பால்வண்ணம் பிள்ளை - சிறுகதை விமர்சனம்
எழுத்தாளர்: புதுமைபித்தன்
காலம்: 1930~1940
எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:
புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர்.
சிறுகதை சுட்டி:
பிற விமர்சனம்:
https://kjashokkumar.blogspot.com/2020/05/blog-post_3.html
நந்தி இலக்கிய வட்டம் விமர்சனம்:
லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன் : அது என்ன பெயர், பால்வண்ணம் பிள்ளை? வெள்ளையுள்ளம் கொண்டவர்? வெள்ளந்தியானவர்? இருக்கலாம். ஆனால் பால் போல வண்ணம் மட்டும் கொண்ட ஆனால் அதற்கு மாறான குணம் கொண்டவர் எனவும் கொள்ளலாமா?
ஆம். பித்தன் குறிப்பிடுவது போல அவர் 'ஆபீஸில் பசு. வீட்டிலோ ஹிட்லர்'. தன் குணத்தை இடத்திற்கேற்றார் போல் மாற்றிக் கொள்பவர். ஆனால் ஏன்? இந்த கேள்விக்கான விடையாக கதையின் நிகழ்வுகளை அடுக்கிக் கொள்கிறேன்.
எள்ளலும், கேலியுமாக பெருகிச் செல்லும் பித்தனின் நடை இக்கதைக்கும் விதிவிலக்கல்ல. பால்வண்ணம் பிள்ளையில் வேலைச் சூழலை விவரிக்கும் ஆசிரியர், அங்கே தான் பெரும் 35 ரூபாய் கூலிக்காக அதட்டல்களையும், அதன் விளைவான பயத்தையும் அடக்கிக் கொண்டு வாழ்கைகையை நகர்த்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அடக்கப்பட்ட ஒன்று அழுத்தம் கொண்டு மற்றொரு பலவீனமான இடத்த்தில் வெளிப்பட்டாக வேண்டும் என்பது இயற்பியலில் மட்டுமே செல்லுபடியாகக் கூடிய விதியென்று நாம் குறுக்கிவிட முடியாது.
அலுவலகத்தில் அடக்கிக் கொண்ட அழுத்தம் மிக இயல்பாய் பலவீனமான அவர் குடும்பத்தில் - மனைவி, பிள்ளைகளின் மேல் பாய்கிறது. இது போதாதென்று பிள்ளைக்கு இருக்கும் இன்னொரு விசேஷ குணத்தையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆதாவது, பிள்ளை பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதும், அக்கொள்கையை எப்போதும் மாற்றிக் கொள்ளாத பிடிவாதமும். நிச்சயம் இந்த குணம் அலுவலகச் சூழலில் வெற்றி பெறப் போவதில்லை. அதற்கு சாட்சியாக 'மெக்சிகோ' எங்கிருக்கிறது என அவருக்கும் சகதொழிளாலிக்கும் உருவாகும் போட்டியில் அவர் மூக்குடைபடுகிறது.
அதே வேளையில் தான் அவர் மனைவி, ஒரு பசுவிருந்தால் பிள்ளைகளுக்கான பால் பற்றிய கவலையும், அதன் உடல் பலவீனமும் நீங்கும் என்ற கோரிக்கையை பிள்ளையிடம் முன்வைக்கிறார். பால்வண்ணம் பிள்ளை இயல்பாக எதிர் தரப்பெடுத்து அந்த கோரிக்கையை நிராகரிக்கிறார். ஆனால் அவரை மீறி மாடும், கன்றும் வீட்டிற்கு வருகிறது. மேலும் அவர் சொல்லியது போலின்றி குழந்தைகளுக்கான பால் போக மீதமுள்ள பாலை விற்று பணமும் ஈட்டுகிறார் அவர் மனைவி. எவ்வளவு பெரிய அவமானம் பிள்ளைக்கு! தான் நஷ்டமடைந்தாலும், பிள்ளைகள் துயரடைந்தாலும் என்ன? தன் கொள்கையில் உறுதியாய் நிற்கும் பிள்ளை பாதி விலைக்கு மாட்டை விற்றுவிடுகிறார்.
இக்கதையின் வழியே யார் வாழ்வைக் காட்ட நினைத்தார் பித்தன்? அவர் காட்ட விழைந்தது அச்சூழலில் குரலற்று பொறுப்புகளையும், உடன் குழந்தைகளையும் சுமந்து கொண்டிருந்த பெண்களின் நிலை. பிள்ளையின் மனைவிக்கு சிறு இடமே கதையில் அளிக்கப்பட்டிருந்தாலும், அவர் பாத்திரத்தின் அழுத்தத்தால் இயல்பாக கதையின் மையத்தையடைகிறது. அக்காலச் சூழலில் எத்தனை அழுத்தத்திற்கும் மத்தியில், வேலையில் தாக்குப் பிடித்தால் மட்டும் போதும் என இருந்த ஆண்களுக்கு வடிகால்களாய் இருந்த, குடும்ப பாரத்தை முழுதும் தாங்கி, இற்றுப் போன பெண்களின் கதையாகவே நான் இதைப் பார்க்கிறேன்.
இந்தக் கதையில் அவர் மனைவிக்கு குரலில்லை. ஒருவேளை அச்சூழலில் பெண்களுக்கு இல்லாத குரலை கதையில் மட்டும் கொடுப்பது எவ்விதம் சரி என நினைத்து விட்டுவிட்டாரா பித்தன்?
மகேந்திரன் : பால்வண்ணப் பிள்ளை பிளவுபட்ட ஆளுமையாக இருக்கிறார். அலுவலகத்தில் பசு, வீட்டில் ஹிட்லர். அவரது பிரச்சனை பூலோகம் பற்றியது. ஆனால் அவர் மனைவிக்கோ குழந்தைக்குப் பால் வாங்க வேண்டிய கட்டாயம். குழந்தைக்குப் பால் இல்லாதது பிரச்சனை இல்லை ஆனால் மெக்சிகோ தென் அமெரிக்காவில் இருந்தாக வேண்டும். ஏனென்றால் அவர் (நான்) அப்படிச் சொல்லிவிட்டேன். நான் தவறாக முடியுமா?
அவருக்கு அப்படியான எண்ணம் ஏன் வருகிறது? மனத்துக்குள் தன்னை ஒரு பெரிய ஆளுமையாக நினைத்துக்கொள்பவர்கள், வெளியே சமூக நிலை காரணமாக அப்படியே வெளிப்பட முடியாது. அடைக்கப்பட்ட அந்த ஆளுமை ஒவ்வொரு முறையும் தன் இடம் இது ஆனால் கொடுக்கப்பட்டது இவ்வளவுதான் என அளந்துகொண்டிருக்கும். பெரிய அதிகார மையத்திலிருந்து ஒருவர் சிறுமை செய்தால் வேறு வழியில்லாமல் சகித்துக்கொள்வார்கள். ஆனால் அதுவே தனக்கு இணையான அல்லது கீழ் உள்ளவர்கள் என்றால் சொல்ல வேண்டியதே இல்லை. அப்படி ஒருவர் அவர்களை மறுத்தால், அது அவர்களை இல்லை என்று சொல்வதற்குச் சமமாக எண்ணுவார்கள்.
அவரால் மெக்சிகோவைத் தென் அமெரிக்காவுக்கு நகர்த்த முடியாது. அப்படியானால் அவரது ஆளுமை சோதிக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டதாகக் கருதப்படும். நான் எவ்வளவு பெரிய ஆளுமை இவர்கள் என்னை சிறுமை படுத்திவிட்டார்களே என மனம் பொருமுவார்கள். ஆனால் அதே சமயம் தன் மனைவி அப்படிச் செய்தால்? மனைவி கணவனுக்கு அடங்கிக் கிடக்க வேண்டியவள்தானே என நினைக்கிறார். அவள் சொல்வது உண்மையாக இருந்தாலும் அவள் சொன்னதாலேயே அதனை அவர் நிராகரிக்கிறார். அப்படிச் சொல்வதை ஏற்றுக்கொண்டால் என்ன ஆவது? அதுமட்டும் இல்லாமல் அவர் பசு வாங்குவதை முன்னாலேயே மறுத்துவிடுகிறார். அதையும் மீறி மனைவி பசுவை வாங்கினால். எழுபது ரூபாய் பெறுமானம் உள்ள பசு, முப்பது ரூபாய்க்கு விற்கப்படும். அதுகூட பரவாயில்லை. தான் பெற்ற பிள்ளை பால் இல்லாமல் கஷ்டப்படும் என்பது கூட கவலையில்லாதவராய் இருக்கிறார். அப்படி அவர் என்னதான் அடையவிரும்புகிறார்?
அகங்காரத்தை. நான் என்ற அகங்காரத்தை. நம் எல்லோருக்குள்ளும் இதே போன்று ஒரு சந்தர்ப்பம் வெளிப்படும். நான் நினைக்கும் ஆளுமைக்கும் வெளியே கொடுக்கப்படும் மதிப்புக்கும் இடையே வித்தியாசம் வரும்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதுதான் பால்வண்ணம் பிள்ளை. நம் எல்லோரிலும் பால் வண்ணப் பிள்ளை இருக்கிறார். அவ்வப்போது கண்டுகொள்ளக் கண்களை விரித்து இருந்தால் போதும்.
%20(1).jpg)
கருத்துகள்
கருத்துரையிடுக