அன்றிரவு - சிறுகதை விமர்சனம்




எழுத்தாளர்: புதுமைபித்தன்

காலம்: 1930~1940

எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:

            புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர். 

சிறுகதை சுட்டி: 
        

பிற விமர்சனம்:


நந்தி இலக்கிய வட்டம் விமர்சனம்:

        தமிழ்ச்செல்வி : புதுமைப்பித்தன் அவர்களின் “அன்று இரவு” என்ற சிறுகதை, புராணக் கதையை எடுத்துக் கொண்டு அதில் தத்துவமும் மனித மனக் கலக்கமும் கலந்து புதிய இலக்கிய வடிவமாக உருவாக்கிய ஒரு ஆழமான படைப்பு. கதையின் வெளிப்படையான அடுக்கு பாண்டிய மன்னன், அமைச்சர் வாதவூரர் மற்றும் சொக்கன் (இறைவன்) ஆகியோரின் சம்பவங்களைச் சுற்றியே இருந்தாலும், அதன் உள்ளடக்கம் மனிதன் – கடமை – தர்மம் – ஆன்மிகம் ஆகியவற்றின் மோதலை ஆராய்கிறது.
கதையின் மையத்தில் உள்ள வாதவூரர் என்ற பாத்திரம், சாதாரண அரசியலமைப்புச் செயலாளராக இருந்து தெய்வீக அனுபவத்தால் மனமாற்றம் அடைந்த மனிதனின் உருவகமாக நிற்கிறார். அரசாங்க பணத்தைக் குதிரை வாங்காமல் தெய்வ அனுபவத்தில் கரைத்துவிட்டவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அவர், உலக தர்மமும் (நீதி, பொறுப்பு) ஆன்மிக தர்மமும் (அறிவு, தன்னலமின்மை) இடையே சிக்கிக் கொள்கிறார். இதன் மூலம் எழுத்தாளர் “நீதியென்ன? பொய்யென்ன? உண்மையென்ன?” என்ற அடிப்படை கேள்விகளை வாசகனிடம் எழுப்புகிறார்.
கதை அமைப்பில் மூன்று நிலைகள் (மன்னன், அமைச்சர், இறைவன்) ஒரே நேரத்தில் நகர்வது மிகச் சிறப்பான கலை நயமாகும். அரிமர்த்தன பாண்டியனின் மனக்குழப்பம் அரசியல் பொறுப்பின் சுமையைக் காட்டுகிறது. வாதவூரரின் உள்ளார்ந்த வேதனை ஆன்மீக சோதனையை வெளிப்படுத்துகிறது. சொக்கன் என்ற இறைவனின் விளையாட்டு, இந்த இரண்டையும் தாண்டிய பரம்பொருள் லீலையை உணர்த்துகிறது. இந்த மூன்று நிலைகளும் இணையும் இடத்தில் தான் கதையின் உச்சம் உருவாகிறது.

புதுமைப்பித்தன் மொழிநடை இந்தக் கதையில் மிகச் சிறப்பாகத் திகழ்கிறது. கவிதைநயமான உருவகங்கள் (“நட்சத்திரம் சிரித்தது”, “நரி ஊளையிடும் இருள்”) மூலம் ஒரு மாய உலகை உருவாக்குகிறார். அதே சமயம், தத்துவ சிந்தனைகள் மிகவும் இயல்பாக கதையின் ஓட்டத்தில் கலந்து வருகிறது. குறிப்பாக வாதவூரரின் மனக்குரல்கள், மனிதனின் குற்ற உணர்வு மற்றும் ஆன்மிக விழிப்பு ஆகியவற்றை மிகத் தெளிவாகப் பதிவு செய்கின்றன.
இந்தக் கதையின் முக்கியமான பலம் – அது ஒரு தீர்வை வழங்கவில்லை. வாசகன் தானே தீர்வு கண்டுகொள்ள வேண்டிய கேள்விகளை முன்வைக்கிறது. தர்மத்தை காக்கும் அரசனும் சரியா? ஆன்மிக உண்மையில் மூழ்கிய அமைச்சரும் சரியா? அல்லது இரண்டையும் தாண்டி விளையாடும் இறைவனே உண்மையா? என்ற சிந்தனையை உருவாக்குகிறது.
மொத்தத்தில், “அன்று இரவு” என்பது ஒரு சாதாரண புராணக் கதையின் மறுபதிப்பு அல்ல. அது மனிதனின் உள்ளார்ந்த போராட்டத்தை வெளிப்படுத்தும் தத்துவ இலக்கியம். ஆழமான சிந்தனை, கலைநயம், மற்றும் மொழி வளம் ஆகிய மூன்றையும் இணைத்துக் கொண்ட சிறந்த தமிழ்ச் சிறுகதைகளில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது.

        மகேந்திரன் :
            வடிவம் பற்றி:
                நான்கு பகுதிகளாக இந்தச் சிறுகதை அமைந்துள்ளது. ஒவ்வொன்றும் ஒரு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. பொதுவாகச் சிறுகதையின் மையம் என ஒருவர்/ஒருவரின் மன ஓட்டம் இல்லாமல் பல நபர்கள் இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு பகுதிகளிலும் இடைவெட்டு அமைந்துள்ளது. அது கதைக்கு ஒரு மெட்டாஃபிக்ஷன் தன்மையை அளிக்கிறது. 

                இது செவ்வியல் சிறுகதையின் வடிவத்தை மீறி இருக்கிறது என்பது உண்மை. அப்படியானால் எது இதனைச் சிறுகதை ஆக்குகிறது? புராணக்கதையை மீட்டுருவாக்கம் செய்து அதன் முடிச்சு படிப்பவர்களை (பக்திமான்களை) சங்கடமான நிலைக்குத் தள்ளுகிறது. ஒரு பக்தி காலகட்டக் கதை சிறுகதையாகிவிட்டது. 

            சிறுகதையின் மொழி:

                “பரிகள் எங்கேயோ, வெள்ளம் எங்கேயோ, வெள்ளத்தில் நீந்தியவன் எங்கேயோ, அங்கே அரிமர்த்தனபாண்டியன்”

            ஒரு செய்யுள் போல மொழி அதன் கவித்துத்தை அடைகிறது. பின்வரும் பாடலை இதனுடன் ஒப்பிடலாம். 

ஆவா எங்கே? அரங்கம் எங்கே?
அரசன் எங்கே? அரசு அங்கே 
                    - கம்பராமயாணம் (அயோத்தியாகாண்டம்)

“அசுரப் பசி போலச் சுழித்தோடும் வெள்ளத்தில் மீன்போலப் புரண்டு, முழுகி, முக்குளித்து விளையாடினான்”

என்ன ஒரு அழுத்தமான வரிகள் இவை. வெள்ளம் பசியோடு இரையை விழுங்க அந்த நகரில் புகுந்து ஓடுகிறது. ஈசன் மீன் போல அதில் விளையாடுகிறான். எதன் பசி அது? அதில் விளையாடும் பரம்பொருள் எது? சின்ன சின்ன குறிப்புக்கள் மூலம் கதையை அதன் அழத்திற்கு எடுத்துச் செல்கிறார் ஆசிரியர். அதே சமயம் தன் கிண்டலையும் விட்டுவிடவில்லை. 

“வையை நதியிலே வெள்ளம் இப்படி வந்தது என்று சொன்னால் நம்புகிறவர்கள் யார்? சில சமயங்களில் கண்ணால் காணும் விஷயங்கள்கூட நிஜமா என்ற சந்தேகம் தோன்றுகிறது.”

கவித்துவமும், கிண்டலும், அழகான வர்ணனையும் கொண்ட அதி அற்புதமான மொழி கொண்ட கதை இது.

            பேசுபொருள்:

    தர்மசங்கடமான இடம் திருவாதவூரன் பணத்தைப் போகத்தில் செலவிட்டு வந்து நிற்கிறான்.பாண்டியன் திருக்கோவை பாடியதால் அவனைத் தண்டிக்க நினைக்கவில்லை. எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என எண்ணுகிறான். ஆனால் அவனது அமைச்சன் பின்வருமாறு கூறுகிறான். 

“மன்னிப்பது என்றால் பாண்டியன் தனது ஆட்சியை அழிப்பது என்பதே பொருள்”

பாண்டியனுக்கு நீதிதானே முக்கியம். பாண்டியனே ஆனாலும் அரசு பணத்தை வீணடிக்க முடியாது. யானோ அரசன்? யானே கள்வன் என விழுந்து சாகும் பாண்டிய குலத்தவன் அல்லவா? 

“நீதி என்ற ஒன்று திருப்தியடையும்படி நான் பதில் தந்துவிட்டால் என்னைப் பாதுகாத்து மறுபடியும் இந்த மந்திரி உத்தியோக விலங்கை மாட்டிவிடுவதில் அவனுக்கு என்ன ஆசை!”

பாண்டியனின் நீதி உணர்வை பாதுகாக்கும் பொருட்டு குதிரைகள் வந்துவிட்டன 

“உலகத்தையே பொய்ப்பிக்கும் பொய்யை உண்டாக்கிய நான் அதமன் அல்லவா? சர்வேசுவரனுடைய லீலை என்னுடைய பொய்க்கும் துணை நின்று அதை மெய்ப்பிக்க அதல பாதாளத்தில் இறங்குமாகில் அது... அது... எனது நா எழவில்லையே...!” 

செய்தது தவறு என்றாலும் பரம்பொருளே அதற்குத் துணை நின்று சரி செய்துவிட்டாரே என்பதனை தாங்காமாண்டாமல் திருவாதவூரன் மனம் பின்வருமாறு குமுறுகிறது. அப்படியானால் நீதி என்ற ஒன்று இல்லையா? பக்தியின் பொருட்டு இறைவன் இறங்கிவந்து எல்லாவற்றையும் சரி செய்துவிடுவானா என்ன? 

ஈசன் தன் திருவிளையாடலை ஆரம்பிக்கிறான். ஈசன் திருவாதவூரன் ஆகிறான். பரமாத்மா ஜீவாத்மாவாகிறது. அதன் கவலைகள் எல்லம் தன் கவலைகள் ஆகிறது. மண் சுமக்காமல் ஆனந்தமாய் விளையாடு சொக்கனைப் பாண்டியன் அடிக்கிறான். அந்த அடி பல இடங்களுக்குச் செல்கிறது.

“காலத்தின் மீது விழுந்தது. தர்மதேவனுடைய வாள் மீது விழுந்தது. சாவின் மீது, பிறப்பின் மீது, மாயையின் மீது, தோற்றத்தைக் கடந்தவன் மீது, வாதவூரன் மீது, வாதவூரன் வேதனையின் மீது, அவன் வழிபட்ட ஆசையின் மீது, அவனது பக்தியின் மீது அந்த அடி விழுந்தது. அங்கயற்கண்ணியின் மீது விழுந்தது. அவளது நெற்றித் திலகத்தின் மீது, கொங்கைக் குவட்டின்மீது அந்த அடி விழுந்தது.”

அப்படி விழுந்த பொற்பிரம்பு எது? 

ஈசனும் படைப்புக்குப் பின்னால் வந்தவன். அப்படியானால் அந்த பொற்பிரம்பு எது? எதன் நீதியின் அடிப்படையில் அது ஈசனையும் அன்னை போன்ற அங்கயற்கண்ணியையும் அடித்தது. பாண்டியன் அந்த பெரும் நீதிக்கு தலைப்பட்டவன். அப்படி இல்லை என்றால் பாண்டியன் தனது ஆட்சியை அழிப்பது என்பதே பொருள். 

“அதன் மூலகாரணம் என்ன?
தேவர்களோ
சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்!

அப்படியானால் அது எப்படிப்பிறந்தது?

யாருக்குத்தெரியும் அது?
அதை யார் உண்டுபண்ணினார்கள்
அல்லது உண்டுபண்ணவில்லை?”
                                -    சிருஷ்டி கீதம். 

கேள்வி:  மனித அறத்தை (நீதிக்கு) மேல் ஒரு நீதி இருக்கிறதா? அப்படி இருந்தால் அது எதன் நீதி? மனித நீதிக்கும் அந்த ஒன்றின் நீதிக்கும் உள்ள உறவென்ன? உறவில்லை என்று வைத்துக்கொண்டால் மனித நீதிக்கு என்ன பொருள்? 
 

கருத்துகள்

விருப்பமான பதிவுகள்

கயிற்றரவு - சிறுகதை விமர்சனம்

ஒருநாள்கழிந்தது - சிறுகதை விமர்சனம்

குளத்தங்கரை அரசமரம் - சிறுகதை விமர்சனம்