வேதாளம் சொன்ன கதை - சிறுகதை விமர்சனம்
எழுத்தாளர்: புதுமைபித்தன்
காலம்: 1930~1940
எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:
புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர்.
சிறுகதை சுட்டி:
நந்தி இலக்கிய வட்டம் விமர்சனம்:
கா. சிவா: கதைக்கும் சிறுகதைக்கும் வேறுபாடு உள்ளது. வெறுமனே ஒரு சம்பவத்தைக் கூறுவது கதை. நடந்த சம்பவத்தின் வேறொரு தளத்தைக் காட்டுவது அல்லது உணர்த்துவது சிறுகதை. அதாவது மேலோட்டமாக காட்டப்படுவதற்கு அடியில் உள்ளுறையாக வேறொரு பரிமாணத்தைக் கொண்டிருப்பதே சிறுகதை என சற்றேறக்குறைய வரையறுக்கலாம்.
"வேதாளம் சொன்ன கதை" யில் கதை சொல்லி ஒரு துப்பாக்கியை இரவல் வாங்கிக் கொண்டு சிறு வேட்டைக்குச் செல்கிறான். எதையும் வேட்டையாடாமல் காட்டுக்குள் பல யுகங்களாக வசிக்கும் உடல் தளர்ந்த விந்தையான வேதாளத்தைக் காண்கிறான். அதனுடன் உரையாடியபடி திரும்புகிறான். இவ்வளவுதான் கதை.
வேதாளம் பற்றிய விவரணைகள் புன்னகைக்க வைக்கின்றன. அதன் காலத்தை உணர்த்த அது சந்தித்த புராண பாத்திரங்களை எல்லாம் கூறுவது சுவாரசியமாக உள்ளது. மிகவும் மேலோட்டமாக விளையாட்டுத்தனத்துடன் எழுதப்பட்டுள்ள இக்கதையில் காணக்கிடைக்கும் பகடியும் புராண பாத்திரங்கள் மீதான விமர்சனமும் புதுமைப்பித்தனின் முத்திரைகள். இதைத் தவிரக் கதை பற்றிக் கூற ஏதுமில்லை.
பொன்னகரம், கயிற்றரவு, செல்லம்மாள் போன்ற மகத்தான கதைகளை எழுதிய தமிழின் முதன்மையான முன்னோடி புதுமைப்பித்தன். அவரது கதைகள் எழுதப்பட்டு எண்பது ஆண்டுகளாகின்றன. ஆனாலும், இப்பொழுது எழுதப்படும் எந்தவொரு புதுவடிவ புனைவிற்கும் முன்மாதிரியான ஒன்று அவரது கதைகளில் இருக்கும்.
அதேபோலவே சிறுகதையாகாத கதைக்கும் உதாரணமாக அமைந்த கதையாக "வேதாளம் சொன்ன கதை"யை கூறலாம் எனத் தோன்றுகிறது.
இம்மாதிரியான கதைகளையும் எழுத அவர் முயற்சி செய்துள்ளார் என எடுத்துக் கொள்ளலாம். ஒரு கதிரிலுள்ள எல்லா நெற்களும் விதை நெல்லாவதில்லை. ஒன்றிரண்டு பதர்கள் இருப்பதும் இயல்பே.
மகேந்திரன்: கதை சொல்லி தன் தகுதி என மிளா, மான், முயல் எனச் சொல்கிறான். அப்படியானால் இன்னும் அவன் கத்துக்குட்டியாகவே இருக்கிறான். அப்படிப்பட்ட கத்துக்குட்டி கதை சொல்லி ஒரு வேதாளத்தைப் பார்க்கிறான். திரேதாயுகத்து வேதாளம். பொதுவாக வேதாளம் ரத்தம் எல்லாம் குடித்து மனிதர்களைக் கொல்லும். ஆனால் இது தேன் மட்டுமே குடித்து வாழும் சைவ வேதாளம். இதற்கெல்லாம் காரணம் சமணர்கள்தான். சிவனே ஒரு குருவிக்கூட்டை எரிக்க முடியாது எனச் சொல்கிறது.
இந்தக் கதை வரலாற்றுப் பரிமாணத்தை எளிதாகச் சொல்லிக்கடந்து வருகிறது. கடைசியில் அந்த வேதாளம் இந்தக் காலத்து மனிதராகிவிட்டது. பணத்து என்ன செய்யலாம் எனக் கேட்கிறது. நாம் வேதாளத்தை இன்னும் பழங்காலாத்திலேயே நிறுத்திவிடுகிறோம். மனிதர்களாகிய நாம் மட்டும்தான் வளர முடியுமா என்ன? அறிவு வளரும் அதே வேளையில் மனிதர்களுக்கு வரும் பிரச்சனையும் அந்த வேதாளங்களை தோற்றிக்கொள்கிறது. பல் போய், கை கால்கள் நோவு வந்துகிடக்கிறது.
பயப்படும்படியாக இருந்த வேதாளம் இப்படிப் பரிதாபமான நிலைக்குச் சென்றுவிட்டது. இதிலிருந்து ஒரு வாசகன் அடையும் இடம் என்ன? வரலாற்றின்கோட்டை திரேதாயுகத்திலிருந்து இந்தக் காலம் வரை இழுத்துவிட்டார். நமது பண்பாட்டின் மாற்றங்களைக் கூறியபடி கதை நகர்கிறது.
இது ஒரு நல்ல பகடிச் சிறுகதை வரிசையில் வைக்ககூடிய கதை. புத்தகம் ஒன்றும் நன்றாக விற்பனை ஆவது இல்லை ஆனால் கோயில் என்னவோ நல்ல வரும்படி வரும் வழிதான். அதற்கு நிறைய பணம் வேண்டும் என்பதால் அந்த நல்ல ஐடியாவை ஒத்திவைக்கிறார்கள். அறிவுவைப் பற்றி யாரும் சட்டைசெய்வதில்லை, பக்தியில் முழ்கி கிடக்கிறார்கள் என குத்திக்காட்டுகிறார் ஆசிரியர்.
“அரிசி, 'விட்டமின் டி' எல்லாம் சேர்த்து சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக்கொள்ளும்படி அதற்கு ஆலோசனை கூறிவிட்டு” கதை சொல்லி நகர்கிறான்.
கருத்துகள்
கருத்துரையிடுக