செல்லம்மாள் - சிறுகதை விமர்சனம்

 



எழுத்தாளர்: புதுமைபித்தன்

காலம்: 1930~1940

எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:

            புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர். 


பிற விமர்சனம்:

ஷங்கர்ராமசுப்ரமணியன் 

கமல தேவி - சொல்வனம்

விமர்சனம்:

    லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன் :

இது ஓர் காதல் கதை !

ஆம். இதுதான் இதற்கான சரியான துவக்கமாக இருக்க முடியும்.

தமிழ் நவீன இலக்கியத்தின் பிதாமகன் என புதுமைப்பித்தனை நம் இலக்கிய உலகம் ஏன் ஏற்றுக்கொண்டது எனும் வினா எழுமேயானால் அதற்கான தலைசிறந்த உதாரணங்களில் ஒன்றாக நிச்சயம் இக்கதையை கூறமுடியும். 

தன் மனைவி செல்லம்மாள் இறந்ததை உறுதி செய்யும் பிரமநாயகம் பிள்ளையை நிகழ்வுக்கு முந்தைய இரண்டு நாட்கள் பின்தொடர்ந்து அந்த முடிவுவரை நம்மை கொண்டுவந்து சேர்க்கிறார் ஆசிரியர். கதையில் பிரமநாயகம் பிள்ளையின் சுருக்கப்பட்ட பூர்வீகமும், அவரது மனவோட்டங்களும், சூழலும், சூழலை அவர் எதிர்கொள்ளும் விதமும் கூறப்படுகிறது. மிக யதார்த்தமான, உணர்ச்சிக் கொந்தளிப்புகளற்ற, புதுமைப்பித்தனுக்கே உரிய அங்கதத்துடன் கதை நகர்கிறது. 

இறப்பின் நிகழ்வை நாம் பின்தொடர்கிறோம் எனும் பிரக்ஞை நமக்கு  இருந்தாலும், நாலு வரிக்கு ஒருமுறை புன்னகை தவழாமல் நாம் இப்படைப்பை அணுகமுடியாது. ஆனால் இறுதியில் கண்ணீர் தளும்பாமல் இக்கதையை கடக்கவும் முடியாது. ஆசிரியரே இதற்கான விளக்கத்தை 'அருகிலிருந்த சிமினி விளக்கை ஏற்றினார். அந்த மினுக்கட்டான் பூச்சி இருளைத் திரட்டி திரட்டிக் காட்டியது' எனும் குறியீடாகத் தருகிறார். பிழைத்துவிடுவாள் என விட்டுவிட்டு வரும் நம்பிக்கை தரும் வெளிச்சம் உண்மையில், இறப்பெனும் இருளை செறிவாக்குகிறது என்பதற்கான குறியீடிது. எனினும், இக்கூரிய அங்கதச் சிதறல்கள், சோகத்தை இன்னும் தீவிரப்படுத்துகின்றன என்றும் புரிந்து கொள்ள முடியுகிறது.

இக்கதை 1943-ல் எழுதப்பட்டுள்ளதால் அக்காலச் சூழலை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இரண்டாம் உலகப் போரின் தாக்கம் உலகமெங்கும் எதிரொலித்த காலகட்டம். காலனீய இந்தியாவிலிருந்து தானியங்கள் போர் முனைகளுக்கு சென்று கொண்டிருந்தன. வங்கப் பெரும் பஞ்சத்தின் தாக்கம் இந்தியப் பெருநிலமெங்கும் பரவியது, இத்துடன் நகரமயமாக்கமும் சேர்ந்து கொண்டதால் மக்கள் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். ஆலைகள், பொருட்களுடன் சேர்த்து பெருமளவில் தொழிலாளர்களையும் உருவாக்கின. ஆனால் தொழிலாலர்களுக்கான உரிமைகளும் சட்டங்களும் உருவாகிவர இன்னும் நெடுங்காலமிருக்கிறது. 

பிரமநாயகம் பிள்ளை, தன் கல்வியை நம்பி செல்லம்மாளுடன் நகரத்துக்கு வருகிறார். நகரம் அனைவருக்கும் ஒன்று போல தன்னை வெளிக்காட்டுவதில்லை. அது பல படிநிலைகளைக் கொண்ட தலைகீழாக்கப்பட்ட முக்கோணம் போன்றது. அதிகாரத்தின், பணத்தின் எடை ஒருவரை அதன் முதல் நிலைக்கு கொண்டு செல்லும். முதல் நிலையில் இடம் குறைவு. அதிகாரத்தின், பணத்தின் இருப்புக்கேற்ப ஒருவர் எந்த படிநிலையில் இருக்க வேண்டியவர் என்பதை நகரம் தீர்மானிக்கும். அவர் இருக்கும் நிலைக்கேற்ப அவருக்களிக்கப்படும் வசதியும், வாய்ப்பும் மாறுபடும். 

கிராமங்களிலிருந்து பிழைக்கவரும் அனைவரும் இயல்பாக நகரத்தின் விளிம்பில் நிறுத்தப்படுகிறார்கள்.  பிள்ளையின் வசிப்பிடம் அதன் குறியீடாகிறது. கிராமத்திலிருந்து முழுதும் வெளியேறவும் முடியாது நகரத்தினுள்ளே நுழைவும் முடியாதிருக்கும் இவர்களின் நிலையை திரிசங்கு சொர்க்கம் என்கிறார் ஆசிரியர். அவர்கள் இருவருக்கும் தங்கள் கிராமத்திற்கு செய்வதென்பது கிளர்ச்சியூட்டும் பகல் கனவாகிறது. ஒருவேளை செல்லம்மாள் தன் கிராமத்திற்கு திரும்பியிருந்தால் தேறியிருக்கவும் கூடும். தன் கடைசி நேரத்திலும், ஊர் திரும்புதல் பற்றி செல்லம்மாள் பிதற்றுவதிலிருந்து இதை ஊகிக்க முடியும். திரிசங்கு சொர்க்கத்தின் உண்மையான பிரச்சனை அது சொர்க்கத்திற்கு செல்லமுடியாது என்பதல்ல, அதனால் பூமிக்கும் திரும்ப முடியாது என்பதுதான். 

எது இக்கதையை ஓர் சிறந்த காதல் கதையாக்குகிறது? வீரத்திலும், விவேகத்திலும் சிறந்த, சகல கலைகளிலும் வல்லவரான கதாநாயகனும் இல்லை. அழகில், பண்பில், மிகச் சில தருணங்களில் மட்டும் குறிப்பிடப்படும் சாதூர்யத்தில் சிறந்த கதாநாயகியும் இல்லை. பல தடைகளை தகர்த்து அவர்கள் ஒன்றினையும் சித்திரமும் இல்லை. பிரிவால் பசலைப் படர்தலும், கைவளை கழல்தலும் இல்லை. சொல்லப் போனால் பிள்ளையவர்கள் செல்லம்மாள் இறந்ததும் ஆசுவாசம்தான் கொள்கிறார். எனில் எது என்னை இதை ஓர் காதல் கதை என எண்ணச் செய்தது?

இப்படிச் சொல்வேன். இக்கதை அனறாடத்தின், கவர்ச்சியற்ற நடைமுறையின், நம்முடனே நடமாடினாலும் நம் கண்ணிலும், கருத்திலும் படாமலேயே வாழ்ந்து, மறையும் எளிய இரு மனிதர்களின் வாழ்வை, அன்னியோன்னியத்தை, சாவின் தருவாயிலும் எஞ்சிய தன் சக்தியை தன் துணைக்காக செலவழிப்பதை, கண்முன்னே இறந்து கொண்டிருக்கும் தன் துணையை தன் சக்திக்கும் மேல் சென்று எவ்வகையிலேனும் காப்பாற்றிவிட முயலும் மனிதனின் சுயநலமற்ற அன்பையே நான் காதல் என்கிறேன். 

இதை சற்றும் அரிதாரமற்று, போலி பாவனைகளற்று அப்படியே கடத்துவதாலேயே இக்கதை சிறந்த காதல் கதையாகிறது. கதையின் இறுதிப் பத்தியில் ஆசிரியர் உத்தேசிப்பதும் இதையே எனத் தோன்றுகிறது. 

ஆம். கூலிக்காகவோ, கடமைக்காகவோ போலியாக செய்யப்படும் கலைகளுக்கு, காதலுக்கு எதிராக தொடுக்கப்பட்ட இரட்டைச்சங்கு பிலாக்கணம் இக்கதை.

    திருமலை

ஒரு மனிதனுக்கு ஒருவிதமான பற்றுக்கோடாக இருப்பது, இன்னுமொரு உயிர்தானே, எவ்விதமேனும் அது அவனுக்கு வாழ்வதற்க்கான ஒரு நம்பிக்கையை அளிக்கும்.  

விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சில உறவுகளை மனிதன் எவ்விதத்திலும் கை விடுவதில்லை, இது பெரும்பாலும் ஆதியில் இருந்து மனித குணமாகவே இருந்து வருகிறது, இதில் ஞானிகளை நாம் கணக்கில் எடுக்கத்தேவையில்லை, மேலை நாடுகளில் நெகிழ்வான உறவுகளின் தாக்கத்தினால் பெரும்பாலும் மனிதன் பாதிக்கப்படுகிறான்.

மனிதன் என்பவன் எப்போதும் கூடித்திரிவதில் ஆர்வமுள்ளவனாக, கூடி வாழ்வதில் இன்பம் காணுபவனாகவும் இருந்து வருகிறான். அது கொடுக்கும் இன்பம், துன்பம்  அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறான். பெரும்பாலும் ஒரு கட்டத்தில் குடும்ப வாழ்க்கை என்பது முற்றிலும் உடல் இன்பத்தின் தேவை குறைந்து, முற்றிலும் பிறரின் தேவையை பூர்த்திசெய்து வாழ்வதிலேயே கழிந்துவிடுகிறது, அதுவே நம் மரபு பரிந்துரைக்கும் வழியும் ஆகும்.

பிரமநாயகம் பிள்ளை என்ற மைய கதாபாத்திரத்தின் மூலமாக அக்காலத்திய சமூக வாழ்வையும் அதன் பிரச்சனைகளையும், அப்போது உருவாகிவந்து கொண்டிருந்த பெரும் இடம் மாற்றங்களின் ஊடாக பெண்களுக்கு உருவான உளவியல் பிரச்சனைகளையும் ஊடும் பாவுமாக சொல்லிசெல்கிறார்.

பிரமநாயகம் பிள்ளை வசதியான குடும்பமே, ஆனால் ஏதோ காரணங்களால் ஊரைவிட்டு சென்னையின் வெளிவட்டாரத்தில் வாழ்கிறார். பொதுவாக கல்வி என்பது எக்காலத்திலும் மனிதனை ஒரு நுகர்வுப்பொருளாகவும், நுகர்பவனாகவும் ஒரு அலகில் இருத்தவே இந்த சமூகம் உருவாக்குகிறது, பெரும்பாலும் ஆங்கிலேயக்கல்வி அக்காலத்தில் அளித்த தரப்படுத்தப்பட்ட கல்வி என்பது கல்வி மற்ற அனைவருக்கும் வேலை உறுதிப்பாட்டை அளிக்கவில்லை, அது இப்போதும் அப்படித்தான். பிள்ளைவாள் கற்ற கல்வி ஒரு துணிக்கடையில் அண்டிவாழ மட்டுமே வகைசெய்கிறது. கல்வி என்பது மனிதனின் சிந்தனையை வளர்ப்பதற்க்கான பயிற்சியை தாண்டி அது சமூகத்தில் அவனுக்கான ஒரு இடத்தையும் வரையறை செய்துவிடுகிறது. அதாவது படித்தவன் செய்வானா இக்காரியத்தை என்றும், அவன் படித்தவன் அவன் இப்படி செய்யமாட்டான் என்றும் சமூகம் அவனின் இடத்தை நிர்ணயம் செய்கிறது. இது பெரும்பாலும் அக்காலங்களில் எந்த மாதிரியான விளைவை உருவாக்கியது என்பதை அழகாக இந்த கதையின் மூலம் சொல்லாமல் சொல்கிறார்.

ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் வாடகை குறைவான ஏதும் வசதியற்ற ஒரு வீட்டில் பிள்ளையும், அவரது நோயாளியான மனைவியும் வசிக்கிறார்கள். வாழ்வின் நிதர்சனத்தில் மனிதன் பெரும்பாலும் அள்ளி வீசப்பட்டுக்கொண்டே இருக்கின்றான், பிள்ளைவாள் வேலை செய்தாலும் நடுத்தர குடும்பத்தினரின் ஒரு சம்பளத்தில் இருந்து அடுத்த சம்பளத்தில் வாழும் வாழ்க்கை, பெரும்பாலும் அது கடன் பற்றுகளினால் நிறைந்தும், முதலாளியின் கருணையினாலும் வாழ்கிறார். முதலாளி, எக்காலத்திலும் இருக்கும் சமூகப்பார்வையிலேயே படித்தவனை புரக்கும் பாவனையிலேயே காட்டப்படுகிறது, பாரதியாரின் செட்டியாரும், ராமகிருஷ்ணரின் ராணியையும் இவ்விடத்தில் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

செல்லம்மாளுக்கும் கனவுகள் இருக்கின்றன, அந்த கனவுகளை பிள்ளைவாள் அறிந்தும் இருக்கிறார், ஆனால் அவளின் நோய்மை அவளை நிகழவிடாமல் தடுப்பதும் அதற்கான காரணம் பிள்ளைவாள்தான் என எப்போதும் எக்காலத்திலும் மனைவிகள் சொல்லும் காரணமாக பார்த்தாலும், அக்காலத்திய பெண் விடுதலை பற்றிய பிரக்ஞை அவளுக்கு இருந்துதான் இருக்கிறது. பிரமநாயகம் பிள்ளையின் அவதானிப்புகள் இதில் என்னவாக இருந்தன என்பதை சிறிய இடவெளிகளில் வெளிப்படுத்தப்படுகிறது, மரபும், சமகாலமும் அளிக்கும் உள அழுத்தங்கள் எப்போதும் அந்த சந்தியில் அவரை யோசிக்கவே வைக்கின்றது எனலாம். ஆனால் அந்த அழுத்தங்களினால் நோயில் விழுந்தாளா இல்லையா என்று வாசகனுக்கு நிரப்ப விட்டுவிடுகிறார்.

நோய் எப்போதும் அப்படித்தான், நம் இயல்பான வாழ்வு எவ்வளவு மகத்தானது என்பதை நோயில் விழும்போதுதான் நாம் அறிகின்றோம். அப்போது கிடைக்கும் சொற்ப உடல் நலத்தையும் ஊதி பெரிதாக்கி நாம் மீண்டும் திரும்பிவிட்டதாக இருக்க முயலுவோம். செல்லம்மாளின் நோய் அவளை நிலைகுலைய வைத்து மீண்டும் மீண்டும் இந்த சுழலில் வைக்கின்றது, ஆனால் அடி நாதமாக அவள் சென்னைக்கு வந்தது அப்போதைய புதிய காலத்தை ருசிக்கத்தான் என்பது சொல்லாமல் சொல்வது போலவே தோன்றுகிறது.

பிள்ளை அவர் குடும்பத்தின மெத்த படித்தவர், படித்தவர் என்றால் அரசாங்க உத்தியோகம் மட்டுமே வாய்ப்பாக இருந்த காலத்தில் படித்திருந்தார், இதை வாசிக்கும்போதும் அழகிரிசாமியும் ஞாபகத்திற்கு வந்தார், அழகிரிசாமி மட்டுமே அவர் குடும்பத்தின படித்தார், அவருக்காக மொத்த கூட்டுக் குடும்பமும் உதவியது, அவருக்கு ஆசிரியப்பணியும் பின்னர் தாசில்தார் அலுவலக பணியும் கிடைத்தது பின்னர் அவற்றை ராஜினமா செய்து சென்னை வந்து கஷ்டப்பட்டார். 

செல்லம்மாளின் இறுதி நிமிடங்கள் ஏனோ காஞ்சிவரம் படத்தை ஞாபகம் படுத்துகிறது, அந்த இடத்தில் பிள்ளையின் இடம் என்னவாக மாற்றமாகி வருகிறது என்பதை அழகாக வெளிப்படுத்துகிறார், மரணம் எப்போதும் யாருக்கும் சொல்லாமல் வரலிடை நீர்போல வந்துவிடுகிறது, அவளின் உயிரற்ற தேகத்தில் அவருக்கு இருந்த பிணைப்புகள் மெதுவாக கழிந்ததை அவர் எதிர்கொள்கிறார்.

வாழ்வின் மீதான நம்பிக்கைகள் எதன்மீதாவது இருக்கத்தான் வேண்டுமா அல்லது மனிதன் தன்னளவில் வாழ்வான் என்பதே இக்கதையின் கேள்வியாக இருக்கிறது.

    சரத்

கிராமத்திலிருந்து சற்று படித்ததினால், வேலைக்கு செல்லக்கூடியவனாக மாறிவிட்ட, துணிக்கடையில் ஊழியனாக சொற்ப சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் பிரமநாயகம் பிள்ளையின் கதையை சொல்கிறது. சற்று படித்தவிட்டதினாலே அவனால் வேலைக்கு செல்வதை தவிர, விவசாயம் செய்வதையோ, கிராம வாழ்க்கை நடத்துவதையோ நினைத்துப் பார்க்க முடியவில்லை. செல்லம்மாளுடன் நடக்கும் திருமணத்திற்குப் பிறகு, அவளுடன் சென்னைக்கு குடி புகுகிறார். சொற்ப வருமானத்தின் பற்றாக்குறையின் எல்லைகளாலும், நகர வாழ்வின் தனிமையிலும் பீடிக்கப்பட்டு உடல் நலிவுறும் செல்லம்மாளுக்கு, ஊருக்கு செல்லும் பேச்சே அருமருந்தாக இருக்கிறது.

பிரமநாயகம் பிள்ளைக்கு ஊருக்கு போவது ஒன்றைத்தவிர, மற்ற அனைத்து வகையிலும் மிகப் பொறுமையுடனும், நிதானத்துடனும், அன்புடனுமே நடந்து கொள்கிறார். செல்லம்மாள் கேட்பதை அவரது வருமானத்திற்கு மீறி இருந்தாலும் “அதென்ன பிரமாதம், செஞ்சிட்டா போகுது” என்று வாய் நிறைய சொல்கிறார். அதை சொன்னதும், உடனே செல்லம்மாளுக்கு குடும்பத்தின் பொருளாதார நிலை பிரக்ஞைக்கு வந்து, “காச கண்டபடி கரியாக்கிட்டு கண்ண பிதுக்கிட்டு நிக்காதீங்க” என்று கடிந்து கொள்கிறாள். அழைத்து வரும் டாக்டர் கூட பஞ்சத்தில் அடிபட்டவராக இருக்கிறார். காலியான பாத்திரங்கள், எப்போது முன்னதாக வேலை செய்யுமிடத்தில் பணம் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டிய சூழல், வீட்டின் நிலை, எளிய உணவே பெரிய விஷயமாக இருக்கும் சூழல் என்று குடும்ப வறுமையின் தீவிரம் கதை முழுவதும் சொல்லப்படுகிறது.

எவ்வளவு பணச்சிக்கல் இருந்தாலும் செல்லம்மாளுக்கு உடல் நிலை சரியில்லாத்தற்கு வைத்தியம் செய்வதை பிரமநாயகம் நிறுத்துவதில்லை. அவள் உடல்நிலை சரியில்லாது கிடப்பதற்கு அவர் செய்யும் பணிவிடைகள் எல்லாம், எல்லா வகையிலும் மனதைக் கரைப்பதாகவே இருக்கிறது.

இந்த சூழலில் இருதலைக்கொள்ளியாக மாட்டித் தவிக்கும் நிலையே செல்லம்மாளுக்கு. அவளால் பிள்ளையை விட்டு பிரிந்து செல்லவும் முடியவில்லை. அவரது உண்மையான அன்பினால் விலங்கிடப்பட்டு இருப்பதையே காய்ச்சல் வேகத்தில் புத்தி மயங்கி அவளது அம்மாவிடம் “அவர் தன்னை கட்டிப் போட்டிருப்பதாக” சொல்கிறாள். ஆனால் இங்கிருக்கும் நகர வாழ்வின் தனிமையும், வறுமையும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கின்றன. எப்படியாவது ஊருக்கு போய்விட வேண்டுமென்று தான் அவள் மனது தவிக்கிறது. நகரிலும் வாழ முடியாமல் கிரமத்திற்கும் திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை தான் செல்லம்மாள் இறந்ததன் பிறகு வெளியே வந்து வானத்தைப் பார்க்கும் பிரமநாயகம் பிள்ளைக்கு தெரியும் திரிசங்கு மண்டலம் குறிக்கிறது.

பிள்ளைக்கு அவளது மனது நன்கு தெரிந்திருக்கிறது. அவர் அடைந்த கல்வி அவரை எப்போதுமாக கிராமத்திலிருந்து வெளியேற்றியதுதான் செல்லம்மாளின் மரணத்திற்கு காரணமாக இருக்கிறது. அந்த வீட்டில் அவரால் ஏற்றப்படும் விளக்கின் ஒளியில் தெரியும் அவரது பூதாகரமான பிம்பம், செல்லம்மாள் இறந்ததன் பின்பு அவளது நெஞ்சில் குத்தி கொல்வது போல் தெரிவதை இந்த பின்புலத்துடன் விரித்துக் கொள்ள முடியும். இறுதியாக அதிகாலையில் அவரது வீட்டில் ஒலிக்கும் போலியான அழுகையின் மூலம் செல்லம்மாளை  வழியனுப்ப முயலும் சித்திரம், செல்லம்மாளின் போலியான வாழ்வின் நீட்சியாகவே வாசிக்க முடியும் என நினைக்கிறேன்.

இந்தக் கதை மிக நேர்த்தியாக பிரமநாயகம் மற்றும் செல்லம்மாளின் மன அலைவுகளை வெவ்வேறு நிகழ்வுகள் மற்றும் விவரணைகள் வழியாக கடத்துகிறது. ஒரு வாழ்வின் நிகழ்வு என்று மட்டுமே வாசிப்பவரை மயக்கிவிடக் கூடியதன் பின்புலமாக உருவாகிவரும் நகரமயமாக்கலின் சித்திரமும், ஆண், பெண் மனசிக்கல்களும் நுட்பமாக ஊடாடி கதையை வெவ்வேறு தளங்களுக்கு நகர்த்துகிறது. மிகச் சிறப்பான சிறுகதையின் உருவாக்கமாக, நாம் பயில வேண்டிய கதை என்று கருதுகிறேன். 

 

 

கருத்துகள்

விருப்பமான பதிவுகள்

கயிற்றரவு - சிறுகதை விமர்சனம்

ஒருநாள்கழிந்தது - சிறுகதை விமர்சனம்

குளத்தங்கரை அரசமரம் - சிறுகதை விமர்சனம்