சாமியாரும் குழந்தையும் சீடையும் - சிறுகதை விமர்சனம்

     




எழுத்தாளர்: புதுமைபித்தன்

காலம்: 1930~1940

எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:

            புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர். 

சிறுகதை சுட்டி: 

            https://www.dinamani.com/literature/pudhumaipithan-story/2020/Aug/03/saamiyarum-kulanthaiyum-seedaiyum-puthumaippitthan-short-story-3445110.html

நந்தி இலக்கிய வட்டம் விமர்சனம்:

            மகேந்திரன் : மனிதன் அறிவாலும் உணர்ச்சியாலும் மாட்டிக்கொண்ட மிருகம். இரண்டு குதிரைகள் எதிர் எதிர் பக்கம் இழுக்கும் இடத்தில் நிற்கிறான். அறிவை கடவுளின் இடம் கொடுத்திருந்தால் மிருகம் போல வாழ்த்திருக்கலாம். கொடுமை அவனுக்கே தனக்கு அறிவு இருப்பது தெரியவில்லை. அதனால் மனிதன் தன்னை அறிவாளி என எண்ணிக்கொள்கிறான். பிறகு வெட்கம் இல்லாமல் கடவுளை உருவாக்கி அவர்தான் எல்லாம் என்கிறான். போதாமையை உணர்ந்து மறுபடியும் புதிய கடவுள்களை உருவாக்குகிறான். இப்படி எல்லையே இல்லாத வட்டத்தில் மனிதன் மாட்டிக்கொண்டான். இந்த வட்டத்தில் சிக்கிக்கொண்டதற்குக் காரணம் அவன் அறிவாளி என்பதால்தான். கடவுள் அறிவாளியாக இருந்திருந்தால் மனிதனை இப்படி சும்மாவிட்டு இருப்பாரா? அந்தக் குழந்தை கடித்த சீடையின் கடுக்கென்ற சத்தம் மட்டும் எஞ்சுகிறது. அது என்ன அப்படிப்பட்ட சத்தம்? மனிதன் உருவாக்கிய சத்தம். கடைசியில் எஞ்சுவது அது மட்டுமே? 

கடவுள் என இதனை வைக்கமால், மனித பண்பாடு என வைத்தும் இதனைப் படித்துப்பார்க்கலாம். அந்த பண்பாட்டின் ஒரு அங்கமாகக் கடவுளை வைக்கலாம். ஆன்மீகமான கடவுள் அல்ல அவர். சத்தத்தை வைத்து அந்த மனிதனை அடையலாம். 

மிகச் சிறிய கதை. இப்பொழுது எழுதும் ஒரு பக்க கதை போல இருக்கிறது இதன் அளவு. ஆனால் செவ்வியல் சிறுகதையின் வடிவத்தை அடைந்திருக்கிறது. இதன் தத்துவ ஆழம்தான் இந்தக் கதையை மேலும் முக்கியத்துவம் மிக்க கதையாக மாற்றுகிறது. 

            சரத் : இந்தக் கதையில் ஒரு சாமியார் மனிதனின் சிக்கல்களை ஓடும் தாமிரபரணியைப் பார்த்தவாறு ஆராய்ந்து கொண்டிருக்கிறார். அவரது நான்கு பக்கமும் இருப்பவைகளைச் சொல்லி இறுதியில் ஒரு நாணல் ஆற்றினுள் மூழ்குவதோடு கதை முடிகிறது, 1934 – இல் எழுதப்பட்ட இந்தக்கதை புதுமைப்பித்தனின் ஆரம்பக் கால கதைகளில் ஒன்று.

இந்தக்கதையில் ஆசிரியர் எவ்வாறு தடுமாறி நிற்கும் மனித வாழ்வின் ஒட்டுமொத்தத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு சிந்திக்கிறார் என்பதை நம்மால் உணரமுடியும். கதையில் எழுதப்பட்ட ஒவ்வொன்றையும் ஒவ்வொரு குறியீடாக மாற்றி விடுகிறார். நதிக்கு அந்தப்புறமிருக்கும் சிந்து பூந்துறையின் மக்கள் வாழ்வினையும், சுடுகாட்டினையும் சொல்லும்போது அது ஒட்டு மொத்த இந்திய நாட்டினைக் குறிப்பதாகவே எண்ணலாம். சாதாரண மனிதர்களின் வாழ்வின் ஏமாற்றங்களையும், அவர்களது வாழ்வெனும் நோயினையும் நீக்குவதற்குச் சுடுகாடு எனும் மருத்துவரும், சாவெனும் மருந்தும் அத்தியாவசியமாக இருக்கிறது.

சுலோசன முதலியார் பாலம் உடைந்து மீண்டும் கட்டப்பட்டு நிற்பதை, தற்போதிருக்கும் மதத்தின் நிலையைக் குறிப்பதாகவே எண்ணலாம். பரந்து உயர்ந்திருக்கும் பொதிகை மலை வானோடு கொண்டிருக்கும் உரையாடலை எதிரொளிப்பதாக பேராய்ச்சியின் கோயில் இருக்கிறது எனக்  கருதுவது, சிறு தெய்வங்களுக்கு அல்லது அன்னை தெய்வங்களுக்கு இயற்கையுடனான உறவைப் புதுமைப்பித்தன் புரிந்து கொண்டுள்ள விதத்தினை அறிந்து கொள்ளலாம். சுப்பிரமணியனின் அழகும் நம்பிக்கையும் எல்லாம் அந்த பேராச்சியின் தயவிலிருப்பதாகக் கதையில் சொல்லப்படுவது இயற்கை ஆன்மீகத்தின் தயவில் உருவாகி நிற்கும் மதங்களைப் பற்றிய சிந்தனையாக மாறுகிறது.

நிறைந்தோடும் தாமிரபரணி காலப்பிரவாகத்தின் உருவகமாகிறது. அந்த சிறு குழந்தை தாமிரபரணியில் காலாட்டுமிடம், குழந்தை மனதிற்கும் ஆன்மீகத்திற்குமான நெருக்கத்தை உணர்த்துகிறது. மனிதனின் அறிவால் அவன் பிறப்பிக்கும் கடவுள்கள் அவனை இந்த இயற்கையான ஆன்மீகத்திலிருந்து விலக்கி விடுகின்றன. மனிதனின் அறிவே மனிதக் குலத்திற்குத் தடையாகிறது. படைப்பித்த எதையும் அழிப்பதற்கு இயலாத மனிதன், அவன் உருவாக்கிய நாகரீக உலகத்தில் வாழ்ந்து, நோயுற்று, ஏமாற்றத்தால் தளர்வுற்று இயற்கையிலிருந்து விலகி நெருப்பில் வீழ்ந்து அழிகிறான். இதை உணரும் அந்த சாமியார், நாணல் புல் ஆற்று நீரில் மறைவது போன்று காலப்பிரவாகத்தில் இணைந்து தடயமற்று போவதைச் சொல்கிறது.

இச்சிறிய கதையில், மனிதனின் அறிவினால், படைப்பினால் அவன் உருவாக்கிய கடவுளும், மதமும் எப்படி அவனை இயற்கையிலிருந்து பிரித்து மாய வலையில் அவனையே சிக்க வைத்திருக்கிறது என்ற மிகப்பெரிய சித்திரத்தை ஆசிரியரால் சொல்ல முடிந்திருக்கிறது. மிகப்பெரிய காகிதத்தை மடித்து மடித்து கையடக்கமாக்கி சட்டைப்பையில் வைத்திருப்பதைப் போன்று எழுதப்பட்ட இக்கதையை வாசகர்கள் விரித்துக் கொண்டே செல்ல முடியும் என்று நினைக்கிறேன். கதையின் முடிவாக ஆன்மீக அனுபவத்தையே அமைத்திருப்பது அருமை. ஆனால் இது சிந்தனையில் முழுமையாக்கப்பட்ட கதை என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

கருத்துகள்

விருப்பமான பதிவுகள்

கயிற்றரவு - சிறுகதை விமர்சனம்

ஒருநாள்கழிந்தது - சிறுகதை விமர்சனம்

குளத்தங்கரை அரசமரம் - சிறுகதை விமர்சனம்