152A


152A

கான்கீரிட் வீட்டின் மீது மிகச் சிறிய உந்துகணை செலுத்தி விழுந்தது. காந்தி தன் கண்ணாடியைச் சரி செய்து பார்க்கும் போது அந்த வீடு இருந்த இடத்தில் சிறிய குழி மட்டும் இருந்தது. தன் ஊன்றுகோலை சற்று பலமாக பிடித்துக்கொண்டார். அவரது உதடுகள் நடுங்கின. அவரால் என்ன நடந்தது எனப் புரிந்துகொள்ள முடியவில்லை. மனுவை காணவில்லை. தான் மட்டும் இப்படித் தனியாக இருப்பதை நினைத்து யோசனையில் ஆழ்ந்தார். அவரால் முன் பின் நடந்த சம்பவங்களை நினைவில் கொண்டு வர முடியவில்லை.

இருபது வயதுக்குள் இருக்கும் பத்து பேர் கொண்ட கூட்டம் கூச்சலிட்டுக்கொண்டு அந்த தெருவில் ஓடிவந்தது. காந்தியின் கைத்தடியை தட்டிவிட்டு ஹோய்..என அவர்கள் கூச்சலிட்டவாறு ஓடிப்போயினர்.

பின்னாலே நான்கு பேர் கொண்ட கும்பல் கைகளில் கருநிற நாகம் போன்ற துப்பாக்கியை வைத்துக்கொண்டு மிரட்டும் தோரணையில் நடந்து வந்தனர். அவர்களது நடையில் ஒரு நிதானமும் திமிரும் தொனித்தது. காந்தி சற்று தடுமாறி தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். கீழே விழுந்த குச்சியை எடுத்து தன் கண்ணாடியைச் சரி செய்துகொண்டு பார்த்தார்.

பிச்சைக்காரனே! உனக்கு இங்கே என்ன வேலை? என கைகளில் காப்பு போட்டிருந்த இளைஞன் கேட்டான். மற்ற மூவரும் அந்த உந்துகணை செலுத்தி விழுந்த இடத்தைப் பார்த்தனர். அவர்களுக்குள் சிறு புன்னகையைப் பரிமாறிக்கொண்டனர். காந்திக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை.

நீங்க யார் பக்கம்? என்றான் பனியன் மட்டும் போட்டிருந்த இளைஞன். மற்ற மூவரும் பலமாக சிரித்தனர். காப்பு போட்ட இளைஞன் துப்பாக்கியை காந்தியின் தலையின் மீது வைத்தான். கண்களை சிமிட்டி நமட்டுச் சிரிப்பு சிரித்தான். காந்தி தன் சாந்தமான முகத்தை அந்த அதிர்விலிருந்து மீட்டுக் கொண்டு வந்திருந்தார். அவனுக்கு அந்த சாந்தம் எரிச்சலைக் கொடுத்தது. மூர்க்கமாக கத்தினான். ஏய்……கிழவா.. வாயைத் திறந்து பேசு.

என் பேர் காந்தி. எனக்கு வேற எதும் ஞாபகத்துல இல்ல என்றார்.

நீ யார் பக்கம் எனச் சொல்! என துப்பாக்கியை மேலும் தள்ளினான்.

சத்தியத்தின் பக்கம் என்றார். சிரிப்பலை. நான்கு பேர் கொண்ட கூட்டம் அவரை அப்படியே விட்டுவிட்டு நகர்ந்தது. காந்திக்கு மேற்கொண்டு என்ன செய்ய எனத் தெரியவில்லை. அப்போது பதின்பருவ பெண் ஒருத்தி ஓடிவருவது தெரிந்தது.

தாத்தா நீங்கள் யார்? இங்க என்ன செய்கிறீர்கள்? என அவள் கேட்டவாறு, அவரது கரங்களைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள். காந்தி அமைதியாக அது மனு என நினைத்துக்கொண்டு நடந்தார். அவர்கள் சிறு பதுங்கு குழிக்குள் செல்லும் போது திரும்பி காந்தியின் முகத்தைப் பார்த்தாள். அவள் கண்களைச் சிமிட்டவே இல்லை என்பதை காந்தி அப்போதுதான் கவனித்தார். சிறு சிறு பூனைமயிர்கள் மேலுதட்டுக்கு மேலே அரும்பி இருந்தன. அதற்குள் முன்னைப் போலவே காந்தியை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

அந்த பதுங்கு குழி டைல்ஸ் போட்டு முகமே அதில் பிரகாசிக்கும் படி இருந்தது. அங்கு சில உணர்வு கொம்புகள் போல ஆண்டெனாக்கள் இருந்தன. அந்தச் சிறுமி முகத்தை ஒரு மெஷினின் முன்னால் காட்டியதும் அதுவரை சாதாரண சுவர் என நினைத்த கதவு கீழிருந்து மேலே சென்றது.

காந்தியும் அவளும் உள்ளே நுழைந்தனர். காந்திக்கு கேள்வி கேட்க தோன்றவில்லை. உள்ளே சென்றால் குகைக்கோவில் போல வீடு இருந்தது. அவற்றில் கதவுகள் இல்லை. முன் அறை ஹாலாக இருந்தது. அதனை ஒட்டி வரிசையாக அறைகள் இருந்தன. அதிலும் கதவுகள் இல்லை. மஞ்சள் நிறத்தில் அறைகள் ஒளி வீசிக்கொண்டிருந்தன. ஹாலில் சோபா போடப்பட்டிருந்தது. அதனை ஒட்டி காய்ந்து போன நெற்கதிர்கள் போல இருந்த ஒன்றை ஜாடியில் போட்டிருந்தார்கள். காந்தியை அதில் அமரச் சொன்னாள். காந்தி அமைதியாக போய் அமர்ந்துகொண்டார்.

அவருக்கு எதிரே ஒரு பாலைவனக் காட்சி ஓவியமாக தீட்டி வைக்கப்பட்டிருந்தது. யாருமற்ற மணல் மேடுகள், வானம் ஒரு துளி மேகமில்லாமல் நீல நிறத்தில் இருந்தது. நிலவின் ஒளி அந்த மணல்வெளியில் பாலெனப் பொழிந்து கொண்டிருந்தது.

அப்போது காந்தி உலோகங்கள் உரசும் ஒலி கேட்டு தன்னிலை மீண்டார்.

ஒரு இயந்திர மனிதன் கண்ணாடி டம்ளரில் தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்து காந்தி முன்னால் நின்றான். காந்தி இயந்திர மனிதனை பார்த்தார். இயந்திர மனிதன் இன்னும் முன்னால் நகர்ந்து காந்திக்கு பக்கத்தில் வந்தான். தண்ணீரை வாங்கி அருந்தினார். வீட்டின் மேலே பல கேமராக்கள் இருந்தன. சில மிடறு தன் கன்னத்திலும், கோவணத்தின் மீதும் கொட்டியது. ஜில்..என இருந்தது. வெளியே இருந்த வெப்பம் இங்கு இல்லாமல் குளிராக இருந்தது காந்திக்கு ஒத்துக்கொள்ள முடியவில்லை. இருமினார்.

அந்தச் சிறுமி காந்திக்கு பக்கவாட்டில் அமர்ந்திருந்தாள். முன்னால் இருந்த சுவரின் திரையில் காட்சிகள் தெரிய ஆரம்பித்தன. வெடித்துச் சிதறிய பொருட்கள், தீ, வெளிச்சம், சத்தம் என இருந்தது அந்தக் காட்சி. இயந்திர மனிதன் ஓடிப் போய் ஒரு கப் சிரப்பை கொண்டு வந்தான். அது குறித்து அதிர்ச்சியுடன் இருந்த காந்தியைப் பார்த்து சிறு புன்னகையுடன் தன் தலையைச் சுட்டிக்காட்டினாள். காந்திக்குப் புரியவில்லை. இயந்திர மனிதன் அசையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான். காந்தி அந்த டம்ளரைக் கொடுத்ததும், ஒரு நொடி அவரை தலை முதல் பாதம் வரை ஆராய்வதைப் போல பார்த்துவிட்டு நகர்ந்தான்.

திரும்பவும் ஓவியத்தின் பக்கம் அவரது கண்கள் சென்றன. அதில் ஒரு சலிப்பை, ஏமாற்றத்தை உணர்ந்தார் காந்தி. தன் கண்களை சற்று கீழே நகர்த்தும் போது அங்கு சுவர் இல்லை, திரையாய் மாறியிருந்தது. அந்த திரை இப்போது உயிர் பெற்று இயங்கியது. அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். சுவரே திரையாய் மாறி என்னவென்னவோ படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. பாலைவன ஓவியத்துக்கு கீழே மற்றொரு வெடித்துச் சிதறும் படம் ஓடியது.

தனக்கு பக்கவாட்டுச் சுவரில் காந்தியைப் போன்ற ஒருவர் அமர்ந்திருப்பதை காந்தி பார்த்தார். அவரின் உடல் வெப்பம், ரத்த அழுத்தம் என பல விஷயங்கள் எண்களாக திரையில் ஓட ஆரம்பித்தன. அதில் சில சிவப்பு நிற எண்களும் பல பச்சை நிற எழுத்துகளும் இருந்தன.

நீ தனியாவா இருக்கற? அப்பா அம்மா எங்க? எனக் காந்தி கேட்டார்.

அவர்கள் போன வாரம் நடந்த ஒரு சண்டையில் இறந்துவிட்டார்கள். அதனைப் பற்றிப் பேச அனுமதியில்லை.

என்ன சண்டை? யாருடைய அனுமதி?

அதுகாறும் சாந்தமாக இருந்த அவள் மூர்க்கம் அடைந்தாள். நீங்கள் தெரிந்துகொண்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என வெடுக்கென பதில் அளித்தாள்.

அந்தக் கோபம் காந்தியிடம் மென் நகையைக் கொண்டு வந்தது. அதே சமயம் அவளது அலைபேசியின் திரை சிவப்பு நிறத்தில் எரிய ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து ஆட்டுக்குட்டியின் கழுத்தை அறுக்கும் போது கத்துவதைப் போல சத்தம் அதிலிருந்து வந்தது. ஒளிந்திருந்து தொட வருபவன் போல அந்த இயந்திர மனிதன் அறையிலிருந்து ஓடி வந்தான். அவனது கைகளில் நீல நிறத் தட்டில் ஒரு கண்ணாடி டம்ளரும், பல்லி முட்டை போல ஒரு மாத்திரையும், வெள்ளை நிற மருந்துக் குப்பியும் இருந்தது.

அவளது கண்கள் சிவந்து வாய் கோணிக்கொண்டது. ஏதோ சொல்ல வருபவள் போல இருந்தவள் சட்டென அந்த மாத்திரையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு தண்ணீரைக் குடித்தாள். தலையை நிமிர்த்தி சிவந்த கண்களில் மருந்தை இட்டாள். திரும்பவும் மருந்துக் குப்பியை அந்தத் தட்டில் வைக்க முயற்சிக்கும் போது முடியவில்லை. அந்த இயந்திர மனிதன் சிலை போல அப்படியே நின்றான். சரியாக வைக்க முடியாமல் மருந்துக் குப்பி தவறி தரையில் விழுந்து சிதறியது. அதிலிருந்து சிவப்பு நிறத் திரவம் ரத்தம் போலத் தெறித்து அது காந்தியின் மேலும் விழுந்தது.

அவளது செல்பேசி மெல்ல சிவப்பு நிறத்திலிருந்து வெள்ளை நிறமாக மாறியது. அதுவரை எரிச்சலைக் கொடுத்துக்கொண்டிருந்த சத்தமும் மெல்ல அடங்கியது. கோமாவில் இருந்தவன் போல இயந்திர மனிதன் சட்டென உயிர் பெற்று உடைந்த மருந்துக் குப்பியை தரையிலிருந்து எடுத்துக்கொண்டிருந்தான். திரை முழுவதும் இருள் கவ்வி இருந்தது. தன் தலையை மெல்ல திருப்பி காந்தியைப் பார்த்தாள். கண்கள் முன்னைப் போலவே இருந்தன.

உன்னோட பேரேன்ன? காந்தி கேட்டார்.

152A.

என்ன இது?

ஒருவருடன் மற்றவர்கள் தொடர்பு கொள்ள எளிதாக இருக்கும். உங்களைப் போன்றவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இது என்ன மெஷினுக்கு பேர் வைக்கற மாதிரி இல்ல இருக்கு? தன் பொக்கை வாய் தெரிய சிரித்தார் காந்தி.

அப்படி என்றால் நானும் ஒரு மெஷின் தான் என புன்னகைத்தாள்.

சட்டென தன் சிரிப்பை நிறுத்திவிட்டு அவளை உற்றுப்பார்த்தார்.

என் தலையிலே ஒரு சிப் இருக்கிறது எனத் தலையை தொட்டுக்காட்டினாள்.

அது என்ன செய்யும்?

எல்லாம்.

எல்லாம்ன்னா?

தன் கண்களை திரையில் உற்றுப்பார்த்தவாறு யோசித்தவள்.

எனக்கு பிடிச்சது என்ன. பிடிக்காதது என்ன. நான் யாரை விரும்புவேன். யாரை வெறுப்பேன். நான் என்ன வேலை செய்யணும். எங்கே வாழணும்.

அதாவது யோசிக்கற வேலைய?

அவள் ஆமாம் என தலையை ஆட்டினாள். அந்த வார்த்தையைக் கேட்டே ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன.

அப்ப நீ?

நான்?

அவளது மேல் உதடுகள் இழுத்துக்கொண்டு இன்னும் மேலே சென்றது. இடைவெளியுடனான பற்களும் அவளது இளஞ்சிவப்பான ஈறும், அவளை அதிகமான குழப்பத்தில் இருப்பவளைப் போலக் காட்டியது. அலைபேசி மெல்ல மஞ்சள் நிறத்துக்கு மாறியது. இப்போது பீப்.. பீப் என ஒலி வர ஆரம்பித்தது. திரை மெல்ல உயிர் பெற்று ஒரு செயற்கை மனிதன் தோன்றினான்.

ஹலோ! 152A!! தாங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?

சோம்பல் முறிப்பதைப் போல கைகளால் தடவி தன் உதட்டை மறுபடியும் பழைய இடத்துக்கு கொண்டு சென்றாள்.

பரவாயில்லை.

இன்று ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறீர்கள்? மேலும் உங்கள் மூளை யோசிக்க ஆரம்பிக்கிறது. அந்த கஷ்டத்தை நீக்கத்தானே எங்கள் சிப் எப்போதும் உங்களுடன் இருக்கிறது?

தலையை ஆமாம் என்பதைப் போல ஆட்டினாள்.

சட்டென அந்த செயற்கை மனிதன் திரும்பி காந்தியை பார்த்தான். காந்தி கவனமாக இந்த உரையாடலைக் கவனித்துக்கொண்டிருந்தார்.

நீ ஏன் இந்த மனிதரை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்தாய்?

அவரை எங்கோ பார்த்ததாக எனக்கு ஞாபகம். என் தந்தையைப் போன்றவர் என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது.

அவளது பேச்சை சட்டென இடைமறித்த செயற்கை மனிதன்.

இந்த மனிதன் மிக மோசமானவர். சிப் இல்லாதவர்களிலே இவர் மிக மிக மோசம். சிப் இல்லாதவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது எனத் தெரியும் அல்லவா?

மறுபடியும் தலையை ஆமாம் என ஆட்டினாள்.

உடனடியாக அவரை வெளியே அனுப்பு எனச் சொல்லிவிட்டு அந்த செயற்கை மனிதன் மறைந்துவிட்டான். திரை மறுபடியும் அணைந்துவிட்டது.

சற்று யோசனையோடு திரும்பி காந்தியைப் பார்த்தாள். காந்தி ஆழ்ந்த தியானத்துடன் இருப்பவரைப் போல இருந்தார். எப்படிச் சொல்லுவது இதை என்பதைப் போல அவளது முகபாவம் மாறியது.

நா இதுவரை ஒரு மனுசங்கிட்ட பேசலையா என தன் அதிர்ப்தியை தெரிவித்தார் காந்தி.

அவள் சிரித்தாள். நீங்கள் பேசுவதே அதன் இடம்தான். அதுதான் உங்களுக்கான பதிலை இப்போது கொடுத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருந்து வருகிறீர்கள் என நினைக்கிறேன் அல்லது நீங்கள் வேற்றுகிரக மனிதனாக இருக்க வாய்ப்புகள் அதிகம். சிரிக்கும் போது அவளது மேல் உதடு சிறியதாக இருப்பதாக காந்திக்கு தோன்றியது.

அத கழட்டிட்டு எங்கிட்ட பேச முடியுமா? எனக் காந்தி கேட்டார்.

அப்படி செய்வது முடியாத காரியம். நிறைய நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. மேலும் அதனை நான் கழட்ட வேண்டுமென்ற அவசியம் இல்லை.

ஏ?

என்னுடைய ரசனையை அது இருபத்து நான்கு மணி நேரமும் கவனிக்கிறது. அதனை நிறுத்திவிட்டால் அந்த நேரத்தில் நிகழும் எதுவும் அதனில் பதியாது. பிறகு நான் வேறு ஒரு மனிதராக மாறிப்போவேன்.

அதனால?

பிறகு அதனால் என்னை மிகச் சரியாக கணிக்க முடியாது. நான் எனக்காக தொடர்ந்து சிந்திக்க வேண்டி இருக்கும்.

மறுபடியும் திரையில் அந்த செயற்கை மனிதன் தோன்றினான். அவன் முகம் இப்போது சற்று கடுகடுப்பானதாக இருந்தது.

152A! நீங்கள் தவறு செய்கிறீர்கள். அந்த மனிதரை உடனே வெளியே போகச் சொல்லுங்கள் என்றான்.

பதில் எதும் சொல்லாமல் அப்படியே இருந்தாள்.

எங்கள் சேவையை நிறுத்தி வைக்க வேண்டி இருக்கும். உடனே முடிவு செய்துகொள்ளுங்கள்.

அலைபேசி மறுபடியும் சிவப்பு நிறத்துக்கு மாற ஆரம்பித்தது. ஆடு கழுத்து அறுக்கும் சத்தம் மனதில் ரணமாக கேட்க ஆரம்பித்தது. இயந்திர மனிதன் ஓடி வந்தான். இந்த முறை அவள் மாத்திரையை எடுக்கவில்லை.

செயற்கை மனிதன் நிகழ்வுகளை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான். அவள் கண்கள் சிவக்கத் தொடங்கின. அழுது அழுது தொண்டை வற்றிப்போனவள் போல் இருந்தது அவளது குரல்.

தாத்தா நீங்கள் சென்றுவிடுங்கள். உங்கள் குக்கிராமத்திற்கே சென்றுவிடுங்கள்.

மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள் 152A என்றான் அந்த செயற்கை மனிதன்.

தாத்தா நீங்கள் சென்று இடப்பக்கம் திரும்புங்கள். அங்கே என் காதலன் இருக்கிறான். அவன் உங்கள் ஊருக்கு கொண்டு போய்விட்டுவிடுவான். செல்லுங்கள் என்றாள்.

காந்தி மெல்ல யோசனையில் ஆழ்ந்தார். பிறகு இந்த சிப் சரியாத்தா யோசிக்கும்ன்னு நீ நம்பறயா? என்றார்.

இந்த முறை அவள் தலையை எந்தப் பக்கமும் ஆட்டவில்லை.

காந்தி மெதுவாக எழுந்து வெளியே வந்தார். அப்போது அவள் மருந்தை வாயில் போட்டு நீரை ஊற்றிக்கொண்டிருந்தாள். திரையில் செயற்கை மனிதன் மறைந்து மறுபடியும் அந்த நகரத்தின் மேப் தெரிய ஆரம்பித்தது. சில இடங்கள் வெடித்து சிதறிக்கொண்டு இருந்தன.

வெளியே வந்த காந்தி அவளது பதுங்கு குழி முன்னால் சம்மணம் இட்டு அமர்ந்திருந்தார். அவரது மனது கொதி நிலையில் இருந்தது. அப்போது இன்னொரு உந்துகணை செலுத்தி அவருக்கு இடப்பக்கம் இருந்த ஒரு பதுங்கு குழி மேலே விழுந்தது. அவரது கண்ணாடியை மண் நிரப்பியது. கண்ணாடியை கழற்றி தன் கோவணத்தில் துடைத்தார்.

திரும்பவும் கண்களில் மாட்டிக்கொண்டு பார்க்கும் போது 152A வேகமாக அவளது பதுங்கு குழியில் இருந்து வெளியே ஓடிவந்தாள். அவளது கண்களில் நீர் வடிந்துகொண்டிருந்தது. காந்திக்கு எதிரே நின்றுகொண்டு கைகளை வாயால் மூடியவாறு உந்துகணை விழுந்த இடத்தைப் பார்த்து குமறினாள். காந்தி பொறுமையாக எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்.

 அவளது தொண்டை மேலே கீழே இறங்கியது. அப்படியே காந்தி முன் அமர்ந்துகொண்டாள். தலை நடுங்கிக்கொண்டிருந்தது. கண்களில் இருந்து நீர் நிற்காமல் வழிந்துகொண்டிருந்தது. அவளது அலைபேசி தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தது. அலைபேசியை நடுங்கும் கைகளால் எடுத்துப்பார்த்தாள். அது அடர் சிவப்பு நிறத்தில் இருந்தது. பின்னாலே அந்த இயந்திர மனிதன் வேகமாக ஓடிவந்தான். அதே நீல நிறத் தட்டு.

“உங்களுடைய உணர்ச்சி உச்சத்தில் இருக்கிறது. அதனால் எங்களின் கட்டுப்பாட்டை மீறிப் போய்க்கொண்டிருக்கிறீர்கள். தயவுசெய்து எங்கள் சிப் சொல்வதைக் கேட்கவும்” என வார்த்தைகள் அந்த அலைபேசியின் திரையில் ஓடிக்கொண்டிருந்தது.

அலைபேசியில் அதன் அமைப்புக்குள் சென்று சிப்பை அணைத்துவிட்டாள். ஓடி வந்து கொண்டிருந்த இயந்திர மனிதன் அப்படியே நின்றுகொண்டான். ஒரு அசைவு கூட இல்லை.

அப்போது மெல்ல சிறு பறவை போல பறந்து வந்த மிகச் சிறிய உந்துகணை செலுத்தி 152A மேல் வந்து விழுந்தது. காந்தி அந்த அதிர்வை உணர்ந்தார்.

தரையில் விழுந்து கிடந்த காந்தி மெல்ல கண்களை விழித்தார். பாதி எரிந்து போயிருந்த தகரக் குடிசையின் கதவு இல்லாத வீட்டில் இருந்தார். இன்னும் இருள் நீங்காமல் இருந்தது.

பாபு எழுந்து இருக்கிற நேரம். நவகாளியில் இருந்து அடுத்த கிராமம் செல்ல வேண்டும். சீக்கிரம் தயாராகுங்கள் என பேச்சுக் கேட்டது காந்திக்கு.


- மகேந்திரன்

கருத்துகள்

விருப்பமான பதிவுகள்

கயிற்றரவு - சிறுகதை விமர்சனம்

ஒருநாள்கழிந்தது - சிறுகதை விமர்சனம்

குளத்தங்கரை அரசமரம் - சிறுகதை விமர்சனம்