மாறுதல் - சிறுகதை விமர்சனம்
எழுத்தாளர்: மெளனி
காலம்: 1937
எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:
மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) தமிழில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்.மணிக்கொடி இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுபவர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் கட்டற்றட தன்மையை பூடகமான மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர்.
சிறுகதை சுட்டி:
பிற விமர்சனம்:
நந்தி இலக்கிய வட்டம் குறிப்பு:
கோ வீரராகவன்: மனைவியின் மரணத்தில் தொடங்குகிறது மாறுதல் என்னும் சிறுகதை. மனைவியின் இறப்பிற்கு பிறகு நடக்கும் நிகழ்வுகளினூடாக அந்த மரணத்தால் பாதிக்கப்படும் கணவனின் அகத்தை விளக்குவதாக கதை செல்கிறது. புறம் நம்முடைய அகத்தை உருவாக்குகிறது. நம் அகம் அந்த புரிதல்களினூடாக புறத்தை வடிவமைக்கிறது. மனைவியின் இறப்பை உறவினர்களுக்கு தந்தி மூலம் அறிவித்துவிட்டு இரவுமுழுதும் மனைவியின் உடலுடன் இரவை கழிக்கிறான் கதைசொல்லி. இறந்த மனைவியை பகற்கனவாக காணும் கணவனின் பார்வையில் கதை மேலும் விரிகிறது. சிறுகதையின் கட்டமைப்பில் இல்லாவிட்டாலும் மொழியின் வசீகரம் கதையை வெகுவாக முன்னகர்த்துகிறது. கதையில் ஒரு முக்கியமான பாத்திரமாக தெருவும் அவற்றில் உலாவும் மனிதர்களும் வருவது மௌனியின் பார்வையில் அவருடைய அகவுலகு விரிகிறது. இருமகன்களை இளவயதிலேயே விபத்துக்கு பறிகொடுத்த மௌனியின் அகவுலகு இருத்தலியல் சார்ந்தும் பொருண்மை சார்ந்தும் வெளிப்படுகிறது. இவ்வளவு விளக்கியபிறகும் கதையில் தேடிப்பார்த்தால் கதைசொல்லியின் அகமொழி என ஒன்று இல்லை, புறத்தை விவரிப்பதன்மூலம் அகத்தை நமக்கு காட்டுகிறார் கதையாசிரியர். கதைசொல்லி இறுதியில் தன் தலையெழுத்தை மாற்றியெழுதுவதோடு கதை முடிகிறது.
துக்கத்தை இதுவென்று பகுத்தும் வகுத்தும் கூறமுடியாமல் உள்ளிருந்து வராமலிருக்கும் சொற்களை இங்குமங்குமென கூறி கதையை நகர்த்துவதே இந்த கதைக்கு முற்றிலும் ஒரு புதிய கோணத்தை தந்துவிடுகிறது. இந்த புதிய கோணமே சிறுகதையை மற்றொரு தளத்திற்கு கொண்டுசெல்கிறது.
இந்த கதையில் மொழியின் வீச்சை உணரமுடியவில்லை. இந்த விமர்சனத்தை பாதி எழுதிய பிறகு ஜெயமோகனின் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் மௌனி பற்றிய குறிப்புகளை வாசிக்கும்போதே மௌனி தமிழை அக்கால முறைப்படி கற்கவில்லை என்பது புரிந்தது. மொழி அவருக்கு பெரும்தடை என கருதியிருக்கிறார். தகுந்த சொற்களில்லாமல் தவித்திருக்கிறார். அவருடைய அகவோட்டம் சரியான மொழியில் வெளிப்பட முடியாமல் தவித்திருக்கிறது.
ஆனாலும் அவருடைய சிறுகதைகள் முக்கியமானவை, ஏனெனில் அவை வெளிவந்த சூழலில் பெரும் பாய்ச்சலை உருவாக்கி கதையை முற்றிலும் அகவோட்டத்திற்கான வெளிப்பாட்டுமுறை என பிற இந்திய மொழி கதைகளுக்கு முன்னரே அடைந்துவிட்டன. இதுவே இந்த கதையின் பலமும் பலவீனமும்.
சரத்: மனைவியின் இறப்பை கடந்து செல்லும் ஒரு ஆணின் கதை இது. மனைவியின் இறப்பை என்று அல்ல, ஒவ்வொரு இறப்பையும் நாம் கடந்து தான் செல்கிறோம். அவ்வாறு செல்லாவிட்டால் வாழ்வு என்பதில்லை. நெருங்கிய உறவுகளின் இறப்புகள் தான் நமக்கு பெரிய பாதிப்பை உருவாக்கி, இழப்புணர்வை தீவிரமாக உணரச் செய்கின்றன.
அவ்வாறு மிக நெருங்கிய உறவான மனைவியின் மரணத்தை, எதிர் கொண்டாக வேண்டிய சூழலில் பெயரற்ற கதை சொல்லி, அவள் நினைவுகளுடன் போராடுகிறார். கண்கள் முழுவதும் நிறைந்திருக்கும் அவள் உருவத்தை மீறி வெளியே இருக்கும் வீதியும் அதன் காட்சிகளும் அவரது மனதை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொள்கிறது.
இயற்கையின் அக்காட்சிகளை எந்தவொரு மனிதனும் தவிர்க்க முடியாத யதார்த்தம் அல்லவா..? ஆனால் துயரம் தோய்ந்த அவரது மனதின் பாரத்தை அவை உடனே ஏந்திக் கொண்டு விடுகின்றன. வடக்கத்தியான் சவுக்கு கட்டைகளை ஏற்றி செல்லும் மாட்டு வண்டியில் கட்டப்பட்டிருக்கும் மாடுகளை தனது தற்போதைய நிலையுடன் பிணைத்து கொள்கிறான். அப்படியென்றால் பாரம் சுமக்கும் வண்டியை ஓட்டிக் கொண்டு வருபவன் யார் என்ற கேள்வியும் அவருள் எழுகிறது.
அடுத்தாக அவர் காணும் பதநீர் பானைகளை குச்சியில் கட்டி சுமப்பவனின் காட்சி. அதில் காலியாக இருக்கும் பானையின் சமநிலை பெறுவதற்கான காரண அவசியம். இந்த காட்சிகளின் வழியே தத்துவார்த்தமான சில தொடுகைகளை தொட்டு அப்படியே வெளியேறி விடுகிறார்.
அதன் பின் புது பணக்கார உடை பாவனைகளுடன் வரும் சிங்கப்பூர் காரரை கண்டு புன்னகைத்துக் கொள்வது, நிரந்தரமற்றவைகளை காண்பது போல் அமைந்துள்ளது.
இத்தனை காட்சிக்கும் இடையில் இறந்த மனைவியின் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கு செல்வதை அவர் உணர்கிறார். அவ்வளவு எளிதாக தன்னால் மனைவியின் நினைவிலிருந்து விடுபட முடியும் குற்ற உணர்வு அவரை கதறி அழ வைக்கிறது.
உறவுகளின் வருகையும் இறப்பு சடங்குகளுமாக மீத நாள் கழிகிறது. ஒரு வருடம் கழித்து நடக்கும் சுமங்கலி பூஜையில் மாமியார் மருமகளை நினைத்து அழுவதாக காலம் கடந்து விட்ட துக்கமாக நினைவில் கொள்ளப்படுகிறது. கதை சொல்லிக்கு அந்த துக்கத்தை நினைத்து அழுவதோ, அந்த மன நிலையினை திரும்பி பார்க்க விருப்பமோ கூட இல்லை. அதனால் தான் அந்த மனமெனும் வீதியை பார்ப்பதை கூட தவிர்த்து விடுகிறான். மரத்தின் மேலிருந்து மறையும் மேகத்தை போல அவனில் இருந்து அவள் நினைவுகள் அகன்று விடுகின்றன.
ஆண் பெண் உறவினை களமாக கொண்ட மௌனி, சில கதைகளில் அந்த உறவினை உன்னதமாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அதற்கு நேர் எதிராக எந்த மிகை உணர்ச்சிகளும் ததும்பி விடாமல், மனைவியின் இழப்பை மிக விரைவாக கடந்து விடும் யதார்த்தத்தை திரை கிழித்து முன்னிறுத்தவே இக்கதை செய்கிறது. அவரது கதையில் குறிப்பிட்ட காலத்தில் உருவாகியிருக்கும் மாற்றம் அவரை காவியக் காதல் என்ற இடத்தில் இருந்து நவீனத்துவத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.
இறப்பிலிருந்து வெளிவந்து இங்கு வாழவே மனிதனை வழி நடத்தும் ஆதி உணர்வு அவனை வழி நடத்துகிறது. கதறி துடித்து பிரிவின் துன்பத்தில் உழல்வதை காவியமாக்கிய கற்பனாவாத மரபின் வழியிலிருந்து, இயல்பாக மரணத்தின் இழப்பிலிருந்து வெளி வருவதை சொல்லியிருப்பது ஒரு முக்கிய பார்வை நகர்வு என்றே நினைக்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக