அடகு- சிறுகதை குறிப்பு


எழுத்தாளர்: ந.பிச்சமூர்த்தி

காலம்: 1944

எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு: 

                ந. பிச்சமூர்த்தி (ஆகஸ்ட் 15, 1900 - டிசம்பர் 4, 1976) தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அறியப்படுபவர். கட்டுரையாளர், சிறுகதைகள், நாடகங்கள், இலக்கியத் திறனாய்வுகள் எழுதியுள்ளார்.வாழ்விலும் படைப்பிலும் கு.ப.ராஜகோபாலனுடன் இணைந்து செயல்பட்டு, அவருடைய இரட்டையர் என்று கூறப்பட்டவர். கு.ப.ராஜகோபாலனின் கதைகளுக்குரிய அதே தளத்தில் ஆனால், சற்று தத்துவார்த்தச் சாயலுடன் எளிய மக்களைப் பற்றி ஆழ்ந்த மனிதாபிமானத்துடன் எழுதியவர் பிச்சமூர்த்தி.

சிறுகதை சுட்டி:

            https://www.sirukathaigal.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-3/

நந்தி இலக்கிய வட்டம் குறிப்பு: 

            கா சிவா: தமிழ் புதுக்கவிதையின் பிதாமகர் என அழைக்கப்டும் ந. பிச்சமூர்த்தியின் சிறுகதை. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியை இக்கதை காட்டுகிறது.

    கொத்தடிமை என்ற பதத்தைப் பற்றி அறிந்துள்ளேன். மொத்தமாக முன்பணம் வாங்கி கடனை அடைத்து விட்டு குடும்பத்தோடு பெருமுதலாளிகளிடம் அடிமையாக பணியாற்றுவது. அவர்கள் செய்யும் பணிக்கான கூலியை கடனுக்கான வட்டிக்காகவும் அசலுக்காவும் தொடர்ந்து பிடித்துக் கொண்டே யிருப்பார்கள்.  தப்பிச் செல்ல முடியாதவாறு பலமான காவலும் போட்டிருப்பார்கள். கடன் பட்டவர்கள் அதிலிருந்து மீளவே இயலாமல் சிக்கிக் கொள்வார்கள்.

    அடகு  சிறுகதையில்  முனிசிபாலிடியில் பணியாற்றும் ஒருவன் தன் மனைவியையும் மகனையும் மூன்று மாதத்தில் திருப்பிக் கொள்வதாகக் கூறி தன் சக சமூகத்து மனிதனிடம் பத்து ரூபாய்க்கு அடகு வைக்கிறான். இது மிக விந்தையான செய்தியாக உள்ளது. 1940- களில் தமிழ்நாட்டு நகராட்சி ஒன்றில் இவ்வாறு நடந்துள்ளது என்பதைக் கொண்டு ஆய்வாளர்கள் யாரேனும் ஆய்வை முன்னெடுக்கலாம்.

    இச்சிறுகதையில் முனிசிபாலிடியில் மாதம் பத்து ரூபாய் சம்பளம் வாங்கும் பிரம்மன், பத்து ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு மனைவி கருப்பியையும் மகனையும் சுடலைமுத்துவிடம் அடகு வைக்கிறான். கருப்பி செய்யும் வேலைக்கான கூலியை வட்டிக்கென சுடலைமுத்து வாங்கிக் கொள்கிறான். அவர்களின் சாப்பிட்டிற்கு கருப்பிக்கு முனிசிபாலிடியில் கொடுக்கும் பணத்தை ஈடாகக் கொள்கிறான். தீபாவளிக்காவது மீட்குமாறு பிரமனிடம் கருப்பி கெஞ்சியபோதும், அவன் வாங்கிய சம்பளத்தை குடிக்காக செலவு செய்துவிடுகிறான். தீபாவளியை கொண்டாட முடியாமல் துயரத்தில் இருக்கும் மனைவியையும் பையனையும் பிரமன் மீட்டானா இல்லையா என்பதைக் கூறி கதை முடிகிறது.

    புதுமைப்பித்தன் தன் சாகா வரம் பெற்ற சிறுகதைகளை எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இந்தக் கதையும் எழுதப்பட்டுள்ளது. ஆனாலும், புதுமைப்பித்தன் கதையோடு ஒப்பிடாமல் இக்கதையைப் பற்றி மட்டும் பார்ப்போம். கதைக்கான கரு இதுவரை நான் வாசித்திராத புதுமையானதாக உள்ளது. மற்றபடி பிரமன் தன் சம்பளத்தை  நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது இப்போதும் நடப்பதுதான். நல்லவேளை இப்போது மனைவியை அடகு வைத்துக் கொள்ளும் வழக்கமில்லை. ஆனால், இப்போதும் கடனைக் கட்ட முடியாதவர்களிடம் "உன் பொண்டாட்டிய கொண்டாந்து என் வீட்ல விட்டுட்டு போ. கடனைக் கட்டிட்டு கூட்டிட்டு போ" எனக் கூறி அவமானப்படுத்துவதைக் காண்கிறோம். அவமானப்படுதற்கு காரணம் அப்பெண்ணை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதற்காக அழைப்பதாக கருதுவதால்தான். எண்பதாண்டுகளுக்கு முன் இருந்த அடகு வைத்துக்கொள்ளும் வழக்கத்தின் நீட்சியாகவே இந்த வசை இன்றும் தொடர்கிறது எனத் தோன்றுகிறது.

    கதையின் உரையாடல் வட்டார வழக்கில் அமைந்துள்ளது. அடித்தட்டு மக்களின் பேச்சு மொழியை அப்படியே பதிவு செய்துள்ளதாகத் தோன்றுகிறது.   இலக்கியத்தில் வட்டார வழக்கு பிற்காலத்தில்தான் வந்ததாக எண்ணியிருந்தேன். தொடக்க காலத்திலேயே இடம் பெற்றிருந்ததை இக்கதையின் மூலம் அறியமுடிகிறது.

    சிறுகதைக்கான தொடக்கம், முரண், உச்சம் போன்ற இலக்கணங்களின்றியும்,   எந்த உள்ளடுக்கும் இல்லாமலும் இக்கதை எழுதப்பட்டிருந்தாலும் ஒரு சுவாரசியமான வாசிப்பனுபவத்தை தருகிறது. இக்கதை, தன்னுள் கொண்டிருக்கும் களத்திற்காக காலத்தைக் கடந்தும் நிலைக்கும் எனத் தோன்றுகிறது.

            மகேந்திரன்: இந்தச் சிறுகதை ஒரு யதார்த்தவாத அழகியல் கொண்டது. அடித்தள மக்கள் பற்றிய சித்திரத்தை இந்தக் கதை முன்வைக்கிறது. பிரமன் தன் மனைவி மக்களை அடிமையாக வைத்திருந்தான். எப்படி அவன் குடிக்கு அடிமையாகி கிடந்தான்? அதனால் அடிமையாக இருந்த குடும்ப நபர்கள் காப்பாற்றப்பட முடியாமல் கிடக்கிறார்கள் என்பதுதான் கதை.

    அவர்களை விடுதலை பற்றிய எண்ணம் கொஞ்சமும் இல்லாதவர்கள் என்று சொல்லலாம். அடித்தள மக்களின் உழைப்பை சுரண்டி எடுத்துக்கொள்கிறது இந்தச் சமூக அமைப்பு. மீதம் இருக்கும் கொஞ்சப் பணத்தில் அதிலிருந்து தப்பிக்க இருக்கும் ஒரே வாய்ப்பும் அந்த கள்ளுக்கடையால் பறிபோகிறது. எப்படியும் தப்பிவிடாமல் இருக்க சமூக உருவாக்கி இருக்கும் இந்த அமைப்பு ஒரு அடிமைத்தனத்தை கொண்டு வருகிறது. இதிலிருந்து அந்த மக்கள் விடுதலை பற்றிய எண்ணங்களை கொண்டிருப்பது சற்று கடினமானதாகவே இருக்கிறது. தீபாவளிக்கு தன் வீட்டிற்குக்கூட போக முடியாத சூழல் இருக்கிறது. தான் இணாமாகப் பெற்றுவரும் காசைக்கூட அந்தப் பண்ணையான் எடுத்துக்கொள்ள நினைக்கிறான்.

    அப்படி இருந்தும் அவர்களுக்கு இருக்கும் ஒரு வாய்ப்பு விழிப்புணர்வு. இந்தச் சமூகத்தைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல தன்னையும் தன் குடும்ப வாழ்க்கையையும் அமைத்துக்கொள்வது. ஆனால் இவர்கள் பெரும்பாலும் குடியில் மூழ்கி அனைத்தையும் இழக்கிறார்கள். அவர்கள் அடிப்படையில் உணர்ச்சிகளை முன்வைப்பவர்களாக இருக்கிறார்கள். தன் மனைவி பிரமனிடம் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் அவன் மசியவில்லை. தன் மகன் பட்டினி கிடப்பதுகூட முக்கியமில்லாததாக மாறிப்போனது. ஆனால் தன் மனைவி நடுத்தெருவில் நின்ற நிலை உடனே பன்றியை விற்று மீட்கத் தோன்றிவிட்டது. அவனது மனைவியும் கூட அவன் வரும்வரை இணாம் பணத்தை தர மாட்டேன் என சண்டக்கோழி போல நின்றவள். இவனைக் கண்டதும் அந்தப் பணத்தை தூக்கி எறிந்துவிட்டாள். அப்படியானால் அதுவரை சண்டை இட்டதற்கு என்ன பொருள் இருக்க முடியும்? உணர்ச்சிகளுக்கு அடிமையாவதும் முக்கியமான காரணி.

    உண்மையிலேயே பிரமன் அடகு வைத்த மனைவியை மீட்டுவிட்டானா? ஆமாம், அது தற்காலிகமானது. இந்த அடிமைத்தனத்தை தூண்டும் காரணிகள் இருக்கும் வரை இந்த அடித்தள மக்களை ஏமாற்றும் அடகும் இருக்கும்.

    அடித்தள மக்கள் வாழ்க்கை இந்தக் கதையில் வரும் சித்திரத்தையே இன்றும் ஒத்திருக்கிறது. அந்த வகையில் இந்தக் கதை, அடித்தள மக்களைப் பேசும் சாமானிய தளத்தில் இருக்கும் யதார்த்தவாதக் கதையின் ஆரம்பப்புள்ளி.

கருத்துகள்

விருப்பமான பதிவுகள்

கயிற்றரவு - சிறுகதை விமர்சனம்

ஒருநாள்கழிந்தது - சிறுகதை விமர்சனம்

குளத்தங்கரை அரசமரம் - சிறுகதை விமர்சனம்