கிறோம் அல்லது மதிப்பிடுகிறோம். ஒரு வகையில் நேரம் என்பது நம் நினைவாக உள்ளது. அது ஒரு தொடர்ச்சி என்கிறார். தனித்தனியான துண்டுபட்ட ஒன்று எனச் சொல்வதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படி நேரத்தை உணர்வது எது? நான் என்கின்ற தன் உணர்வு.
ஆயுர்வேதத்தின் பரமாத்தம் அணு என்ற ஒன்று உண்டு அது தான் பிறக்க வேண்டும் பளர வேண்டுமென நினைத்து ஆணின் விந்துவுக்குள் சென்று அன்னமயமான உடலை எடுக்கிறது. மேற்கத்திய உளவியலார்கள் குழந்தை பிறந்த சில மாதங்கள் கழித்துதான் அதற்கான தந் உணர்வு வருமெனச் சொல்கிறார்கள். அப்படியான ஒரு நிகழ்வுதான் அப்பா பிள்ளையைப் பார்த்து யார் அப்பா யார் மகன் எனக் கேட்க்கும் இடம். இது தான் தான் என கண்டுகொள்கிறான் அந்தச் சிறுவன். அப்படியாக நான் என்ற தண்ணுர்வு உருவாகிறது.
கயிற்றவு என்பது பெளத்த மற்றும் வேதாந்த மரபின் உவமானம். இருட்டில் கயிற்றைப் பார்க்கும் ஒருவன் அது பாம்பென நினைத்து பயப்படுகிறான். சிறிது வெளிச்சம் பட்டது அது கயிறு என உண்மையைக் கண்டுகொண்டு நிம்மதியடைகிறான். ஆத்மா தன்னை தனி என அறியாமையால் உணர்ந்து கொள்கிறது அப்படித்தான் இந்த காலம் இடம் எல்லாம் வேறு வேறாக இருக்கிறது. ஆனால் ஆன்மா தான் பிரம்மம் என்று உணரும் போது நான் அழிந்து எல்லாம் ஒன்றாக ஆகும்.
இந்த கதையில் நிறைய வேதாந்த சார்ந்த பகுதிகள் வருகின்றன உதாரணமாக வீடு பிரகிருத்தியுடன் சேர்கிறது என வருகிறது. சாங்கிய/வேதாந்தம் தெரிந்த ஒருவர் மட்டுமே இன்னும் நுட்பமாகச் செல்லக்கூடிய இடம். இந்தக் கதையே வேதாந்த தரிசனத்தின் கதைதான்.
சிறுகதை வடிவம் சார்ந்து சில கேள்விகள் இருக்கலாம் இது வடிவ ஒருமையை அடைந்துவிட்டதா என? செவ்வியல் சிறுகதை வடிவை அடையவில்லை. ஆனால் வாசகனின் மனதில் என்னவிதமான பாதிப்பை செலுத்த வேண்டுமோ அதைச் செய்துவிட்டது என்றுமட்டுமே சொல்லலாம். இலக்கியத்திற்கு வடிவம் என்றுமே ஒரு அளவுகோல் அல்ல. சின்ன எழுத்தாளர்களுக்கு அது முக்கியம். ஒரு மாஸ்டர் அதனைத் தாண்டித்தான் செல்வான். வடிவம் சார்ந்த ஆராய்ச்சியை பின் ஒரு நாள் விரிவாகச் செய்யலாம், அதிலிருந்து புது வடிவம் எதுவும் வருகிறா எனப் பார்க்கலாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக