சிற்பியின்நரகம் - சிறுகதை விமர்சனம்
எழுத்தாளர்: புதுமைபித்தன்
காலம்: 1930~1940
எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:
புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர்.
விமர்சனம்:
மகேந்திரன்: இந்தக் கதையின் முரண்பாடு என்பது கலையை உருவாக்குபவன் தானே என நினைக்கும் ஆணவத்திற்க்கும் இல்லை அது ஒரு வேறு ஒரு புறத்தூண்டதலால் வருகிறது என்ற எண்ணத்திற்க்கும் இடையேயானது.
சிற்பி முதலில் தான் அழகிலா கூத்தின் ஒன்றை சிற்பமாக வடித்தான் என யவன வணிகனிடம் சொல்கிறார். யவனனின் நீதான் பிரம்மா! நீதான் சிருஷ்டி என சொன்னதை மறுத்து சிற்பி அப்படிச் சொல்கிறார். ஆனால் இதனை அவர் நம்பினாரா எனக் கேட்டால் அது சந்தேகமே.
அவரது லட்சிய சிலையை எங்கு பிரதிஸ்டை செய்யப்பட வேண்டுமென பெரும் விவாதம் நடக்கிறது. இதனை துண்டுதுண்டாக உடைத்து மலையின் உச்சியில் எறிந்தால் கூட நல்லது அரசினிடம் தராதே என்கிறான் அந்த யவன வணிகன். ஆனால் அது அரசனிடம் சேர்த்து நாடேங்கும் களியாட்டம் நடக்கிறது. அன்றிரவு சிற்பி தூங்கும் போது அவனுக்கு வரும் கனவில் யாருமே அந்தச் சிலையை ஏறேடுத்தும் பார்கவில்லை. மோட்சம் வேண்டுமென பிராத்திக்கிறார்கள். சுய நலவாதிகள் போல இருக்கிறார்கள். காலம் யுகங்களைக் கடக்கிறது பெரிய மாற்றம் இல்லை. அழகிலா கூத்து என்று சொன்ன சிற்பி இப்போது அர்த்தமற்ற கூத்து எனப் பார்க்கிறார், இந்த பார்வைக் கோண மாற்றம் எப்படி வந்தது? யவணன் கலையைப் படைத்தவன் தான் இதற்க்கு முழுமுதற் பொறுப்பு என. சிற்பியின் மனம் அதனை நம்ப தாயாராகிவிட்டது. இப்போது அந்த சந்தேகம் கனவாக வெளியாகிவிட்டது. அதனை வெறுத்து ஒதுக்க நினைக்கிறார் சிற்பி ஆனால் முடியவில்லை. ஒருவேளை யவணன் இருந்திருந்தால் அவனிடம் எதிர்விவாதம் செய்து தன் தரப்பை நியாப்படுத்த முடியும் ஆனால் அவன் இல்லையே? இப்போது என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பி அவர் நரகத்திற்க்கு செல்லுகிறார். தான் என்ற அகங்கார நரகம்.
இந்த முரண்பாட்டை ஒட்டி நாம் மேலும் சிந்திதுப்பார்க்கலாம். சிலைகள் எப்படி மாறுகின்றன என்பதைப் பற்றி ஜெயக்குமார் அவர்கள் ஆலயக்கலை வகுப்பில் இப்படி சொல்கிறார். கவிதைகள் தான் சிலைகளை உருவாக்க முன் மாதிரி. சிலையைக் கண்டதும் அந்த சாமியார் திருநாவுக்கரசரின் பாடலைப் பாடுகிறார். நான் எப்படி கடவுளை வழிபட வேண்டும்? விளக்கை காட்டும் போது கடவுளை நன்றாக கண்டுகொள்ள வேண்டும். பிறகு கண்களை மூடி நன்றாக வேண்டிக்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது என்ன நடக்கிறது? அந்த கடவுளின் வடிவம் அந்த தனிமனிதர்களுக்குள் செல்கிறது. பிறகு அவர்கள் ஆழ் உள்ளத்திற்க்குச் செல்கிறது. இது ஒரு சமூக, பொருளியல் சூழலால் அந்த வடிவத்தில் மாற்றம் உண்டாகிறது. அது சமூகத்தின் கூட்டு பிரதிபலிப்பு. ஒவ்வொரு மனிதனின் மனதில் அடி ஆழத்தில் நிகழும் ஒன்று. உதாரணமாக கொற்றவை சிலையைப் பார்த்தால் தெரியும். அதன் உக்கிரம் கொஞ்சம் நொஞ்சமாக குறைந்து சாந்தமடைந்து வருவதை. ஏன்? சமூகத்தில் இருந்த போர் குறைந்து வருவதை. அப்படி போர் குறைவதால் அவ்வளவு உக்கிரம் தேவையில்லை. அப்படி இருந்தால் அது சமூக வாழ்க்கையை குழைக்கும். இந்தப் புரிதல் யாரும் ஒரு கட்டம் கட்டி உருவாக்கியது இல்லை. மனித மனதுக்கு அப்படி தோன்றி இருக்கிறது. அது கலைகளில் வெளிப்படுகிறது.
அப்படியானால் ஒரு கலைஞன்/சிற்பி என்பவன் தனிப்பட்ட ஒன்றை உருவாக்கவில்லை. உதாரணமாக சிற்பி சொல்வதைப் போல அவர் நாகனின் நடனத்தில் இருந்து என பல இடங்களில் தன் இலட்ச்சிய சிலைக்கு வடிவங்களை எடுக்கிறார். அது சமூகத்தில் ஆழ் உள்ளதில் இருக்கும் ஒன்று என நாம் கருதலாம். அது மனித முழுமைக்கும் சொந்தமானது. அது மனிதம்/அதனையும் தாண்டிய ஒன்றிலிருந்து வந்த படைப்பு. அதனால் அதனை தான் தான் செய்தான் என நினைக்க வைப்பது ஒரு வகையில் அகங்காரம் ஆகும். தான் தான் என நினைத்த உடனே அதன் பயன் என்ன என்ற வேள்வி எழுகிறது? தன் கண்ணால் அதன் பயனைக் காண முடியாததால் அவர் சோர்ந்து போகிறார். அதனை உடைக்கவும் செய்கிறார். தன்னால் நடந்தத் என நினைக்காமல் இருந்தால் அவர் இந்த இடத்திற்க்கு வந்திருக்கமாண்டார். ஒரு செயலின் பயனை நாம் யார் தீர்மானிக்க? அது காலத்தின் கையில் அல்லவா இருக்கிறது? அதனை நான் படைத்தால் அதற்க்கு ஒரு பயனும் இருக்கும் அது எங்கே என கேக்க வைக்கும் பொறிக்குள் சிற்பி மாட்டிக்கொண்டார்.
யவனன் ஒருவகையில் மேற்கத்திய தத்துவத்தின் பிரதிநிதி எனத் தோன்றவைக்கிறது. தர்க்கத்தை மட்டுமே நம்பி செயல்படுவன் எனத் தெரிகிறது. ஆனால் இந்திய தத்துவம் என்பது தரிசனம் முதலிலும் பின்பு தத்துவம் பின்பும் வருவது. அதனால்தான் சாமியார் நீ பார்க்கும் காட்சியை பற்றி யவனனிடம் சொல்லும் போது அதனை மறுக்கிறான் அவன். இருவருக்கும் இடையே பெரிய வாதம் அதனால்தான் வருகிறது.
பிரபஞ்சத்தின் கூத்தை சிவ நடனமாக மாற்றிவிட்டார் சிற்பி. அது எவ்வளவு பெரிய சாதனை. கூத்து மட்டுமே இருக்கிறது/ நடக்கிறது. அந்த தரிசனம் தான் முதலில் வருகிறது. ஆனால் அது நடைமுறைக்கு வந்தவுடன் அதன் பயன் பற்றி விவாதம் எழுகிறது. யவனின அதனை அரசனிடம் கொடுக்காதே என்கிறான். நீதான் பிரம்மா என்கிறான். அதனை சிற்பியும் சாமியாரும் மறுக்கிறார்கள். படைப்பது மட்டுமே என் பணி அதன் பின்னால் அதனை பாதுகாக்க அல்லது வேறு என்ன செய்யவேண்டுமெஅன் தீர்மானிப்பது என் வேலை அல்ல அல்லது அப்படி செய்து அதனை பாதுகாக்க முடியாது. இந்த இடத்தில் நின்றுகொள்கிறார்கள். ஆனால் யவனின் பார்வை கோணம் சிற்ப்பியை பெருய அளவில் பாதித்து இருக்கிறது. அந்த சிறையில் மாட்டிக்கொண்ட சிற்பி தவிக்கிறார்.
சரத்: சாத்தன் எனும் சிற்பி தன் வாழ்நாள் உழைப்பாக இந்த பிரபஞ்சத்தை அறியும் தேடலில் கூத்தனாரின் சிற்பத்தை வடித்திருக்கிறார். அதனை அவரது நண்பன், யவனன் பைலார்க்கஸுக்கும், சிவனடியார்க்கும் காட்டுகிறார். இறுதியில் அரசனது கோயிலிக்கு அந்த சிலையை ஒப்படைத்துவிட முடிவெடுத்து, பிரதிஷ்டை முடிந்த அன்று வரும் கனவோடு கதை முடிகிறது.
யவனத்தை சார்ந்த பைலார்க்கஸ் கடவுள் மறுப்பாளனாகவும், சூனியத்தை அல்லது பாழ்வெளியை அறிபவனாகவும், கடவுள் வழிபாட்டாளர்களை நகையாடுபவனாகவும் இருக்கிறான். சிவனடியாரின் போதனைகளை விட பெண்களும், திராட்சை மதுவும் மேலானதாக கருதக் கூடியவன். சாத்தனின் சிலையைக் கண்டு மெய்மறந்து நிற்கும் அவன், சாத்தனையே பிரம்மாவாக, சிருஷ்டி சக்தியாக புகழ்கிறான். இதனை உருவாக்கிய சாத்தனைக் கடந்த இன்னொரு படைப்பு சக்தியை அவன் ஏற்பதில்லை. அந்த சிலையை கோயிலில் வைக்கும் முடிவுக்கு, கடும் எதிப்பு தெரிவிப்பதோடு, சிலையை உடைத்து போட்டாலும் பாதகமில்லை, அப்போதும் ஒவ்வொரு துண்டிலும் ஜீவன் குறையாது என்கிறான்.
சிவனடியாருக்கு, அவர் சார்ந்த சைவ சமயத்தில் அபாரமான பக்தி. அதனை தவிர்த்து மற்ற சமயங்களை எதிரியாக கருதுகிறது அவரது மனம். சாத்தனின் சிலையை காணும் அவர், தேவாரப் பாடலை பாடி, இதன் அழகை கண்டுவிட்ட எனக்கு மானிட பிறவியும் வேண்டுமோ என்று உருகுகிறார். அப்படி உருகும் அவரே, இனிமேல் ஜைனர்கள் தலை தூக்க முடியாமல் செய்துவிடும் இந்த சிலை என்று குதுகலிக்கிறார். அவருக்கு பிற சமயங்கள் மீது வெறுப்பு இருந்தாலும் பைலார்க்கஸின் மீது அன்போடு தான் இருக்கிறார்.
சாத்தன் தனது பிரபஞ்ச ரகசியத்தின் தேடலை, கலைகளிலும், உபநிடதங்களிலும், ஹிமயத்திலும் தேடி தனது 80 வது வயதில் கூத்தனின் சிலையை வடித்து அதில் சாத்தியப்படுத்தியிருக்கிறார். தனது செயலிற்கு பின்னால் இருக்கும் படைப்பு சக்தியை உணர்ந்திருக்கிறார். இந்த அபாரமான கலை சாதனையை அரசனின் கோயிலில் வைக்க அவர் உடன்படுகிறார். ஆனால் கோயிலில் பிரதிஷ்டை செய்த அன்று வரும் அவரது கனவில், அந்த சிலை பல நூற்றாண்டுகளாக எந்த பக்தர்களாலும் பார்க்கப்படாது, ரசிக்கப்படாது, கருமையடைந்து கொண்டுவிட்டது. பக்தர்கள் அனைவரும் கண்களை மூடிக்கொண்டு “எனக்கு மோட்சத்தை கொடு” என்று வேண்டுவதோடு அவர்களுக்கும் சிலைக்கும் உண்டான தொடர்பு முடிந்து விடுகிறது. இவ்வாறு பக்தி இயக்கத்திற்கு பிறகான சமூக அமைப்பை சாடும் கதை சொல்லி, கலைஞன் அந்த கருமை மூண்ட கூத்தனின் சிலையைக் கண்டு அடையும் விரக்தியை சொல்கிறார். இந்த மகத்தான கலைபடைப்பு, பக்தியின் பெயரில் இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டு கிடப்பதைவிட, அதை உடைத்துவிட கலைஞனின் மனம் துடிக்கிறது. வெண்கல சிலையாயிற்றே! அதனால் உடையாமல் விழும் அதனோடு கலைஞனும் விழுகிறான். அவன் ரத்தம் பட்டு இழந்த பொலிவை சிலை மீண்டும் அடைவதாக சாத்தனது கனவு முடிகிறது. புதுமைப் பித்தனுக்கு கலையின் இடம் தம் மரபில், வரலாற்றில் என்னவாக இருக்கும் என்ற பிரக்ஞையே அவரை இந்த முடிவை நோக்கி தள்ளியிருக்கிறது. மூட நம்பிக்கையில், பக்தியில், மூளை சோம்பி உறைந்து போய் கிடக்கும் மக்களை, கலைஞன் தனது ரத்தம் சிந்தி, அவர்களின் திரையிட்ட கண்களில் உண்மையைக் கலையின் வழி உணர செய்ய வேண்டும் என நினைக்கிறார். அவரது கதையின் சீண்டல்கள் அனைத்திற்கும், இந்த உறைசமூகத்தில் சிறு சலனத்தையாவது உருவாக்கிவிட வேண்டும் என்று அவர் நினைப்பது தான் காரணம். கதையின் தலைப்பினை இங்கு நினைத்துக் கொண்டேன். இந்த உறைந்து விட்ட சமூகம் கலைஞனுக்கு நரகமாகவே இருக்கும்.
இறுதியில் பைலார்க்கஸ் முன்பே சொன்னதைப் போன்றே, சிலை உடைப்பை கனவில் கண்டதை எண்ணி அச்சம் அடைகிறார். இறந்த பைலார்க்கஸ் இப்போது இருந்தால், பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையை கண்டு அவனடையும் துயரை அவரால் உணர முடிந்திருக்கும்.
இந்த கதையின் முடிவிலிருந்து சமூகத்தில் பைலார்க்கஸ் போன்ற நிரீஸ்வர தத்துவ வாதிகளின் தேவை சமூகத்தை இயக்கத்தில் வைக்க எந்த அளவிற்கு முக்கியமானது என்பதையும் உணரலாம்.
புதுமைப் பித்தன், காலத்தில் இவ்வாறு ஒட்டு மொத்த சமூகத்தையும் பிரதிப் படுத்தி, அந்த சமூகம் அடையும் வரலாற்று சமூக, சமய மாற்றங்களைக் காணும் ஒட்டு மொத்தப் பார்வையையும், கலைஞனுக்கான தரிசனுமும் கொண்டவராக இருப்பதே அவரை முதன்மையான படைப்பாளியாக ஆக்குகிறது.
.jpg)
கருத்துகள்
கருத்துரையிடுக