அழியாச்சுடர் - சிறுகதை குறிப்பு

எழுத்தாளர்: மெளனி. காலம்: 1937

எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:

மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) தமிழில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்.மணிக்கொடி இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுபவர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் கட்டற்றட தன்மையை பூடகமான மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர்.

சிறுகதை சுட்டி:

"https://azhiyasudargal.blogspot.com/2008/09/blog-post_15.html" target="_blank" rel="nofollow">

விமர்சனம்:

https://solvanam.com/2016/03/06/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F-2/

https://vallinam.com.my/version2/?p=9807

நந்தி இலக்கிய வட்டம் குறிப்பு:

             விமர்சகர் 01: மகேந்திரன்:  ஜெயமோகன் தன் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் மெளனி கதைகளை இப்படி வரையறுக்கிறார்.

“ மெளனியின் சிறிய புறவுலகிலிலிருந்து விதையிலிருந்து முளைபோல அவரது பகற்கனவின் உலகம் எழுகிறது. அவரது இலக்கிய, தத்துவ வாசிப்பு மற்றும் இசைஞானத்துடன் தொடர்பு கொண்டு வளர்கிறது.”

“அப்பகற்கனவுகளில் அவன் வாழும் நிஜ உலகமும் அவன் கற்ற கற்பனை உலகும் முயங்கும் போது ஓரு தனி உலகம் உருவாகிறது. அதுதான் மெளனியின் படைப்புகள் காட்டும் உலகம்.”

“மெளனி கதைகளின் புறவுலகம் கற்பனை மூலம் விரித்தெடுக்கப்படலாம். அது நம் சூழலில் போதிய அளவில் செய்யப்படவில்லை என்பதே மெளனி படைப்புகள்மீது தேங்கியுள்ள புகைமூட்டத்துக்கு முக்கியமான காரணம்”

“இனம்புரியாத ஒரு பிரமிப்பு நிலையை அல்லது துக்கத்தை வகுத்துச் சொல்லமுடியாது தவிப்பது மட்டும்தான். மீண்டும் மீண்டும் இதை அவர் கதைகளில் காணலாம். உதிரிச்சொற்கள், உடைந்த சொற்றொடர்கள், தத்துவார்த்தமான சில வரிகள் மற்றும் படிமங்கள் மூலம் மெளனி அந்த மன எழுச்சியை சொல்ல முனைகிறார். அந்த தவிப்பின் சில தருணங்களை அவரால் நமக்கு தந்துவிடமுடிகிறது என்பதனாலேயே அவரது ஆக்கங்கள் முக்கியத்துவம் கொள்கின்றன. மெளனியின் கதைகளில் உள்ள ஒட்டு மொத்த முயற்சியே இதுதான் என்று சொல்லலாம்.”

“கற்கனவுகளின் ஒன்றோடொன்று ஏறிமுயங்கிச்செல்லும் பிம்பங்கள் மற்றும் முரண்பாடுகளினூடாகச் செல்லும் சலனகதி ஆகியவற்றை அவரது பலவீனமான மொழிப்பயிற்சி எதிர்கொள்ளமுடியாமல் போகும்போது உருவாகும் சிக்கலும் தயக்கங்களும் மீறல்களும்தான் அதன் தெளிவற்ற தன்மையை உருவாக்குகின்றன”

“தன்னிரக்கம் முற்றிய நிலையில் அர்த்தமற்ற அரற்றலாக மனம் விரிந்து பரவி செல்வதை சொல்லும் இடத்திலேயே மெளனியின் கலை அதன் உச்சத்தைக் கொள்கிறது” “

கதையைப் படிக்கும் போது நமக்கு உருவாகும் ஒரு எண்ணம் என்பது ஏக்கம்.

எப்போதோ பார்த்த பெண்ணை மறுபடியும் அதே கோவிலில் பார்க்க நேர்க்கிறது. தான் காதல் கொண்ட பெண் அவள். இப்போது அவளை அடைய முடியாமல் தவிக்கும் சித்திரம் தான் இந்தக் கதை. இந்த வதையை அற்புதமாக வாசகனின் மனதில் கடத்திவிட்டதாலே இது முக்கியமான கதை ஆகிறது. இனிமேல் அது எப்படி கடத்தப்பட்டது எனப் பார்க்கலாம்.

படிமம்:

மரம்: ஆகாயத்தை நோக்கி தலையை விரித்துப் போட்டு கைகளை நீட்டி துளவும் ஒன்று.

“ஆகாயத்தில் இல்லாத பொருளைக் கண்மூடிக் கை விரித்துத் தேடத் துழாவுவதைப் பார்த்தாயா?”

இல்லாத ஒன்றுக்கு ஏங்குவது. இல்லை என்று தெரிந்தும் அதனைவிடாமல் முயற்சிப்பது. இது அந்த மரத்திற்க்கும் பொருந்தும் அவரது நண்பருக்கும் பொருந்தும். மரத்தின் தனிமை, அதன் தோற்றம் ஒருவகையில் தன் நிலையை அந்த மரம் அவரது நண்பருக்கு ஞாபகப்படுத்துகிறது போலும். காதல் முகந்த மேகம் மரத்தின் மேலே வந்து தங்கும் ஆனால் அது தாங்காது தளர்ந்து ஆடும். பிறகு ஏங்கி நிற்க்கும்.

கோவில்: இருட்டுக்குள் இருக்கும் சிறுது வெளிச்சம்.

“ஆழ்ந்த அனுபவத்திலும் அந்தரங்கத்திலும் மௌனமாகக் கொள்ளும் கூடமான பேரின்ப உணர்ச்சியை வளர்க்கச் சிறப்பித்ததுதானா கோவில்?”

மனதின் ஆழத்தில் இருக்கும் இன்பத்தை தோண்டிப்பார்க்கும் ரகசிய இடம். அங்கு சென்றால்தான் காதலிகளைச் சந்திக்க முடியும். நெருங்கிச் சென்று தன் காதலைச் சொல்லலாம். ஆனால் அதற்க்கு மேலே தொடர முடியாமல் பின்வாங்கி விடுவது. அபப்டி அந்த இடத்தை நினைத்தாலே அந்த வகையான உணர்ச்சிகள் மனதில் எழுந்து பொங்கி வருவது போல ஆக்கிவிடுவது.

அப்படியானால் மரமும், கோவிலும் கதை சொல்லியான அந்த நண்பனின் மனதைச் சொல்லவந்த உருவகங்களே.

கதையின் மொழி:

“ஒரு பைத்தியத்தின் பகற்கனாவில் பாதி சொல்லிவிட்டு மறைவது போல அவள் பார்வை என்னை விட்டு அகன்றது.”

“காதில் சிரித்து மனத்தில் மரண பயத்தைக் கொடுக்கும் சப்தம்.”

பைத்தியம் என்றாலே தர்க்கம் இல்லாது இருத்தல் தான். கனவு என்பதே தர்க்கத்திற்கு எதிரானதுதான். அப்படி பைத்தியம் காணும் பகற்கனவு என்றால்? அதிலும் பாதி சொல்லிவிட்டுப் போனால் என்ன புரியும்? இப்படி வேண்டுமானால் சொல்லலாம். பைத்திய உளறலின் உச்சத்தின் பாதியைக் கேட்டவனுக்கு என்ன புரியும்? அப்படி இருக்குறது அவளது பார்வை. என்னைப் பார்க்கிறாள் என்ற பரவசமும் இல்லையோ என்கின்ற பயமும் கலந்து உருவான உணர்வு. அந்த உணர்வை இந்த வாக்கியத்தில் வாசகனுக்கு கடத்துகிறார்.

இந்த உணர்வையே வேறு வார்த்தைகளில் சொல்கிறார். அவளது உணர்ச்சிகள் சிரிப்பாக காதில் வந்து அடைகின்றன. ஆனால் அது மனதிற்க்கு பயத்தை கொடுக்கிறது.

கதையைப் பற்றி: 

காதல் கொள்ள ஆசைப்படும் ஒர் இளைஞன், அதனை ஒரு பகற்கனவாக மாற்றிக்கொள்கிறான். காதலியுடன் சேர்ந்து வாழ்வதைவிட அதற்கு முந்தைய காதலைச் சொல்ல முயலும் தருணமே ஒரு கிளுகிளுப்பை தருவதாக இருக்கிறது. ஒருவேளை சொல்லிவிட்டால் அந்த கிளுகிளுப்பு இல்லாமல் ஆகிவிடும். கதை சொல்லிக்கு அந்த கிளுகிளுப்பே போதுமானதாக உள்ளது. இதனை ஒரு முதிரா இளைஞனின் பகற்கனவுக் காதல் என எளிதாக கடந்து செல்லலாம். இல்லை அந்த உலகில் சென்று வாழ்ந்து பார்க்கலாம். இந்த கதையின் மூலம் அடைவது என்பது அந்த முதிரா இளைஞனின் தவிப்பை. அது உருவகம் மற்றும் மொழியின் மூலம் சாத்தியப்பட்டிருக்கிறது.

அதனைத் தாண்டி இதனை சிறுகதையின் செவ்வியல் வடிவத்துடனோ அல்லது கதை உருவாக்கும் வாசக இடைவெளிக்காகவோ இது முக்கியத்துவம் பெறாது என்பதே என் கருத்து.

            

விமர்சகர் 02:   சரத் 

இக்கதையில் கதை சொல்லி தன் நண்பனை சந்திக்க செல்வதையும், அன்று முழுவதும் வெளியில் செல்லாமல் ஒரே நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த நண்பன் அவனது கதையை சொல்வதுமாக அமைந்திருக்கிறது.

தனது 18 வயதில் கோயிலில் திடீரென சந்திக்கும் 13 வயது பெண்ணின் மீது உருவாகும் இனம் புரியாத ஈர்ப்பு, அவனை அந்த பெண்ணை பின் தொடர செய்து, அவளிடம் “உனக்காக எது வேண்டுமானாலும் செய்வேன்” என சொல்வதோடு “என்னால் எல்லாம் செய்ய முடியும்” என்றும் சொல்கிறான்.

அந்த ஒரு சந்திப்புடன் அடிக்கடி சென்று வந்த கோயிலுக்கு செல்வதை ஒன்பது வருடங்களாக தவிர்க்கிறான்.

அந்த ஒரு கண சந்திப்பையும், அவளுக்காக சரணடைய முடிவெடுத்ததையும் எவ்வாறு புரிந்து கொள்வது என்ற தவிப்பும், அதை துழாவி செல்வதுமே கதையாகி இருக்கிறது.

அதனை காதல் என்று குறுக்கி விட வேண்டாம் என்று ஆசிரியரே சொல்லி விடுகிறார். முதிரா பருவத்தில் உருவாகும் பாலியல் கிளர்ச்சி என்று மட்டுமே கொண்டு விட்டால் கதை அப்படியே முடிந்து விடுகிறது. ஆனால் ஆசிரியர் அதனை ஒரு ஆதி உணர்ச்சியாக, குறிப்புகளை கொண்டு கவித்துவம் நிரம்பிய வார்த்தைகலெனும் மென் தூரிகையினை கொண்டு தீட்டி தன்னுள் ஆழ்ந்து செல்கிறார்.

முதன் முதலில் அவளை கைகூப்பி சாமி கும்பிடும் போது பார்ப்பவருக்கு, இரு கைகளுக்கும் இடையே தெரியும் ஒளியில் கருவறையில் இருக்கும் ஈசனைக் கடந்து இன்பமயமாக இருக்கும் உணர்வினை அடைவதாக சொல்கிறார். ஒன்பது வருடம் கடந்து பல பாவனைகள் கலந்து உருமாறியிருக்கிறார்கள் இருவரும். அவள் கடவுளின் முன் தன் பாவனைகள் அனைத்தும் கலைந்து தியானத்தில் இருக்கும் நேரத்தில், முன்பு உருவாகும் அதே உன்னத உணர்வு அவனுள் எழுவதை, ஒரு அசாதாரண உணர்வாகவே கடத்துகிறார்.

அவரது தேடலே அப்பெண்ணின் பாவனைகளை கலைந்து அவருள் இருந்து அவர் சரணடைய விரும்பும், இன்பமயமாகும் அவளை கண்டடைகிறது என்று குறிப்பிடலாம்.

இத்தனை வருடம் கழித்தும் அவள் நினைவில் இவனுடைய நினைவுகளும் வாக்கும் நினைவில் இருப்பதை அல்லது அவனால் அவளை கண்டு கொள்ள முடிவதையும் யதார்த்ததிலிருந்து சற்று மேலெழுந்தே வாசிக்க வேண்டும் என நினைக்கிறேன். யதார்த்தித்திற்குள் செல்லும் தோறும் இந்த உணர்வுகள் எளிமையானவையாக தோன்றி விடுகின்றன.

இலைகளற்று காற்றில் ஆடி, வானை துழாவும் மரம் மற்றும் காதல் சுமந்த மேகங்கள் என்ற படிமம் இக்கதையின் மைய உணர்வோடு கொள்ளும் பிணைப்பு ஆழமானதாக உருவாகியிருக்கிறது.

மறுநாள் காலையில் அவன் வீட்டில் அவன் இல்லாதிருப்பதுடன் கதை முடிகிறது. அவன் சென்று சேர்ந்த இடத்தை வாசகர்களுக்கு விட்டு விடுகிறார்.

உள்ளுணர்வினால் உருவாகும் பெண்ணின் மீதான பரவசத்தின்/ஈர்ப்பின்/முற்று ஒப்படைத்தலின் ஆதி மூலத்தை தேடி செல்லும் தவிப்பை, ஆசிரியரின் தேடலாக வாசிக்கக் கூடிய நல்ல கதை என்றே கருதுகிறேன்.

கருத்துகள்

விருப்பமான பதிவுகள்

கயிற்றரவு - சிறுகதை விமர்சனம்

ஒருநாள்கழிந்தது - சிறுகதை விமர்சனம்

குளத்தங்கரை அரசமரம் - சிறுகதை விமர்சனம்