கபாடபுரம் - சிறுகதை விமர்சனம்

 




எழுத்தாளர்: புதுமைபித்தன்

காலம்: 1930~1940

எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:

            புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர். 

சிறுகதை சுட்டி: 

            https://www.dinamani.com/literature/pudhumaipithan-story/2020/Jun/11/kabadapuram-puthumaippitthan-short-story-3425394.html

விமர்சனம்:

            https://www.shankarwritings.com/2020/04/blog-post_10.html


நந்தி இலக்கிய வட்டம் விமர்சனம்:

            சரத்: புதுமைபித்தனின் கபாடபுரம், மிகு புனைவு கதைகளுக்கு தமிழில் முன்னோடிக் கதையாக அமைந்தது.

கன்னியின் கோயிலில் இரவு தாழிடப்பட்டு உறங்கும் ஒருவனின் கனவில் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கும் கதையில், நிகழும் கனவு, அவனது சமூக மனத்தின் ஆழத்தையும், சமூக உருவாக்க காலத்தையும் தொட்டு எடுக்கிறது. அறிவிலும் வரலாற்றிலும் ஆழ்ந்து பயணித்து மரணத்தைப் பற்றிய கேள்விகளின் வழியே பலியிடப்பட்டவர்களையும் காட்டுகிறது.

கனவினில் கடலில் நிலவொளியில் இறங்கி செல்லும் போது, அவன் பார்க்கும் கடல் கொண்ட கோயிலின் கன்னியையும், தற்போது கரையில் அமைந்திருக்கும் கன்னியின் மஞ்சள் மெழுகிய முகமும் ஒரே போன்று இருப்பதை காண்கிறான். இத்தனை காலமாக வழிபடப்பட்டு வரும் இந்த கன்னியின் கதையை அறிய விரும்பி ஆழ்ந்து பயணிப்பவன் முதலில் சென்றடைவது சித்த லோகத்தை. காலத்தை வென்றவர்கள் வாழும் சித்த லோகத்தில் பிறப்பும் இறப்பும் நிகர் செய்யப்பட்ட சமநிலை நிலவுகிறது. தங்களது சூக்கும ஞானத்தால் உடல் கடந்தவர்களாகவும், மற்றவர்களின் மனதினை அறியக் கூடியவர்களாகவும், முக்காலத்தையும் அறிந்தவர்களாகவும், உடலின்றி ஜீவிக்க முடிந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

கன்னியின் வரலாற்றினை அறிய விரும்புபவனுக்கு சித்த லோக தலைவர் கடல் கொண்ட குமரிக் கோடையும், கபாடபுரத்தையும் சொல்கிறார். படைப்பு காலம் தொட்டே வணங்கப்பட்ட மீன் அன்னை தென் மதுரை அழிந்த பின், கபாடபுரத்தில் ஈசனின் காலடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்படுகிறாள்.

அவளுக்கு பலியிடப்படும் அழகிய பெண்ணின் முகமே கடல் கொண்ட கோயிலிலும், கரையில் இருக்கும் கோயிலிலும் காவல் தெய்வமாக வணங்கப்படுவது. அவளது பலியிடலின் போது கர்ப்பேந்திரம் என்னும் ராட்சத மிருகத்தினை, வேலேந்திய வீரனும் சடையனும், சேர்ந்து அழிப்பதையும், அந்த மிருகம் நிமலனின் உருவமாக தெரியும் எரிமலையினுள் விழுவதால், நெருப்பு பொங்கி நகரினை அழிப்பதாகவும் கபாடபுரத்தின் முடிவு சொல்லப்பட்டிருக்கிறது.

பலவித கற்பனைகளை விரிக்க செய்வதாக இந்த உருவகம் அமைந்து விடுகிறது. பெண்மையமாக கொண்ட சமூக அமைப்பினையே இந்த பயங்கர உருவமாக உருவகித்துக் கொள்ள முடியும். அதனை வென்றெடுக்கும் சித்திரமும், அதனால் கபாடபுரம் அழிந்து போனதுமாக வாசிக்க முடியும். இன்னொரு வகையில் கன்னி தெய்வம், ஈசனிற்கு துணை தெய்வமாக ஆக்கப்படுவதையும் காணலாம். நெற்றிக்கண் நிமலனாக விளங்கும் எரிமலையின் அழிவு சக்தி பிரதானப்படுத்தப்பட்டு சமூக மாற்றத்தினை பிரதிபலிப்பதாக மாறுகிறது. எப்படியிருப்பினும், பெண்ணை பலியிட்டு ஒரு சமூக அமைப்பு உருவாகி வந்திருப்பதையும், அவ்வாறு பலியிடப்பட்ட பெண் காவல் தெய்வமாக அமர்த்தப்பட்டு வழிபடப்பட்டுக் கொண்டிருப்பதையும் சென்றடையும் வரலாற்று ஆழமாக காணலாம்.

ஒரு கற்பனை உலகத்தை மிகச்செறிவாக உருவாக்கி அதில் கட்டின்றி பயணிக்கவும், அவரது பிரக்ஞை அதில் ஓரமாக ஒட்டிக் கொண்டு மட்டுமே இருப்பதையும் வியக்காமல் இருக்க முடியவில்லை. எள்ளல் கொண்ட தன்னுரையாகவும், உரையாடலாகவும், காட்சியாகவும், உருவகமாகவும், ஞானமாகவும், வரலாறாகவும் பிணைந்து தாவிச் செல்லும் இக்கதையும், கதை சொல்லும் முறையும் தமிழின் மகத்தான சாதனைகளில் ஒன்று.

            

            குமரகுரு: புதுமைப்பித்தன் அவர்கள் 1945 இல் எழுதிய இந்த சிறுகதை கனவு போன்ற மேஜிக்கல் ரியலிசம் பானியில் எழுதப்பட்டது. கதை சொல்லி இந்தக் கதையில் ஒரு கனவு நிலையில் தன்னை வேறு பரிணாமத்தில் உள்நோக்குகிறார். கதை சொல்லி ஒரு கோயிலின் கிழக்கு கோபுரம் நுழைவாயிலில் இருந்து ஒரு மயக்க நிலையில் அல்லது தூக்க நிலையில் இருக்கும்போது கடல் உள்வாங்குகிறது அங்கு அவருக்கு வேறு உலகம் தெரிகிறது. அந்த உலகத்துக்கு உள்ளே அவர் பயணம் செய்து நம்மையும் புதுமைப்பித்தன் அழைத்துச் செல்கிறார். அந்த உலகத்திற்கு உள்ளே அவர் சென்று அவர் அடையும் அனுபவங்களை இந்த கதை விவரிக்கிறது . அந்த உலகத்தில் ஒரு சித்த புருஷருடன் உரையாடுகிறார் கதை சொல்லி . அவர்களுக்குள் இருப்பு , காலம் , மரணம் மற்றும் மாயையின் தன்மை பற்றி பேசுகிறார் இதன் மூலம் நம்மையும் சிந்திக்க வைக்கிறார் .இந்தக் கதையின் மூலம் வாழ்க்கையின் நிலையற்ற தன்மை மற்றும் மாயை ஆராய்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது முக்கியமாக கடலின் நிரந்தர தன்மையை மனித சாதனைகளின் நிலையற்றத் தன்மையுடன் வேறுபடுத்துகிறது .என்பது ஆண்டுகளுக்கு முன்னாள் இந்த கதை எழுதப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது . இந்த உலகத்தின் நிரந்தர இன்மையின் போக்கை நமக்கு ஞாபகப்படுத்த இந்த கதையை புதுமைப்பித்தன் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.


கருத்துகள்

விருப்பமான பதிவுகள்

கயிற்றரவு - சிறுகதை விமர்சனம்

ஒருநாள்கழிந்தது - சிறுகதை விமர்சனம்

குளத்தங்கரை அரசமரம் - சிறுகதை விமர்சனம்