கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - சிறுகதை விமர்சனம்
எழுத்தாளர்: புதுமைபித்தன்
காலம்: கலைமகள், அக்டோபர், நவம்பர் 1943
எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:
புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர்.
சிறுகதை சுட்டி: https://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_5872.html
விமர்சனம்:
நந்தி இலக்கிய வட்டம் விமர்சனம்:
சரத் : கடவுள் விருந்தினராக கந்தசாமிப்பிள்ளையின் வீட்டில் தங்கி பூலோகத்தை பார்த்து செல்ல வருகிறார் என்பதை மையமாக கொண்டுள்ளது கதை. கந்தசாமிப்பிள்ளை சித்த வைத்தியராக இருந்து கொண்டு சித்த வைத்திய தீபிகை என்னும் மாத இதழை நடத்திக் கொண்டு கஷ்ட ஜீவனம் செய்பவர். பஸ் கட்டணத்தில் சிக்கனம் பிடிக்கும் நிலையில் வாழ்க்கை இருந்தாலும் அவரது பத்திரிகையை 17 வருடங்களாக விடாப்பிடியாக நடத்திக் கொண்டு வருபவர்.
கடவுள் பூமிக்கு ஒரு புது நூறு ரூபாய் தாளோடு தான் வருகிறார். அவ்வாறு பணத்தோடு தான் அவரும் இங்கு வர வேண்டியிருக்கிறது. செல்வ செழிப்பான நகரையும், பணத்தை தெய்வமாக காணும் மக்களையும் அவர் சந்திக்கிறார். டீக்கடைக்காரன் ஒரு பத்து ரூபாய் கள்ள நோட்டை கடவுளிடம் தள்ளி விடுகிறான். ரிக்ஷாக்காரன் ஒரு ரூபாய் கொடுத்ததற்காக கடவுளை வாயார வாழ்த்துகிறான். இவர்களையாவது சரி கட்டிவிட முடியும். எதையும் தானமாக வாங்கிக் கொள்ள தன்மானம் இடம் தராத, கடனாக கேட்கவும் மனமில்லாத கந்தசாமிப்பிள்ளை தான் கடவுளுக்கு உண்மையில் தற்போதைய உலகில் அவர் இடத்தை காண்பிப்பவராக இருக்கிறார்.
பூமிக்கு வந்துவிட்டீர்கள் ஆனால் கடவுள் என்று என் வீட்டில் சொல்லிவிடாதீர்கள் உங்களை பைத்தியமாக நினைத்தாலும் பரவாயில்லை. என் மனைவி என்னை பைத்தியமாக நினைப்பாள் என்கிறார்.
வரம் எதுவும் கொடுத்துவிடாதீர்கள் நீ கொடுத்துட்டு போயிடுவ பின்னாடியே இன்னொரு தெய்வம் உயிரை எடுக்க வந்துவிடும் என்று பிள்ளை சொல்வதைக் குறித்து ஆமா நாம் கொடுத்த வரத்த வாங்கி எவன் உருப்பட்டிருக்கான் என்று நினைக்கிறார்.
பெரிய கட்டிடமாக இருக்கும் ஹோட்டலைப் பார்த்து வியக்கும் கடவுளிடம் பின்ன கோழிக்கூடு மாதிரி இருக்க இதென்ன கோயில் கருவறையா என்கிறார்.
கடவுளிடம் சித்து விளையாட்டுக்கள் வேண்டாம் மனித எல்லைக்குள் கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்கிறார். தனது குழந்தையை அறிமுகப்படுத்தும் இடத்தில் தயங்குவது, பின்பு கடவுள் நான் இப்போதெல்லாம் சுத்த சைவம் என்று சொல்லி சிரிக்கிறார்.
உங்களை அப்பா என்று அறிமுகப்படுத்தவா? என்று கேட்பவரிடம் வேண்டாம் எனது சொத்துக்கு பிரச்சனையாகிவிடும் என்கிறார் கடவுள்
இப்படியான நுட்பமான உரையாடலின் வரிகளின் மூலம் சமகாலத்தில் நவீன மனிதனுக்கு இருக்கக் கூடிய இருத்தலியல் சார்ந்த சிக்கல்கள் கடவுளைவிட பெரியதாக இருப்பதை சவுக்கால் அடிப்பது போல் உணர்த்திவிடுகிறார்.
கடவுளிடம் ஆயுள் சந்தா கேட்குமிடம் ஒரு உச்சம் என்று தோன்றுகிறது. யார் ஆயுள் முடியும் வரை என்று கேட்கும் கடவுளிடம், உம் ஆயுள் வரை தான் மாத இதழின் ஆயுள் நித்தியமானது நான் இறந்த பிறகும் வெளிவரும் என்கிறார்.
கடவுளுக்கு இந்த நவீன உலகில் இடமில்லை என்பது சமகாலத்தை நன்கறிந்த கந்தசாமி பிள்ளைக்கு கடவுளை விட நன்கு தெரிந்திருக்கிறது.
இறுதியாக கையிலிருக்கும் பைசா காலியான பின்பு என்ன செய்வதாக உத்தேசம் என்று கடவுளிடம் கேட்கிறார். இவரே சில வழிகளையும் சொல்கிறார். நாட்டியமாடி பிழைக்கலாம் என்று நினைத்து சபா நிறுவனர் முன்னிலையில் ஆடிக்காட்டும் கூத்தனாரும் பார்வதியும் அவரால் பாதியில் நிறுத்தப்பட்டு இதெல்லாம் கலையே இல்லை சுத்த காட்டுமிராண்டித்தனம் என்று வெளியேற்றப்படுகிறார்.
சைவசித்தாந்தம் அல்லது தேவாரம் பாடம் நடத்தி பிழைக்கலாமே என்று சொல்கிறார் பிள்ளை. கடவுளின் பெயரை சொல்லி பிழைப்பை நடத்தும் பெரிய கூட்டத்திடையே கடவுள் உண்மையில் பிழைக்க முடியாது என்று நடு மண்டையில் ஆணியடித்து கதையை முடிக்கிறார்.
உங்களுக்கு வரம் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். சேர்ந்து வாழவெல்லாம் முடியாது என்று கடவுள் கைலாசத்திற்கு புறப்பட்டு விடுகிறார்.
இந்தக் கதை நவீனத்துவத்தினை தமிழில் முன்னிறுத்திய கதைகளில் முக்கியமானது. மனிதனின் இருத்தலியல் சார்ந்த சிக்கல்கள் பிரதானப்படுத்தப்பட்டு கடவுள் பின்னுக்கு போய்விடுகிறார். இங்கிருக்கும் சிக்கல்களை தீர்க்கவும் கையாளவும் கடவுளால் முடியுமா முடியாதா என்பதைத் தாண்டி மனிதனுக்கே கடவுளிடம் தன் பிரச்சனைகளின் தீர்வினை கேட்க தேவையில்லை என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது. அவனது பெரும்பாலான பிரச்சனைகளை தீர்ப்பதாக, சுக போகங்களைத் தருவதாக பணம் தான் இருக்கிறது. இங்கு வாழ்வதற்கு பணம் தான் கடவுளை விட அவசியமாக இருக்கிறது என்ற நடைமுறைவாதத்தோடு கடவுள் முட்டிக் கொள்கிறார். இந்தக்கதையின் எள்ளல் நடையும் கதை கூறு முறையும் மகத்தான சாதனையாகவே நான் கருதுகிறேன்.
வீரராகவன்: அங்கதம் வழியாக ஒரு கதையை சொல்வது, அவற்றில் சைவ புராண கதைகளை இணைத்து சிறுகதையாக்குவது போன்றவை மாஸ்டர்களுக்கே உரியவை. கந்தசாமிப்பிள்ளையின் வீட்டிற்கு விருந்தினராக வரும் கடவுளின் எல்லைகளை ஒட்டி இந்தியா கதை பின்னப்பட்டுள்ளது. கடவுளாக இருந்தாலும் பணமில்லையேல் ஒன்றுமில்லை. அந்த பணத்தை சம்பாதிக்க வழிகளை உலகியலின் எல்லைக்குள் நின்று நோக்கும்போது அம்மையப்பனின் கூத்தும் சபாவினரால் நிறுத்தப்படுவதும், பிள்ளைக்கறி கேட்பாரோ என கந்தசாமிப்பிள்ளை அச்சப்படுவதும், கடவுளும் பிள்ளையும் தமிழ் இலக்கணத்தை விவாதிப்பதுமாக பல இடங்கள் புன்னகையை வரவழைத்தன.
கந்தசாமிப்பிள்ளையுடன் உலகை காணும் கடவுள் அடையும் அனுபவங்களாக கதை விரிகிறது. கள்ளநோட்டை கடவுளிடம் தள்ளிவிடும் உணவாக உரிமையாளர், கடவுளையே வாழ்த்தும் ரிக்ஷாக்காரன் என எத்தனை அனுபவங்கள். இவற்றினூடாக தந்தையானவுடன் வரும் சொத்துப்பிரச்சனையை சந்திக்க மறுக்கும் கடவுள் உலகியலுக்குள் முழுமையாக வந்தமைகிறார்.
இவர்களில் கடவுளிடம் முழுமையாக தன்னை ஒப்படைக்கும் குழந்தையிடம் மட்டுமே கடவுள் உள்ளார்ந்து குளிர்ந்து சிரிக்கிறார். பிற எல்லா இடங்களிலும் மனிதனின் பிரச்சனைகள் அவரையும் அல்லாட வைக்கின்றன.
தன்மானம் மிக்க கடன் வாங்கி அவதிப்பட நினைக்காத பிள்ளைவாள் கடவுளிடமே சந்தாவை வாங்குவதில் உச்சத்தை அடைகிறது கதை.
இவற்றினூடாக கடவுளிடம் வரம் வாங்கும் நாம் அவருடன் வாழமுடியாது நாமும், வரம் தருவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் இங்கே வாழமுடியாது என கடவுளும் அறியும் தருணம் மிகவும் முக்கியமானது. இங்கே நாம் வாழக்கூடிய உலகில் நம் தேவை நிறைவடைந்தால்தான் நம் மனம் கடவுளை நோக்கும் என்பதை மிகவும் உறுதியுடன் கூறுவது இந்த கதை. இவற்றிலுள்ள அங்கதமே இந்த கதையை சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக ஆக்குகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக