பிரபஞ்ச கானம் - சிறுகதை விமர்சனம்
எழுத்தாளர்: மெளனி
காலம்: 1936
எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:
மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) தமிழில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்.மணிக்கொடி இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுபவர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் கட்டற்றட தன்மையை பூடகமான மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர்.
சிறுகதை சுட்டி:
விமர்சனம்:
நந்தி இலக்கிய வட்டம் குறிப்பு:
மகேந்திரன் : “மெளனியின் பெண்கதாபாத்திரங்கள் பூஞ்சையான ஆண்மகனின் பகற்கனவில் உள்ள பெண்கள். ‘ பயங்கர வசீகரம் ‘ என மெளனி அவர்களைப்பற்றி சொல்லும்போது அடிக்கடி குறிப்பிடுகிறார். அவரது பெண்களுக்கு மண்ணில் கால்கள் பதிவதேயில்லை. ஒரு உக்கிர்மான பாடலை பாடி அப்படியே செத்துவிடுபவர்கள்” *
தன் இயல்பே சங்கீதமாக இருக்கிறது அவரது காதலிக்கு. ஆனால் அவளது உடல் நிலை கருதி மருத்துவர் அவளைப் பாட வேண்டாம் என்கிறார். பிரபஞ்சமே அதனாலே ஏதோ குறைபட்டுப் போனது. கல்யாணமாகி அவனது கணவன் கேட்க்கும் போது மறுக்க முடியாமல் பாடி, அவள் இறந்து போகிறாள். பிரபஞ்சம் பூரணமடைந்துவிடுகிறது.
உண்மையிலேயே ஒரு மனிதனின் உண்மையான குணம் வெளிப்படாமல் போனால் இந்த பிரபஞ்சம் குறைபட்டுவிடுமா? இல்லை. ஆனால் காதலனின் பார்வையில் அப்படி இருக்கிறது என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். அப்படி அடக்கி வைத்த அந்த சங்கீதம், சங்கீதம் மட்டுமில்லை. அவளது ஆசை, அன்பு என நீட்டிக்கொண்டே போகலாம். அது வெளிப்பட்டதும் காதலன் அதுவரைக்கும் கிட்டாது கிடந்த ஒன்று கிடைத்துவிட்டது. காதல் தான் அது.
காதலி இல்லாமல் போனால் என்ன? அவளது காதல் இருக்கிறதே. இங்கு காதல் காதலியிடமிருந்து பிரிந்துவிடுகிறது. அப்படிப் பிரிந்த காதல் உன்னதமானதாக மாறுகிறது. அவள் ஏற்கனவே கல்யாணம் ஆனவள் அதுவும் இல்லாமல் இறந்தும் போகிறாள். எப்படியும் தனக்குக் கிடைக்கப் போவது இல்லை. அதனால் காதல் மட்டும் கிடைத்தால் போதும் என நினைக்கிறான். அப்படி ஏங்கும் அவனுக்கு அது கிடைத்துவிட்டது. அவனைப் பொறுத்தவரை அவனது பிரபஞ்சம் நிறைவடைந்துவிட்டது. இந்தப் பித்தை காதலிப்பவன் என்ற முறையிலே உணர்ந்து கொள்ள முடியும். மற்றவர்களுக்கு இது எந்த பொருளை அளிக்கும் எனத் தெரியவில்லை. அதனால்தான் பின்வருமாறு ஜெயமோகன் வரையறுக்கிறார்.
“தன்னிரக்கம் முற்றிய நிலையில் அர்த்தமற்ற அரற்றலாக மனம் விரிந்து பரவி செல்வதை சொல்லும் இடத்திலேயே மெளனியின் கலை அதன் உச்சத்தைக் கொள்கிறது”*
*ஜெயமோகனின் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை.
சரத்: கதையில் கதை சொல்லி தன் வாழ்வில் மூன்று வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வை எண்ணி பார்க்கிறான். அவன் வசித்த வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்த பெண் அவளது கல்யாணத்தின் மூன்றாம் நாளில் பாடும் போது உயிரிழக்கிறாள். அவளுள் நிறைந்திருந்த சங்கீதம் இயற்கை வெளியில் கலக்கிறது என்பதாக முடிகிறது.
இக்கதையின் மொழியே முதன்மையாக வசீகரிப்பதாக இருக்கிறது. எழுத்தாளர் விவரிக்கும் சில புறவர்ணனைகள் கவித்துவம் நிரம்பியிருக்கிறது. அந்த தெருவின் குறுகிய வீதிகளும் அதில் நீண்டு இருண்ட வாயுடன் அந்தியில் தெரியும் வீடுகளும் இருக்கும் சூழல் நம்முள் பதிந்து விடுகிறது. எண்ண ஓட்டத்தை விளக்க முற்படும் இடங்களில் எல்லாம் உரைநடையை விட்டு மொழி மேலெழுகிறது.
அதிகாலையும் இரவும் சொல்லப்பட்டாலும் கதைக்கான பொழுதாக அந்தியே இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. மயக்கம் தருவதும் அபாயகரமான ஏதோவொன்றிற்கு சற்று முன்னாள் இருப்பதுமான ஒரு உணர்வை மௌனியின் இந்த கதையில் அந்தி கொண்டு விடுகிறது. ஒரு பொழுது இந்த உணர்வுகளை கடத்திவிடுவது சிறப்பானதாக இருக்கிறது.
ஒரு பெண் தன் இசையால், பாடலால் முழுவதும் நிறைந்திருப்பதும், அவளுள் நிரம்பியிருக்கும் கலையின் ஆற்றலை அவன் அறிந்து கொள்வதும் நிகழ்கிறது. ஆனால் அவளது உடல்நிலை அவளது பாடலை வெளிப்படுத்த தடையாக இருக்கிறது. அதை மீறி அவள் ஒரு கணத்தில் தன்னை வெளிப்படுத்தி அபூர்வமான பாடலால் பிரபஞ்சத்தை நிறைக்கிறாள். அது நிகழ்ந்த பின்பு அவள் அதே இடத்தில் மரணிக்கிறாள்.
இசையும் பாடலும் மிகவும் உயர்ந்த தரத்தில் வெளிப்பட்டு, அவள் அங்கு பூரணமடைகிறாள் என்பது கதையை உச்சமடைய செய்யும் இடமாக இருந்திருக்கும். இக்கதையில் அப்பெண்ணும் அவளது கலையும் அதன் வெளிப்பாடும் மட்டும் பிரதானமாக அமைந்திருந்தால் கதை அடையும் ஆன்மீக உச்சம் முதன்மை பெற்றிருக்கும்.
ஆனால் இங்கு கதை சொல்லிக்கும் அப்பெண்ணுக்குமான பார்வை பரிமாற்றங்களும், அவள் கடைசியில் பாட முடிவெடுக்கும் முன், ஓரமாக அமர்ந்திருக்கும் இவனைப் பார்த்து முடிவெடுப்பதுமாக அந்த உயரிய நிகழ்வு ஆண் பெண் என்னும் தளத்திற்கு கொண்டு வரப்பட்டு விடுகிறது. அப்பெண் இவன் மீது கொண்டுள்ள வெளிப்படுத்தாத ஒரு பிரியத்தின் வெளிப்பாடாக அவளது இறுதி நிகழ்வு நடைபெறுகிறது.
இது ஆசிரியரில் வெளிப்படக்கூடிய சொந்த பார்வைக் கோணம் என்ற அளவிலேயே கொள்ள முடிகிறது. சிறகு விரித்து எழுந்து வானளக்கும் பறவையை பிடித்து வந்து நடை பழக செய்வது போல் அல்லது அதன் சிறகுகளுக்கு வலுவின்றி இருப்பது போல் அமைந்து விடுகிறது இக்கதை.

கருத்துகள்
கருத்துரையிடுக