சாபவிமோசனம் - சிறுகதை விமர்சனம்
எழுத்தாளர்: புதுமைபித்தன்
காலம்: 1930~1940
எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:
புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர்.
சிறுகதை சுட்டி:
நந்தி இலக்கிய வட்டம் விமர்சனம்:
மகேந்திரன் : வரலாறு நெடுகிலும் ஆணாதிக்கத்தின் உச்ச அழுத்தத்துக்குப் பெண்கள் கொள்ளும் இரண்டு நேரெதிரெதிர் வெளிப்பாடுகள் hysteria (வெறி) மற்றும் meloncholia (முருகயர்தல்). இவை இரண்டும் பெண்மையின் வெளிப்பாடுகள், ஆனால் அவற்றில் வெளிப்படும் அவர்களே அறியாத ஆற்றல் என்பது ஒன்றே - கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம் குறித்து எழுத்தாளர் அஜிதனின் விமர்சனத்தின் ஒரு பகுதி.
செய்யாத தவறுக்காக சீதை அக்னிப்பிரவேசம் செய்தால் எனத் தெரிந்ததும் ஆவேசம் அடைகிறாள் அகலிகை. அவளது சீற்றம் கண்ணகி போல எனச் சொல்கிறார் புதுமைப்பித்தன். அதுவே பிறகு மாறி வேறொன்றாக வெளிப்படுகிறது. முனிவர் ஒரு குழந்தை இருந்தால் எல்லாம் சரியாகவிடுமென நினைத்து தன் குடிலுக்குள் வந்து தழுவிக்கொள்ளும் கணவனைப் பார்த்து இந்திரனாக இருந்தால் என அவள் பயப்படுகிறாள். இந்திர நாடம் என எண்ணுகிறாள். கணவனாகவும் இருக்கலாம் இந்திரனாகவும் இருக்கலாம். எப்படி இருந்தால் என்ன? இவர்கள் (ஆண்கள்) என்ன சொல்கிறார்களோ அதுதானே சரி என்பதைப் போல அவளது எண்ணம் இருக்கும். தனக்குள் அடங்கிக்கொள்கிறாள். முனிவர் அகலிகையைத் தழுவ முடியாமல் சிலை (கல்லை) மட்டுமே தழுவுகிறார். அகலிகை ஒருவகையில் தனக்குள் ஒடுங்கிக்கொண்டாளோ (முருகயர்தல்)?
"சாட்டையின் சொடுக்கைப் போலப் போக்கை மாற்றியமைக்க வந்த சக்திகள் அவ்விடம் விட்டுப் பெயர்ந்தன" அந்த சக்திகள் பற்றித்தான் இந்தக் கதை. கோதமன் ஒரு கட்டத்தில் உணர்ந்துகொள்கிறார், இவள் கற்சிலை என. இனிமேலும் அவளை மனித பெண்ணாக மாற்ற எந்த ராமனும் வரமாண்டன் வந்தாலும் அவள் மாறமாண்டாள் என உணர்ந்து அவர் துறவியானார்.
"படர்வதற்குக் கொழுகொம்பற்றுத் தவிக்கும் மனசைத்தான் பார்த்தாள் அகலிகை" ஒரே வரியில் அகலிகையின் மனதை வெளிக்காட்டிவிட்டார். திரும்பத் திரும்ப அந்த வரியை தனக்குள் யோசித்துப்பார்க்க வைக்கின்றன. அதனால் தான் புதுமைப்பித்தன் ஒரு மாஸ்டர் என கா நா சு சொல்கிறாரோ?
சரத்: ராமாயணத்தில் வரும் அகலிகை சாப விமோசனம் பெற்ற புராணக்கதையைப் புதுமைப்பித்தன் நவீனக் காலத்தில், அக்கதையின் மீதான புதிய பார்வைக் கோணத்தைக் கொண்டு சிறுகதையாக்கியிருக்கிறார். ஒட்டு மொத்த ராமாயணமும் இக்கதையில் கோதமன்-அகலிகை வாழ்வின் இடையில் கடந்து சென்று இந்தக் கதையின் கேள்வியை உருவாக்குகிறது.
புராண அம்சத்துடன் யதார்த்த சிந்தனையும், வரலாற்றுப் பார்வையும் சேர்ந்து இக்கதை உருமாறி ஆழமான தாக்கத்தை உருவாக்குகிறது.
காமத்தினால் இந்திரன், கோதமன் வேடத்தில் அகலிகையுடன் கூடுவதால், சாபமிடப்பட்டு கல்லாகிக் கிடக்கிறாள். இளமையின் வேகத்தோடும், களங்கமின்மையோடும், அனுபவமின்மையோடும் ராமன் அகலிகையைத் தாயாக வணங்கி, அவளது உள்ளத்தூய்மையை உணர்த்துகிறான்.
அதன் பிறகான கணவன் மனைவிக்குமிடையே வாழ்வு எப்படியிருக்கிறது என்பதை யதார்த்தத்துடன் இழுத்துக் கட்டிப் போடுகிறார். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்புடன் இருந்தாலும், அகலிகையின் உள்ளத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட காயத்தின் வடு, அவளை இயல்பாக இருப்பதிலிருந்து ஒவ்வொரு கணமும் தடுக்கிறது. குடிலுக்கு வரும் அனைத்து ஆடவர்களுடனும் ஒவ்வொரு கணமும் எச்சரிக்கையோடு இருக்க வைக்கிறது. அவள் மறந்தாலும், மற்ற பெண்களது ஏளனப்பேச்சு அவளை வதைக்கிறது. கோதமனுக்கும் தான் கோபத்தால் செய்த தவற்றினை நினைத்து மனம் புழுங்குகிறது. ஆனால் தனது தவத்திற்கும், உண்மை விசாரத்திற்கும் அகலிகையுடனான பிணைப்பே அடிப்படை என்று நினைக்கிறார்.
வனவாசம் முடிந்து வரும் ராமனும், சீதையும் பட்டாபிஷேகத்திற்குப்பின், கோதமனது குடிலுக்கு வரும்போது, சீதை தன் வாழ்வில் நடந்தவற்றை அகலிகையிடம் சொல்கிறாள். அக்னியில் புகுந்து தான் குற்றமற்றவள் என்பதை நிருபித்தை சீதை சொல்லும் போது கோபம் கொள்கிறாள். ராமன் செய்ய சொன்னதால் செய்ததாக சொல்வதை கேட்டு, அவள் மிக உயர்வாக நினைத்திருந்தவனும் அகலிகையின் உள்ளத்தூய்மையை உணர்ந்திருந்தவனுமான ராமனின் மீதும் நம்பிக்கையிழக்கிறாள். உலகிற்கு நிருபித்தாக வேண்டியிருக்கிறது என்ற கோட்பாட்டை அகலிகையின் தன்மானம் ஏற்க மறுக்கிறது. தன் மனதிற்கு எது உண்மை என்று தெரிந்தால் போதாதா? உலகிற்கு நிரூபித்து விட்டு மனதில் பொய்யாக இருந்தால் உண்மை சுடாதா? என்ற கேள்வி அவளை மீண்டும் கல்லாக்குவதில் முடிகிறது. இந்த உலகின் மீது பெண் முற்றிலும் நம்பிக்கையிழக்கிறாள். இனி அகலிகையாக அவளால் தன் கணவனையும் தன்னை நெருங்க அனுமதிக்க முடியாது. பெண்ணின் மனதை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு ஆண் அல்லது ஆண் உருவாக்கிய சமூகம் இருக்காது என்பதின் உச்சமாக அது அமைகிறது. பெண்ணின் புற ஒழுக்கம் என்ற பாறையின் அடித்தளத்தின் மீது தான் இந்த சமூகம் கட்டமைக்கப்பட்டிருப்பதையும், அதை எதிர்க்கும் தன்மானம் கொண்ட பெண்ணின் அடக்கி வைக்கப்பட்ட கோபமாகவே அகலிகையின் வழியே புதுமைப்பித்தன் வெளிப்படுகிறார்.
பெண்ணின் தனி வாழ்வின் மீது சமூகம் ஏற்படுத்தும் அழுத்தங்களும், கட்டுப்பாடுகளும் எவ்வாறு பொது வாழ்வினை உருவாக்குகிறது அல்லது பொது வாழ்வின் நெறிகள் எவ்வாறு பெண்ணின் தனி வாழ்வினை பாதிக்கிறது என்ற பார்வையினை இந்தக்கதை ஒரு கண நேர வெளிச்சத்தில் பார்வைக்கு வைக்கிறது. இறுதியாக கோதமன் துறவியாக செல்லும் முடிவினை, இந்த சமூகத்தின் மாறாத இயங்கு திசையை அவர் உணர்ந்திருக்கிறார் அல்லது இனி அகலிகையை உயிருள்ள பெண்ணாக மாற்றக் கூடிய ஆற்றலில்லை என்பதாக வாசிக்கலாம்.
மரபின் புராணங்கள் என்பவை வெறும் கதைகளல்ல. அவை விழுமியங்களின் தொகைகள். அவற்றை மறு ஆக்கம் செய்வதன் வழியே நவீன காலத்திற்கான சிந்தனைகளை நோக்கிச் செல்ல, சமூகத்தை அழுத்தம் கொடுக்கும் மாபெரும் பணியின் முதல் படியை நம்காலத்தில் ஆசிரியர் ஆரம்பித்து வைத்திருப்பதை நாம் உணரலாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக