ரயில்வே ஸ்தானம் - சிறுகதை விமர்சனம்
எழுத்தாளர்: பாரதி
கதையின் காலம்: 1920
எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:
சி.சுப்ரமணிய பாரதியார் (பாரதி, பாரதியார்) (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921) தமிழின் நவீனக் கவிஞர்களில் முதன்மையானவர். பாரதியாரை நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்கப்புள்ளி என விமர்சகர்கள் கருதுகின்றனர். நவீனக் கவிதை, நவீன உரைநடை இலக்கியம், இதழியல் ஆகியவற்றில் முன்னோடி. தமிழிசை இயக்கத்தின் தொடக்கப்புள்ளிகளில் ஒருவர். இந்தியச் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர்.
சிறுகதை பற்றிய குறிப்பு:
மாகாகவி பாரதி, தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், ‘சுதேசமித்திரன்’ இதழில் சமகால உலகம், அரசியல், சமயம், பண்பாடு தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், நையாண்டிக் கதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார். அந்த வகையில் ‘சுதேசமித்திரன்’ (22-5-1920) இதழில் அவர் எழுதிய கதை, ‘ரெயில்வே ஸ்தானம்’.
இஸ்லாமிய மக்களிடையே உள்ள பலதார மணத்தை விமர்சிக்கும் வகையிலும், முஸ்லிம் மாதரின் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதாகவும் இக்கதையை எழுதியுள்ளார் பாரதி.
எனினும், இக்கதையில் சிறு தகவல் பிழை இருப்பதாக அவரது இஸ்லாமிய நண்பர் கூறியதையும் ‘சுதேசமித்திரன்’ இதழில் 'முகமதிய ஸ்திரீகளின் நிலைமை' என்ற கட்டுரையாக வெளியிட்டு, தனது பிழைக்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறார். என்றபோதும், முஸ்லிம் மாதரின் உரிமைக்காக தனது இஸ்லாமிய நண்பரிடம் தொடர்ந்து வாதிடுகிறார்.
சமூக மாற்றத்துக்காகத் துடித்த மகாகவி பாரதியின் இதயம், மதம் கடந்து சிந்தித்ததையும் இந்த சிறுகதை மற்றும் கட்டுரையில் காண முடிகிறது.
சிறுகதை சுட்டி: https://porulputhithu.com/2023/04/28/bharathi-stories-29-and-prose-103/
நந்தி இலக்கிய வட்டம் விமர்சனம்:
சரத் : தென்காசி ரயில்வே நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தில் செல்வந்தரான இஸ்லாமிய இளைஞனுக்கும் ஒரு பிராமணருக்கும் நடக்கும் உரையாடலே கதையாக அமைந்துள்ளது. தம்முடைய மூன்று பெண்களை பொருளாசை மிக்க சித்தப்பா அந்த இளைஞனுக்கு சொத்து பிரிந்து செல்லக்கூடாது என்று இஸ்மேல்கானுக்கு மணமுடித்து வைக்கிறார். அவனது சொத்துக்களை நிர்வகிப்பவரான சித்தப்பா குடிப்பழக்கத்தால் மறைந்ததன்பின் மொத்த நிர்வாகமும் இவனிடம் வருகிறது. முக்கிய பிரச்சனையாக அக்கா தங்கைகளான அவனது மூன்று மனைவிகளுக்குள்ளும் எழும் பிரச்சனைகளை அவனால் சமாளிக்க முடியாமல் இப்படியே வாழ்நாள் முழுவதும் அவதிப்பட நேருமோ என்று எண்ணுகிறான்.
இரு மனைவிகளை விவாகரத்து செய்து வேறு திருமணம் செய்யவிட்டால் இந்த பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்ற கனவில் வரும் தீர்வை அல்லாவே அவனுக்காக சொன்னதாக நினைக்கிறான். இப்போதும் அவனது சிக்கல் தீரவில்லை. மூவருமே அவனிடம் அன்புடன் இருக்கிறதாலும் இவனுக்குமே மூன்று மனைவிகளிடம் அதே அளவு அன்பு இருப்பதாலும் எந்த இருவரை விவாகரத்து செய்வது என்று தெரியாமல் தவிக்கிறான். அதற்குள் தாமதமான ரயில் வந்துவிடுகிறது. இறுதியில் அல்லா உனக்கு சொன்னது படியே நடக்கும் என நம்புகிறேன் என கதை முடிகிறது. இதில் கனவாக வரும் பகுதியை பாரதி வலியுறுத்த விரும்பும் குடும்ப அறமாக உணர்ந்து கொள்ளமுடியும்.
நவீன சிறுகதையின் வடிவில் கச்சிதமாக தமிழில் சிறுகதை உருவான காலத்திலேயே எழுதப்பட்டிருப்பதை பெருமிதத்தோடு காண முடிகிறது. பெரும்பான்மையானவர்களால் தமிழில் முதல் சிறுகதையாக கருதப்படும் குளத்தங்கரை அரசமரம் நீதிக்கதையின் வடிவிலேயே உள்ளது என்பதை இப்போது வாசிக்கும் எவரும் அறிந்து கொள்ள முடியும். ஆனால் இக்கதையில் பல மணங்கள் புரிந்து கொண்ட ஒருவனுக்கு எழும் சிக்கலுக்கு அவனது கனவில் தீர்வு சொல்லப்பட்டாலும் அந்த தீர்வினை செயல்படுத்துவதில் அடுத்தகட்ட நுட்பமான சிக்கல் எழுந்துவிடுகிறது. அதனைப் பற்றி தீர்வுகிடைப்பதற்காக ஒரு பிராமணனிடம் சொல்லி முடிப்பதற்குள் ரயில் வந்து விடுகிறது. அவன் பயணத்தை தொடர்ந்தாக வேண்டும். அவ்வளவுதான் சமகாலம் அவனை அடித்துக் கொண்டு போகிறது. தான் சொல்ல வேண்டிய கருத்தினை விட கதையின் சுவராசியத்தில் பயணிப்பது பாரதியை திருப்தி செய்திருக்கும் என நினைக்கிறேன். கச்சிதமான முடிவோடு கதை முடிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
மகேந்திரன் : அல்லாவின் கட்டளை மற்ற இரு மனைவிகளைத் தள்ளிவிட்டு (வேறு கல்யாணம் செய்யச் சொல்லுதல்) ஒரு மனைவியை மட்டும் வைத்துக்கொள்ளச் சொல்கிறார். ஆனால் அந்த முஸ்ஸிம்மான் பெரும் குழப்பத்தில் இருக்கிறான். யாரைவிடுவது யாரை வைத்துக்கொள்வது? மூன்று மனைவிகளும் சமமாக அன்பு செலுத்துகிறார்கள். அவர்களுக்குள் பெரிய யுத்தம் நடக்கிறது. அதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. அதே சமயம் விட்டுவிடவும் முடியவில்லை. அல்லா கனவில் வந்து சொல்லிவிட்டார். இப்போது என்ன செய்வது? கதை சொல்லியிடம் இதற்க்கான வழியைக் கேட்கிறார். அவருக்கும் இது பெரும் சிக்கலாக இருக்கிறது.
இந்தக் கதை முழுவதும் அந்த மூன்று மனைவிகளை மணந்துகொண்டவனின் பார்வையிலேயே இருக்கிறது. அந்த மனைவிகளுக்கு நிஜமாகவே இந்த வாழ்க்கை பிடித்து இருக்கிறதா? இல்லை நரகமென கருதுகிறார்களா? தெரியவில்லை. ஆனால் தான் (ஆண்) மூன்று சகோதரிகளையும் திருமணம் செய்து கொண்டான், பிறகு இது தொல்லை என நினைக்கிறான். அதானால் மற்ற இருவரை விலக்கி வைக்க எண்ணுகிறான். இதில் அவர்கள் என்ன நினைத்தார்கள் எனத் தெரியாது. இந்த எண்ணம் தான் ஆண் என்பதால் வருகிறதா? அப்படியானால் அதை அல்லா ஏன் சொல்ல வேண்டும்?
“ நான் அந்தக் கனவைத் தெய்வ சாசனமாகவே நம்புகிறேன். நம்முடைய மனத்தில் தோன்றுவதுதான் கனவாக வருகிற தென்பதை நான் அறிவேன்”
தான் விரும்பிய ஒன்றை, பல நாட்கள் அடைத்து வைத்த ஒன்று கனவாக வெளிப்படுகிறது என்றே நான் கொள்கிறேன். அப்படியானால் தன்னுடைய விருப்பத்தை இது அல்லாவின் கட்டளை என அவனது மனம் மாற்றிக்கொள்கிறது. இப்போது அந்த மூன்றில் இரண்டு பெண்களை விலக்கிவைக்க நல்ல காரணம் கிடைத்துவிட்டது. தன் மனம் இனி குற்றம் கொள்ள வேண்டிய தேவையில்லை. அதனை வேறு ஒருவரின் வாயிலிருந்து சொல்லக் கேட்டாள் இன்னும் தன் முடிவு மிகச் சரி எனவும் சொல்லிவிட முடியும். இந்த குற்ற உணர்ச்சியிலிருந்து வெளிவர முடியும் என நம்புகிறான். ஆனால் அந்த மூன்றாம் மனிதன் (கதை சொல்லி) தனது எண்ணத்தைச் சொல்வதற்க்குள் இரயிலை எடுத்துவிட்டார்கள். அவன் இதனை இன்னும் பல பேருடன் சொல்லி தன் முடிவுக்கு சாதகமான பதிலை எதிர்ப்பார்ப்பான்.
ஆனால் மிக உறுதியாக அவன் மனைவியிடம் இதனை பேசிவிடமாண்டான். பெண்களை ஒரு பொருட்டாக நினைக்காத மனிதர்கள். வேண்டுமானால் உபயோகித்துக்கொள்ளவும், வேண்டாமெனில் தூக்கி எறியவும் பாத்தியப்பட்டவர்கள்.
முஸ்ஸிம்மானின் இந்த ஊசலாட்டம்தான் கதையின் கரு. அது அழகாக வாசகனின் இடைவெளியாக ரயில் வந்து மாற்றிவிடுகிறது. செவ்வியல் சிறுகதையில் வடிவை அடைந்த கதை இது எனச் சொல்லலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக