எழுத்தாளர்: புதுமைபித்தன்
காலம்: 1930~1940
எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:
புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர்.
சிறுகதை சுட்டி:
https://daily.navinavirutcham.in/?p=22158
நந்தி இலக்கிய வட்டம் விமர்சனம்:
வீரராகவன் : மரணத்தை எதிர்கொள்ளும் பல கதைகள் இருந்தாலும் அங்கதத்தினால் வெல்லும் ஒருகதையை வாசிக்கும்போது புன்னைகை அல்ல வெகுவாகவும் சிரிப்பே மேலோங்குகிறது. அகாலத்தில் இருக்கும் எமபுரியும் அகாலத்தில் வாழும் கிழவியும் சந்தித்தால் என்பதை ஒட்டி கதை நகர்கிறது.
ஆனால் சித்ரபுத்திரனுக்கு பார்வை மழுங்குவது அங்கும் காலம் புகுந்துகொள்வதை காட்டுகிறது. ஆனால் கிழவியோ பேரன் கிடா என வாழ்ந்துகொண்டு பார்வை மங்கி அகாலத்துக்குள் சென்றுகொண்டிருக்கிறாள். இப்போது அகாலத்திலிருக்கும் யமன் காலத்தில் வாழும் உயிர்களை கொண்டுசெல்வதற்கு பதிலாக காலத்திலிருக்கும் யமன் அகாலத்திலிருக்கும் கிழவியை பார்க்கிறான்.
அவனிடம் தன்னை கொண்டுபோக முடியாது என வாதிடும் கிழவி, ஆத்மாவின் சுழற்சியே பிறப்பு என எமனுக்கு உணர்த்துவதன்வழி அவனை வெல்கிறாள். ஒரு சொல்லைக்கூட வீணாக்காமல் எழுதும் புதுமைப்பித்தன் மாடசாமியை கதையில் வைக்கும் இடத்தை நோக்கும்போது அத்வைத மரபின்படி ஆத்மா எங்கும் செல்வதில்லை இங்கேயே மறுபிறப்பெடுக்கிறது என்று காட்டவே என உணரலாம். அவனை பாட்டனின் ரத்தம் என உணரும் மருதாயியை அழைக்க எமனே வருவது ஆச்சரியத்தை தரவில்லை. வந்தும் வெறுங்கையுடன் திரும்புவது மேலும் சாதாரணமாத்தான் தோன்றுகிறது.
இந்த சுழற்சியில் எமனும் பேரனாகி எருமையை கட்டுவது பாசத்தை விட்டத்தில் தொங்கவிடுவது என மாறுகிறான். கிழவியோ எந்த மாற்றமுமில்லாமல் அவளாகவே இருக்கிறாள்.
ஒருமுறை எழுத்தாளர் ஜெயமோகனுடனான உரையாடலில் இப்போது நாம் பார்க்கும் சிறுகதையின் அனைத்து வடிவங்களையும் முயன்றுபார்த்தவர் புதுமைப்பித்தன் என கூறினார். அதேபோல இந்த சுழற்சியையும் சிறுகதை வடிவத்துக்குள் முயன்று பார்த்திருக்கிறார் புதுமைப்பித்தன்.
மகேந்திரன்: எமலோகத்தில் ஒரு அபச குணம் தோன்றுகிறது. “அந்தரத்தில் தொங்கும் ஒளிவாளின் மீது மாசு படர்ந்துவிட்டது. மகாராஜனின் தொழிலிலும் மனத்திலும் மாசு படர்ந்ததால் என்று கிங்கரர்களுக்குள் ஒரு வதந்தி” . சித்திரபுத்திரனுக்கு ஓலைச் சுவடிகளைப் பார்த்துப் பார்த்தோ என்னவோ சிறிது காலமாகப் பார்வை அவ்வளவு தெளிவில்லை. ஒருவேளை தவறாக அந்தக் கிழவியின் பெயரைச் சொல்லிவிட்டானா? இருக்கலாம். எமன் பூலோகம் சென்று கிழவியின் வாதத்தின் குழம்பித் தோற்று எமலோகம் வருகிறான்.
இப்படி ஒரு சம்பவம் முன் ஒரு காலத்தில் நடந்தது. மார்க்கண்டன் உயிரை எடுக்கும் பொருட்டு சிவனிடம் வாங்கிய அடி அவனுக்கு ஞாபகத்தில் வந்தது.
பக்தியின் மகிமையைச் சொல்லும் கதை அது. ஆனால் இந்தக் கிழவி அப்படிப்பட்டவள் அல்ல. கிழவி ஒரு பழமையின் அடையாளம். கும்பினி படைகள் சென்றதெல்லாம் தெரியும்.சாராயம் காய்ச்சுபவள். ஆனால் அவள் கேட்க்கும் கேள்விக்குப் பதிலில்லாமல் ஓடினான் எமன். ஒரு கால மாற்றத்தின் கதை எனக் கொள்ளலாம். வேதாளம் சொன்ன கதை சிறுகதையில் வரும் வேதாளம் எப்படி காலமாற்றத்தின் ஒரு சின்னமாக இருக்கிறது. மாறிவரும் காலத்தை அது புத்தகம் அச்சிடுவது அல்ல கோவில் கட்டுவது எனச் சொல்கிறது. அதனைப் போல இதுவும் ஒரு காலமாற்றத்தைச் சொல்லும் கதை. பக்தி அல்ல ஞானத்தின் காலத்தை.
எமன் தொழில் என்பது உயிரை எடுப்பது. எவ்வளவு உயிர்களை எடுத்தாலும் மீண்டும் மீண்டும் அது ரக்தபீஜன் போல வந்து கொண்டு தானே இருக்கிறது. அப்படியானால் உயிரை எடுத்து மட்டும் என்ன செய்ய முடியும்?
உயிர் என்ற ஒரு தனிப்பட்ட மனிதனின் உயிரைக் குறிக்காமல் இந்த பிரபஞ்சத்தில் வாழும் உயிர் குவியல்களைச் சொல்கிறது. அது எங்கிருந்து வந்தது? பிரம்மம்/ஆதி இயற்கை/அணு எனச் சொல்லிக்கொண்டே போகலாம். விஷ்ணுவின் உந்தியிலிருந்து என்று கூடச் சொல்லலாம். அவன் கண் மூடினால் எல்லாம் மாயமாக மறைந்து போகும். அதுவரை இந்த பிரபஞ்சம் உயிர் குலங்களால் நிரம்பி வழியும். எமன் எடுப்பதும் பிறகு பிறப்பதும் ஒரு வட்டம். தான் என்னவோ செயற்கரிய செயலைச் செய்கிறோம் என நினைக்கிறான் எமன். எப்படி அந்தக் கிழவி தன் கடமை என ஒன்றைச் செய்கிறதோ அதைப் போல எமனுக்கு அது ஒரு கடமைதானோ ஒழியப் பெரிய பதவி இல்லை. அதை உணர்ந்த எமன் வெறும் கையை பிசைந்துகொண்டு செல்கிறான்.
யார் தான் நம்புவார்கள் தான் எமனை வென்று வெறும் கையால் அனுப்பிவிட்டேன் எனச் சொன்னால். ‘குருட்டு மூதி என்னவோ ஒளருது! என்றுதானே சொல்லுவார்கள். ஒருவேளை அந்தக் கிழவி உண்மையின் உங்களிடம் சொல்லியிருந்தால் அப்படித்தானே சொல்லி இருப்பீர்கள். அவளோ கயிரை என்ன செய்வதென யோசித்துக்கொண்டிருக்கிறாள்.கிழவிக்குக் காலம் இன்னும் இருக்கிறது போல. அவளது கண்களைப் போலவே சித்திரகுப்தனின் கண்களும் மங்கிப் போனதுதான் காரணம்.
கருத்துகள்
கருத்துரையிடுக